கற்பழித்து கொல்லப்பட்டதாக புகார்: இளம்பெண் சாவில் மர்மம் நீடிப்பு- கேரள வாலிபரை பிடிக்க வேட்டை!!
சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (22). எஸ்.எஸ்.எல்.சி. முடித்துள்ளளார். அதே பகுதியில் கடையில் வேலை செய்து வந்த அவர், கடந்த 24–ந்தேதி அன்று திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், இது பற்றி, ஏழுகிணறு போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் மாயமான ஜெயஸ்ரீ கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அழுது கொண்டு நிற்பதாகவும், இது தொடர்பாக அங்கிருந்து அண்ணாமலை என்பவர் போன் செய்து தகவல் தெரிவித்தார் என்றும், அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ், ஜெயஸ்ரீயின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் இருந்து விரைந்து சென்ற உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து ஜெயஸ்ரீயை மீட்டு வந்தனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அழுதுகொண்டு நின்றபோது, தன்னிடம் பரிவு காட்டி பேசிய அண்ணாமலையிடம் ஜெயஸ்ரீ, ‘‘என்னை ஒருவன் காதலித்து ஏமாற்றி விட்டான். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் ஜெயஸ்ரீ எழுதி வைத்திருந்தார்.
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், ஜெயஸ்ரீ மீட்கப்பட்டது பற்றி போலீசுக்கு அவரது உறவினர்கள் தகவல் கூறினர். போலீஸ் நிலையத்துக்கும் ஜெயஸ்ரீ அழைத்துச் செல்லப்பட்டார். இதன் பின்னர் சரியாக விசாரணை நடத்தாமலேயே ஜெயஸ்ரீயை உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் பின்னர் வியாசர்பாடியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்த ஜெயஸ்ரீக்கு நேற்று காலையில் திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் நேற்று மாலையில் வால்டாக்ஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஜெயஸ்ரீ கற்பழித்து கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினர். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜெயஸ்ரீயின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஜெயஸ்ரீயின் மர்ம மரணம் குறித்து, கள்ளக்குறிச்சியில் இருப்பதாக முதலில் தகவல் தெரிவித்த பிரான்சிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயஸ்ரீ வெளியூர் சென்றது பற்றி தெரிந்திருந்தும், அதனை மறைத்துவிட்டதாக போலீசார் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே கடந்த 24–ந்தேதி மாயமான ஜெயஸ்ரீ, 3–ந்தேதி வரை 7 நாட்கள் எங்கிருந்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. கேரளாவை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர்தான் ஜெயஸ்ரீயை ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்தான் கள்ளக்குறிச்சியில் ஜெயஸ்ரீயை தவிக்கவிட்டு விட்டுச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து மீட்கப்படும் வரை ஜெயஸ்ரீ எங்கு தங்கி இருந்தார் என்பதும் மர்மமாகவே உள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே ஜெயஸ்ரீயின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் சங்கரை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அவரது செல்போன் எண் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
Average Rating