திருமணமான 3 மாதத்தில் கசந்த காதல்: கைதான என்ஜினீயர் வாக்குமூலம்!!
மேற்கு வங்காள மாநிலம் காலிங்பூர் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்தவர் மெகபூப் அலி (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் நிமலா பூட்டியா (19). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வாழத்தொடங்கினர்.
நிமலா பூட்டியா கர்ப்பமானார். நாட்கள் செல்ல செல்ல காதல் தம்பதியினருக்கிடையே அன்யோன்யம் குறையத்தொடங்கியது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகின.
கடந்த 23 நாட்களுக்கு முன்பு மெகபூப் அலி தனது மனைவியை அழைத்துக்கொண்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டில் குடியேறினார். கோவை வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனை கடையில் மெகபூப் அலி கணக்காளராக வேலைக்கு சேர்ந்தார். நிமலா பூட்டியா ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
இங்கும் மெகபூப் அலிக்கும், அவரது மனைவி நிமலா பூட்டியாவுக்குமிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து கொண்டேயிருந்தது. நேற்று மதியம் மெகபூப் அலி தான் வேலை செய்யும் கடையின் அலுவலகத்தில் மனைவி நிமலா பூட்டியாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். மெகபூப் அலியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது மெகபூப் அலி போலீசாரிடம் கூறியதாவது:–
மேற்கு வங்காளத்தை சேர்ந்த நான் பி.டெக். படித்துள்ளேன். பிளஸ்–2 படித்த நிமலா பூட்டியாவை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன்.
ஆரம்பத்தில் இனிமையாக வாழ்க்கையை கழித்த எங்களுக்குள் நாளுக்கு நாள் கருத்துவேறுபாடு அதிகமானது. நிமலா பூட்டியா கர்ப்பமான பின்னர் கருத்து வேறுபாடு தகராறாக மாறியது. இதனால் அங்கிருந்து கோவைக்கு வந்தோம்.
இங்கேயும் எங்களது குடும்பத்தகராறு நீடித்தது. என்னிடம் கோபித்துக்கொண்டு நிமலா பூட்டியா கோவையில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நான் என்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைப்பு விடுத்தேன்.
ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிமலா பூட்டியாவின் உறவினரை தொடர்பு கொண்டு என் மனைவியை சேர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர்,
அவர்களிடம் என் மனைவி நிமலா பூட்டியாவை நான் வேலை பார்க்கும் கடைக்கு அழைத்து வரச்சொன்னேன். அவர்களும் நான் கூறியபடி நேற்று அழைத்து வந்தனர். கடையின் 3–வது மாடியில் உள்ள அலுவலகத்துக்கு நிமலா பூட்டியாவை அழைத்து சென்று சமாதானம் பேசினேன்.
அப்போது நிமலா பூட்டியா என்னிடம் “உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை, கர்ப்பத்தை கலைத்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல உள்ளேன். அங்கு வேறு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பேன்” என்று மிரட்டல் விடுப்பது போல் பேசினார். அவரை சமாதானப்படுத்த முயன்றேன், ஆனால் அதற்கு பலனில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நான் அலுவலகத்தில் இருந்த கத்தியை எடுத்து நிமலா பூட்டியாவை சரமாரியாக குத்தி கொலை செய்தேன் என்று கூறினார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating