விவசாயி வீட்டில் திருடிய கணவன் –மனைவி கைது: தலைமறைவான காதலிக்கு வலைவீச்சு!!
தாராபுரம் மணக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 42) விவசாயி. இவர் கடந்த மாதம் 6–ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி லீலாவதி, தாய் வள்ளியாத்தாள், தந்தை கருப்பணகவுண்டர் ஆகியோருடன் காட்டம்பட்டி அருகே உள்ள வயலுக்கு சென்று விட்டார்.
வேலை முடிந்து மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 64 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லமுத்து இதுகுறித்து அலங்கியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இது தொடர்பாக திருட்டு கும்பலை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பொம்மு, சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வன், விஜயகுமார், முருகேசன், பூபதி, ராஜேந்திரன், சின்னச்சாமி, இளம்வழுதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தாராபுரம்–பழனி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை திருப்பி அங்கிருந்து தப்ப முயன்றார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவருடைய பெயர் முத்துப்பாண்டி (வயது 34) என்றும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளப்பட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் விவசாயி செல்லமுத்து வீட்டில் இருந்து 64 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருட்டுக்கு உதவியாக இருந்த அவருடைய மனைவி சுகன்யா (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது மேலும் பல தகவல்கள் கிடைத்தன. முத்துப்பாண்டிக்கு சொந்தமாக பள்ளப்பட்டியில் உள்ள தோட்டத்தில் அவர் விவசாயம் செய்து வந்தார். ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் முதலில் சிறு திருட்டுகளில் ஈடுபட்டார்.
நாளடைவில் பூட்டிய வீட்டின் கதவை லாவகமாக உடைத்து அங்கிருந்து நகை மற்றும் பணத்தை திருடி செல்வதை வழக்கமாக கொண்டார். இவருக்கு பட்டப்பகலில் திருடுவதுதான் இஷ்டம்.
சேவல் சண்டையில் மிகவும் ஆர்வமுள்ள முத்துப்பாண்டி சேவல் சண்டை எங்கு நடந்தாலும் அங்கு சென்று விடுவார். அப்போது அந்த ஊரில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, கைவரிசை காட்டுவார். பூட்டிக்கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருடும்போது ஆயுதங்கள் எதுவும் வைத்திருக்க மாட்டார். தடயத்தை விட்டு வைக்காமல் திருடிவிட்டு தப்பி சென்றுவிடுவார்.
இவருக்கு வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பு உள்ளது. அந்த காதலியிடம் திருடிய நகைகளை கொடுத்துள்ளார். சமீபத்தில் காட்டம்பட்டியில் திருடிய நகையை காதலியிடம் தான் கொடுத்துள்ளார்.
முத்துப்பாண்டி மீது தாராபுரம் மட்டுமின்றி மூலனூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் 3 வீடுகளில் திருடிய வழக்கும் மற்றும் தமிழகம், கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான திருட்டு வழக்குகளும் உள்ளன. சமீபத்தில்தான் ஜாமீனில் வந்த முத்துப்பாண்டி அதற்குள் தனது கைவரியை காட்ட தொடங்கியபோது போலீசாடம் சிக்கிக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டி மற்றும் சுகன்யாவிடம் இருந்து 35 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கணவன்–மனைவி இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள முத்துப்பாண்டியின் காதலியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating