சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!
திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கோகுல் என்ற மகனும், காவிரி (வயது 16) என்ற மகளும் உள்ளனர். (இவர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளன).
கடந்த 2011-ம் ஆண்டில் கோகுல் பிளஸ்-2 தேர்வில் அதிக மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு அரசு உதவித்தொகை கிடைத்தது. மேலும் அவர் வாரப்பத்திரிகை ஒன்றிற்கு தனது எதிர்காலம் குறித்து பேட்டி அளித்தார்.
அதில் தானும், தனது தங்கை காவிரியும் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்புவதாக கூறியிருந்தார். அவரது பேட்டியில் வீட்டு தொலைபேசி எண் இடம்பெற்றிருந்தது.
இந்த பேட்டி வெளியாகி சில நாட்களில் அவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அதில் கண்ணன் (32) என்பவர் பேசினார். முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், காவிரி எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு தன்னால் அரசு சலுகைகளைப் பெற்றுத்தர முடியும் என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து 19.12.11 அன்று சங்ககிரியில் இருந்து கண்ணன் மீண்டும் சேகர் வீட்டுக்கு பேசினார். அதில், சென்னைக்கு உடன் வந்தால் அரசு சலுகைகளை வாங்கித்தருவேன் என்று கூறினார். எனவே சேகர், சாந்தி, காவிரி ஆகியோர் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர்.
இந்த நிலையில், சாந்தியின் தங்கை வசந்தி மதுரவாயலில் இருப்பதாகவும், அவருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கண்ணனிடம் சேகர் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து கார் மதுரவாயலுக்கு சென்றது.
அங்கிருந்து மற்றொரு காரை எடுத்துக்கொண்டு, அதில் சேகரை தலைமைச் செயலகத்துக்கு கண்ணன் அனுப்பிவைத்தார். மற்ற காரில் சாந்தி, வசந்தி, காவிரியை கண்ணன் ஏற்றிக்கொண்டார். சூளைமேட்டில் சாந்தியையும், வசந்தியையும் சான்றிதழை ஜெராக்ஸ் எடுப்பதற்கு அனுப்பிவிட்டார்.
பின்னர் தனியாக இருந்த காவிரியை கத்தி முனையில் சமயபுரத்துக்கு கடத்திச் சென்றார். அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து காவிரியை கண்ணன் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி சமாதானப்படுத்தி, திருப்பரங்குன்றம், மதுரை மாட்டுத்தாவணி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில், இந்த ஜோடியை திருப்பரங்குன்றத்தில் பார்த்த ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த ஜோடியை பின்தொடர்ந்து சென்ற அவர், மாட்டுத்தாவணிக்கு வந்ததும் போலீசாருக்கு புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து கண்ணனையும், காவிரியையும் போலீசார் பிடித்து தனித்தனியாக விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததால், கண்ணனிடம் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமி காவிரியை கடத்திச் சென்று கண்ணன் கற்பழித்த விவகாரம் தெரிய வந்தது. இதுகுறித்து கொடுத்த தகவலின் அடிப்படையில் காவிரியைத் தேடி பெற்றோர் சென்றனர்.
இதுசம்பந்தமாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்தனர். அவர் ஜாமீன் பெறாமல் ஜெயிலிலேயே இருந்தார். இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் கவுரி அசோகன் ஆஜரானார்.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி மீனா சதீஷ் தீர்ப்பளித்தார். கண்ணன் மீது சாட்டப்பட்ட ஆட்கடத்தல், கொலை மிரட்டல், கற்பழிப்பு, சட்ட விரோதமாக அடைத்து வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating