கோவையில் 2007-ல் மாயமான பள்ளி மாணவி கொலை: நண்பருடன் வாலிபர் கைது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவரது மகள் தனலட்சுமி (வயது 15). இவர் கடந்த 2007–ம் ஆண்டு 10–ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு விடுமுறையை கழிக்க சூலூரில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்றார்.
விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய தனலட்சுமி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மோகன் ராஜ் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தனலட்சுமியின் உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து தனலட்சுமி பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆராய்ந்தனர். அப்போது சூலூரை சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம் அதிக முறை தனலட்சுமி பேசியிருப்பதும், காணாமல் போன அன்று மட்டும் தனலட்சுமி 6 முறை தங்கராஜிடம் பேசியிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சூலூருக்கு விரைந்த போலீசார் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தி வந்த தங்கராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனலட்சுமியை கொலை செய்து காட்டுப்பகுதியில் புதைத்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் போலீசார் விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தது. பள்ளி விடுமுறையை கழிக்க பெரியப்பா வீட்டுக்கு வந்த தனலட்சுமி கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் விடுமுறை கால கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தார்.
அந்த கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர் தங்கராஜ் (31) என்ற வாலிபருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் விடுமுறை முடிந்து மீண்டும் ஜமீன் ஊத்துக்குளிக்கு தனலட்சுமி சென்றார். இருவரும் செல்போன் மூலமாக காதலை வளர்த்து வந்தனர்.
இதற்கிடையே தங்கராஜின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர். இந்த தகவலை அறிந்த தனலட்சுமி செல்போன் மூலம் தங்கராஜை தொடர்பு கொண்ட போது அவர் சூலூருக்கு நேரில் வரும்படி கூறினார்.
இதையடுத்து ஜமீன் ஊத்துக்குளியிலிருந்து சூலூர் வந்த தனலட்சுமியை சந்தித்த தங்கராஜ் சூலூர் பை–பாஸ் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தார். பின்னர் தனது நண்பர் ராஜ்குமாரை வரவழைத்து அவரது உதவியுடன் இறந்து போன தனலட்சுமியின் உடலை புதைத்துள்ளனர்.
தனலட்சுமியை இருவரும் சேர்ந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம்? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தங்க ராஜையும், ராஜ்குமாரையும் கைது செய்த போலீசார் இருவரையும் தனலட்சுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு இன்று காலை அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து விசாரணை நடத்திய போது தனலட்சுமியை கொலை செய்த இடத்தையும், அவரது உடலை புதைத்த இடத்தையும் போலீசாருக்கு அடையாளம் காண்பித்தனர். அங்கு சூலூர் தாசில்தார் மற்றும் மோகன் ராஜின் உறவினர்கள் முன்னிலையில் போலீசார் தனலட்சுமியின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்த பின்னரே அவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்டாரா? என தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
7 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மாணவி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating