கோவை அருகே தந்தை, மகளை குத்திக் கொன்ற கொலையாளிகள் சிக்கினர்!!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராக்கியப்பன் (வயது 45). விசைத்தறி அதிபர். இவரது மனைவி சரோஜினி (45). இவர்களுக்கு வினோதினி (26), உஷா (23) என்ற 2 மகள்கள் உள்ளனர். வினோதினிக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வினோதினி வந்திருந்தார்.
ராக்கியப்பன் வீட்டையொட்டி உள்ள இடத்தில் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது விசைத்தறி கூடத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். இவர் சோமனூரையடுத்த பள்ளபாளையத்தில் தாய் மற்றும் சகோதரருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
குமார் தனக்கு அட்வான்சாக ரூ.50 ஆயிரம் வேண்டும் என்று ராக்கியப்பனிடம் கேட்டிருந்தார். அவர் அதற்கு எவ்வித பதிலும் கூறாமல் காலம் கடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் பரமசிவம் என்ற வாலிபரை வேலைக்கு சேர்க்க விசைத்தறி கூடத்துக்கு அழைத்து வந்தார்.
அப்போது ராக்கியப்பன் வயசுப் பெண்கள் வசிக்கும் இடத்தில் வாலிபர்களுக்கு வேலை அளிக்க முடியாது. எனவே அந்த வாலிபரை அழைத்து செல்லும்படி கோபமாக கூறிவிட்டார். மீண்டும் நேற்று பரமசிவத்தையும், சையத் அப்துல் என்ற வாலிபரையும் வேலைக்கு சேர்க்க அழைத்து வந்தார்.
இதனால் ராக்கியப்பன் அதிர்ச்சியடைந்தார். ஏற்கனவே வாலிபர்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறியும், அதையும் மீறி அதே வாலிபருடன் மற்றொருவரையும் தைரியமாக குமார் அழைத்து வந்ததை தட்டிக் கேட்டார். அவர்களுக்கு கண்டிப்பாக வேலை கொடுக்க வேண்டும் என்று ராக்கியப்பனிடம் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் ராக்கியப்பனுக்கும், குமாருக்கும் இடையே வாக்குவாதம் உருவானது. ஒருவரையொருவர் கடுமையாக திட்டிக் கொண்டனர். அப்போது குமார் நான் அட்வான்சாக கேட்ட பணம் ரூ.50 ஆயிரத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வேலை பார்க்க மாட்டேன் என்றார்.
அதற்கு ராக்கியப்பன் நீ வேலைக்கு வரவில்லையென்றால் பரவாயில்லை. நான் வேறு ஆளை வேலைக்கு வைத்துக் கொள்கிறேன் என்றார். வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கத்தியை எடுத்த குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் ராக்கியப்பனை சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் காப்பாற்றுங்கள்…காப்பாற்றுங்கள்…என்று சத்தமிட்டபடியே ராக்கியப்பன் கீழே சரிந்தார். சத்தம் கேட்டு ராக்கியப்பனின் மூத்த மகள் வினோதினி விசைத்தறி கூடத்துக்கு ஓடி வந்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையை காப்பாற்ற முயன்றார். அவரையும் குமார் கத்தியால் குத்தினார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த ராக்கியப்பனின் இளைய மகள் உஷா, மனைவி சரோஜினி ஆகியோரையும் அந்த கும்பல் கத்தியால் குத்தியது.
அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு அங்கு வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் குமார் உள்பட 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர்.
இதுகுறித்து அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசந்திரன், கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, சூலூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராக்கியப்பன் உள்பட 4 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராக்கியப்பனும், அவரது மூத்த மகள் வினோதினியும் பரிதாபமாக இறந்தனர்.
ராக்கியப்பனின் மனைவி சரோஜினியும், இளைய மகள் உஷாவும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினர். குமாரின் தாய் பள்ளபாளையம் பகுதியில் வசிப்பதை அறிந்த தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் விசாரணை நடத்திய போது கொலை நடந்த சமயத்தில் குமார் தாயுடன் செல்போனில் பேசிய தகவல் தெரிய வந்தது.
அந்த எண்ணை வைத்து குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் எங்கிருக்கிறார்கள் என்று விசாரணையில் இறங்கினர். அப்போது செல்போன் டவர் சேலம், ஈரோடு என்று மாறி மாறி காண்பித்தது. இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போது குமார் உள்பட 3 பேரும் கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் செல்வது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரிக்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த குமார், பரமசிவம் மற்றும் சையத் அப்துல் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating