மஹிந்தவை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம், கறுப்புக்கொடி, உருவ பொம்மை எரிப்பு!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாட்டுக்கென திருப்பதி செல்லும் நிலையில் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதியின் திருப்பதி வருவதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதிக்கு இன்று மாலை செல்லும் இலங்கை ஜனாதிபதி நாளை அதிகாலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதற்கு தமிழ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ராஜபக்ஷவின் திருப்பதி வருகையையொட்டி, தமிழக – ஆந்திர எல்லையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருத்தணி வழியாக ஆந்திராவிற்கு செல்லும் கார், வேன், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், பொன்பாடி சோதனைச் சாவடியில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
ரேணிகுண்டாவிலிருந்து திருப்பதி மலை அடிவாரம் வரை 200 பொலிஸாரும், மேல் திருப்பதில் 100 பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி நகரில் ஐந்து ரோந்து வாகனங்களில் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்குள் வர மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட திரண்டு வந்தனர். நடேசன் பூங்கா அருகே பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது ராஜபக்ஷவுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேவஸ்தான அதிகாரி பிரபாகரெட்டியிடம், திருப்பதிக்கு ராஜபக்ஷ வருவதை அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்தனர். ராஜபக்ஷவை இந்தியாவிற்குள் தொடர்ந்து அனுமதிப்பது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்றும் அவர்கள் கூறினர். இதையடுத்து, அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர், ராஜபக்ஷவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.
இதனிடையே மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பதியில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திருத்தணியில் இருந்து நாளை காலை 6 மணிக்கு பேரணியாகப் புறப்பட்டு திருப்பதிக்குச் சென்று ராஜபக்ஷவுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என மதிமுகவின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
Average Rating