VIDEO:‘’இந்தியா என் உறவு! சீனா என் நண்பன்! தமிழர்களுக்கு நான் எதிரானவன் அல்ல!!
வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும் ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
இந்தச் செவ்வியில் அவர், “தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு உள்ளது. துரதிஸ்டவசமாக அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்கள் அதனைச் செய்ய விரும்பவில்லை.
மக்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு அவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் என் மீதும், ஆளுனர் மீதும் பழியைப் போடுகிறார்கள்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அதனைச் செய்ய முடியும். அவர்களுக்கு நாம் பணத்தை அனுப்புகிறோம். முடிவு செய்ய வேண்டியது அவர்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு எதிரானவர் என்று தனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்களுக்கு எதிரானவனாக நான் எப்படி இருக்க முடியும்? இதுபற்றி எனது அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்பதே நல்லது.
தமிழர்களுக்கு எதிராக என்னால் செயற்பட முடியாது. எனது மருமகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரை திருமணம் செய்துள்ளார். இன்னொரு மருமகள் கண்டியை சேர்ந்த முஸ்லிமை மணம் செய்துள்ளார்.
நாங்கள் உறவுகளைக் கொண்டிருக்கிறோம். தமிழ், முஸ்லிம், சிங்களவர்களிடையே திருமண உறவுகள் நிகழ்கின்றன. நான் எப்போதுமே, அனைவரையும் சமமாகவே நடத்துகிறேன். நான் இந்த நாட்டின் ஜனாதிபதி. என்னால் சமயம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ ஒருபக்க நிலைப்பாட்டை எடுக்க முடியாது. எமது வாக்குகளை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் எம் மீது சேற்றை வாரி வீசுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, அவர் மேற்கொண்டிருக்கும் அயலுறவுக் கொள்கைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். நரேந்திர மோடிக்கும் எனக்கும் இரு நாடுகள் பற்றி ஒத்த பார்வைகள் உண்டு. இதுவே எங்கள் உறவை வலுப்படுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நீங்களே நேரில் வந்து காணுங்கள். மதம், ஜாதி மற்றும் இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது. நான் அனைவரையும் ஒன்றாகவே கருதுகிறேன்.
ஐநாவில் தமிழில் பேசினேன். இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செய்கை. நான் தமிழ் கற்க விரும்புகிறேன். நான் இன்னும் தமிழ் மாணவன் தான். மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மீண்டும் ஆட்சியில் அமர்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. வடக்கு மாகாண தமிழர்கள் அதிகம் படித்தவர்கள். அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி நன்கு சிந்திக்க வேண்டும். சென்ற முறையை விட அதிக வாக்குகளை பெறுவேன் என்று ஆழமாக நம்புகிறேன்.
வடக்கு மாகாண கட்டமைப்புக்கு 450 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டிருக்கிறோம் என்று கூறினார். இந்தியா, சீனாவுடனான தமது நிலைப்பாடு என்ன என்பதை, ‘’இந்தியா என் உறவு! சீனா என் நண்பன்’’ என்று கூறினார்.
Average Rating