லாட்டரி சீட்டு வியாபாரியிடம் மோதிரம்–ரூ.1000 கேட்டு சப்–இன்ஸ்பெக்டர் மிரட்டல்!!
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் நவநீதக்குமார், வேணுகோபால் சி.டி. மற்றும் டி.வி.டி. கடைக்காரர்களிடம் லஞ்சம் பெற்றனர். இதனால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இதன் விவரம் வருமாறு:–
சேலம் அருகில் உள்ளது கொண்டலாம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 35). லாட்டரி சீட்டுக்களை விற்று வந்தார். இவரை கண்காணித்த கொண்டலாம் பட்டி போலீசார் நேற்று முன்தினம் சண்முகத்தையும், மற்றொரு லாட்டரி சீட்டு வியாபாரியையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த ஆட்டோவில் ஏற்றி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
இவர்களை கொண்டலாம் பட்டி சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் அழைத்து வந்தார். கோர்ட்டுக்கு வந்ததும் லாட்டரி சீட்டு வியாபாரிகள் தங்களை ஜாமீனில் எடுக்க வக்கீல் மாயனை சந்தித்து கேட்டு கொண்டனர். இதனால் அவர் ஜாமீன் மனு தயார் செய்தார்.
அப்போது சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், லாட்டரி சீட்டு வியாபாரி சண்முகத்திடம் சென்று ஆட்டோ வாடகை தரவேண்டும். இதற்கு ரூ.1000–ம் தாருங்கள் என கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். பின்னர் சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், பணம் இல்லை என்றால் பரவாயில்லை. நீ அணிந்து இருக்கும் மோதிரத்தை தா என கூறி உள்ளார். இதில் கோபம் அடைந்த சண்முகம், இதுபற்றி வக்கீல் மாயனிடம் கூறினார்.
இதனால் வக்கீல் மாயன் சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் சென்று ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள். லாட்டரி சீட்டு வியாபாரியை கைது செய்து விட்டீர்கள். இதற்கு ரூ.1000–ம் தா, இல்லையென்றால் மோதிரத்தை தா என்றால் சரியா? என கேட்டார். இதனால் வக்கீலுக்கும், சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை மற்ற வக்கீல்களும், போலீசாரும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த பிரச்சினை குறித்து வக்கீல் மாயன் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதன் பேரில் தற்போது கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து வக்கீல் மாயன் கூறியதாவது:–
லாட்டரி சீட்டு வியாபாரியை கைது செய்து ஆட்டோவில் சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் கோர்ட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதற்கு பணம் தரவேண்டும் என கூறி ரூ.1000–ம் கேட்டு இருக்கிறார். கைதான சண்முகத்திடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அப்போதும் சண்முகத்தை சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் விடாமல் மோதிரத்தை கொடு என கேட்டு மிரட்டி உள்ளார். இதை அறிந்த நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்டேன். இதற்கு சப்–இன்ஸ்பெக்டர் என்னை திட்டி விட்டார். இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர துணை கமிஷனர் பாபுவும் விசாரித்து வருகிறார்.
Average Rating