சினிமா தயாரிப்பாளர் கொலையில் சிக்கிய நடிகை ஐகோர்ட்டில் மனு: நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு!!
சென்னை மதுரவாயலில் வசிந்து வந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ. பாளையங்கோட்டையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான இவர், கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், ரொனால்டு பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர். அவருடன் மனைவியாக வாழ்ந்து வந்த நடிகை சுருதி என்ற சந்தர்லேகா, உமாசந்திரன், ஜான் பிரின்சன் உட்பட பலர் சேர்ந்து கடந்த ஜனவரி 18–ந்தேதி இந்த கொலையை செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சுருதி என்ற சந்தர்லேகாவை பல இடங்களில் போலீசார் தேடியும் கைது செய்ய முடிய வில்லை. கடந்த செப்டம்பர் மாதம் சுருதியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், சுருதி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
ரொனால்டு பீட்டர் பிரின்சோவுடன், திருமணம் செய்யாமல் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த வழக்கில் 5–வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஹானஸ்ட்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் என் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட ரொனால்டு பீட்டர் பிரின்சோ, உமா சந்திரன், ஜான்பிரிண்ஷன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர் ‘ஆன்லைன்’ தொழிலில் என்னை மேலாளராக பணி செய்ய கட்டாயப்படுத்தினார்கள்.
இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்களை தயாரித்தார்கள். அப்போது, என்னையும் ஆபாசப்படங்களில் நடிக்கவேண்டும் என்றும் பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். இதற்கு நான் சம்மதிக்காததால், அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த நிலையில், ரொனால்டு பீட்டர் பிரின்சோவிடம் இருந்து ஆன்லைன் தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான் பிரிண்சன் மற்றும் பலர் கொலை செய்த எனக்கு தெரியவந்தது.
ஆனால், என்னையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். நான் ஒரு அப்பாவி. இந்த கொலை வழக்கில் என்னையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆறுமுகம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மனுதாரர் கடந்த செப்டம்பர் 5–ந்தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் மதுரவாயல் போலீசார், இதுவரை வழக்கின் குற்றப் பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். அவர் தினமும் காலை 10 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜராகி 4 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும். மனுதாரர் தலைமறைவாகக்கூடாது. சாட்சிகளையும் கலைக்கக் கூடாது.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Average Rating