யாழ். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று விசாரணை!!
யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் ஐவருக்கு இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு வந்தது.
ஊடகவியலாளர்களினால் கடந்த வருடம் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு யாழ். ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்த போதும் முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவத்தினர் சார்பாக இலங்கை இராணுவத் தளபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவரோ அவர் சார்பான நபரோ சமூகமளித்திருக்கவில்லை என யாழ். ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வலி வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அடையாளமிடப்பட்டு முற்கம்பி வேலி போடப்பட்டுள்ள கட்டுவன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வீடுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 28 ஆம் திகதி இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் துணையுடன் இராணுவ மனித வலுவைப்பயன்படுத்தி மக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட பிரதேச மக்களினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் அப்பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களுமான தர்மலிங்கம் சிர்த்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் உள்ளிட்டவர்கள் இதன்போது சமூகமளித்திருந்தனர்.
இந்த சந்தர்பத்தில் மக்களின் வீடுகளை புல்டோசர் வாகனங்களைக் கொண்டு இராணுவத்தினர் இடித்து அழித்துக்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக அறிக்கையிடும் பணியில் ஈடுபட்டிருந்த யாழ். ஊடகவியலாளர்களான எஸ்.தர்சன், எஸ்.நிதர்சன், எஸ்.ராஜேஸ்கரன், வி.கஜீபன் மற்றும் இணையத்தள செய்தியாளர் ஒருவர் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் இராணுவத்திரால் முற்றுகையிடப்பட்டனர்.
ஊடகவியலாளர்களின் புகைப்படக்கருவிகள் இராணுவப்பாணியில் சோதனையிடப்பட்ட அதேவேளை புகைப்படக்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அதிலிருந்த புகைப்படங்களும் அழிக்கப்பட்டன.
அது மட்டுமின்றி அங்கு பிரசன்னமாகியிருந்த 25 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் முற்றுகைக்குள் வைத்து 515 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரியினால் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பான புகைப்படங்களோ அல்லது செய்திகளோ நீங்கள் பணிபுரியும் ஊடகங்களில் நாளை அதாவது மறுநாள் பிரசுரமானால் நான் இப்போது மனிதத்தன்மையுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். எனது இராணுவப்பலத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என்று ஊடகவியலாளர்களுக்கு கடும்தொணியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறுநாள் ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவப் படுத்தபட்பட்டு இச்செய்தி வெளியிடப்பட்டது. இதனால் இராணுவத்தினரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக்கருதி 2013.10.28 அன்று குறித்த ஐந்து ஊடகவியலாளர்களும் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு முதன் முறையாக 2014.12.09 இன்று கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தின் புலன்விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.ஹலாம் முன்னிலையில் முற்பகல் 11 மணியிலிருந்து ஒரு மணிவரையிலான சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றது.
இதன்போது முறைப்பாடு தொடர்பான விசாரணை தாமதமானதற்கான காரணத்தை புலன்விசாரணை அதிகாரி முதலில் ஊடகவியலாளர்களுக்கு விளங்கப்படுத்தியிருந்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 24 ஆம் திகதியே தன்னிடம் மேற்படி முறைப்பாடு தொடர்பாக விசாரணை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆணைக்குழுவினால் கடந்த 2013 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 7 ஆம் திகதி எழுத்துமூலம் இராணுவத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு இராணுவத் தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த 2013 ஆம் திகதி 12 ஆம் மாதம் 23 ஆம் திகதி பதில் கடிதம் அனுப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இராணுவத் தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பட்ட பதில் கடிதத்தில், ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ள அதேவேளை ஊடகவியலாளர்கள் அத்துமீறி பலாலி இராணுவ முகாமிற்குள் நுழைய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஊடகவியலாளர்களினால் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தரப்பு சார்பில் எவரும் விசாரணைக்கு சமூகமளித்திராத நிலையில் ஊடகவியலாளர்களிடம் கேள்வி பதில் முறையில் விசாரணைகளை அதிகாரி மேற்கொண்டிருந்தார் என்பதோடு குறிப்பிட்ட விசாரணை தொடர்பான அறிக்கை சட்டச்செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் என்றும் புலன்விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.ஹலாம் தெரிவித்தார்.
Average Rating