ஆசிரியர்கள்–சக மாணவர்கள் மீது தாக்குதல்: திசை மாறும் இளைய சமுதாயம்!!

Read Time:7 Minute, 20 Second

0f43a7ed-3bba-4e50-80e5-00f82fed06f6_S_secvpfமாதா… பிதா… குரு… தெய்வம் என்பார்கள்.

நம்மை பெற்று வளர்த்த பெற்றோருக்கு முன்னதாகவே ஆசிரிய பெருமக்களை குருவாக போற்றி வந்துள்ளோம்.

நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானதாகும். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும்…

வயதில் மூத்த பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்… நல்லது எது… தீயது எது… என பெற்றோர்களை விட ஆசிரியர்களே நமக்கு அதிகம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். முன்பெல்லாம் பள்ளிக் கூடங்களில் தங்கள் குழந்தைகளை கொண்டு விடும் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இப்படி கூறுவார்கள்.

சார்… நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது, எம் புள்ளைய நல்லா கொண்டு வந்திடுங்க என்பார்கள்.

இதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கும். இப்படி தங்களது குழந்தைகளை முழுவதுமாக ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பெற்றோர், இன்னொரு விஷயத்தையும் மறக்காமல் கூறுவார்கள்.

பையன் படிக்கலைன்னா நல்லா அடிங்க சார்… அவன் நல்லா படிச்சா போதும், என்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட இதே நிலைதான் நீடித்தது.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிப்போயிருக்கிறது. பள்ளிகளில் மாணவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் திருப்பி அடிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

சென்னை பாரிமுனையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே குத்திக் கொலை செய்த சம்பவமும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொலை செய்த சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

சென்னையில் கோடம்பாக்கம் தனியார் பள்ளியில் மாணவன் ஒருவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை கும்பலாக பள்ளியில் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. மாணவனின் தந்தையான தொழில் அதிபர் அருளானந்தம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஆட்களை அனுப்பி கொடூர தாக்குதலில் ஈடுபட்டத்தில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் பாஸ்கர் ராஜ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், மதுரவாயலில் அரசு பள்ளிக்கூடத்தில் லட்சுமி என்ற ஆசிரியை, பிளஸ்–2 மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இதில் லட்சுமியின் காது சவ்வு கிழிந்து விட்டது. ஆசிரியை லட்சுமியை மாணவர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

இப்படி ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில், சக மாணவனையே தீர்த்துக் கட்டிய மாணவர்கள் கொலையாளிகளாக மாறும் விபரீத சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. விருதுநகரில் கடந்த வாரம் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்து, தன்னைப் பற்றி போலீசில் புகார் செய்ததால், அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரே அவரை தீர்த்துக் கட்டிய சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எத்திலோடு என்ற கிராமத்திலும் வினோத் என்ற 11–ம் வகுப்பு மாணவர் சக மாணவராலேயே வகுப்பறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் பள்ளி வளாகத்தில் வைத்து, பலமுறை மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறியிருகின்றன.

இப்படி வளரும் பருவத்திலேயே மாணவர்கள் மனதில் வன்முறை எண்ணங்கள் விதையாய் விழுவதற்கு அவர்கள் வளரும் சூழலும் இளம்வயதிலேயே போதை பழக்கங்களுக்கு அடிமையாவது ஒரு காரணம் என்கிறார்கள் சிந்தனையாளர்கள். பல இடங்களில் டாஸ்மாக் பார்களில் அமர்ந்து மாணவர்கள் மது குடிப்பதையும் காணமுடிகிறது. முன்பெல்லாம் காலை மாலை நேரங்களில் மாணவர்கள் ஓடியாடி விளையாடுவார்கள். ஆனால் இன்று கிராமப்புறங்களில் கூட அது அரிதாகிவிட்டது.

வாள் சண்டை, துப்பாக்கி சூடு நடத்தி கணினி திரையில் ரத்தம் வழிந்தோடும் கம்யூட்டர் விளையாட்டுகளிலேயே இன்றைய சிறுவர்கள் மூழ்கி கிடக்கிறார்கள். இதுவும் தவறான சிந்தனைக்கு வழி வகுக்கும் என்கிறார்கள்.

தாத்தா… பாட்டியிடம் நீதிபோதனை கதைகளை கேட்டு இன்று எந்த பேரப் பிள்ளைகளும் வளர்வதில்லை. தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்பட்டு தாத்தாவையும், பாட்டியையும் முதியோர் இல்லத்தில் விட்டு விடும் நிலைமையே இன்று பெரும்பாலான இடங்களிலேயே காணப்படுகிறது.

இப்படி மாறிவரும் காலச்சூழலும், குழந்தைகள் வளரும் விதமுமே அவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதே நிலை நீடித்தால் திருப்பி அடிக்கும் மாணவர்களுக்கு பயந்து ஆசிரியர்கள் இப்படியும் நினைக்கலாம்.

மாணவர்கள் எக்கேடு கெட்டுப்போனால் எங்களுக்கு என்ன என்று. ஆனால் அது ஆசிரியர்–மாணவர்களின் உறவில் இன்னும் விரிசலை ஏற்படுத்தி விடும்.

மாணவர்களே… குருவாகிய ஆசிரியர்களை போற்றுங்கள் உங்கள் வாழ்வும், வானமும் வசப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் நடிக்க வரும் பூவே உனக்காக சங்கீதா!!
Next post ஆண்கள் ‘அந்த’ விஷயத்திற்கு சரிபட்டு வராமல் இருப்பதற்கான, முதன்மையான 10 காரணங்கள்!!