காவியத்தலைவன் (விமர்சனம்)!!

Read Time:8 Minute, 7 Second

Untitled-160இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு… ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலம்! மக்களின் ஒரே பொழுதுபோக்கு நாடகம் மட்டுமே என்றிருந்த காலம். நாடகம் போட்டு மக்களை மகிழ்வித்த நாடக கலைஞர்களின் வாழ்வில் இருந்த போட்டி, போராட்டம், காதல், துரோகம் என உணர்வு மூட்டைகளை நம் கண்முன் கட்டவிழ்த்து குவித்துவைக்கிறார், தான் ஒரு தரமான படைப்பாளி என தன் முந்தய படங்களில் நிரூபித்த இயக்குனர் வசந்தபாலன்.

கே.பி.சுந்தராம்பாளுக்கும் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்குமான காதலை தழுவி எடுக்கப்படுள்ள இந்தப் படம், அந்த கால நாடக மேடையை நம் கண்முன் நிறுத்தி பிரமிக்க வைக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மெய்சிலிர்க்க வைக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை.

அனுபவம் நிறைந்த நடிகர்களின் பட்டாளம், எழுத்துலகின் சாதனையளார் ஜெயமோகனின் வசனங்கள் என ஒரு பெரும் முயற்சியை மேற்கொண்ட வசந்தபாலன் நிறைவான ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார்.

சிவதாஸ் சுவாமிகள் (நாசர்) தலைமையில் நடந்து வருகிறது பாலமுருகானந்தா நாடக சபா. நடிப்பு பயிற்சி, பாடல் பயிற்சி என நாடக சபா களைகட்டுகிறது. அதில் வளந்துவரும் நடிகர்களாக காளியப்ப பாகவதர் (சித்தார்த்), கோமதி நாயகம் பிள்ளை (ப்ரித்விராஜ்) போட்டிப் போட்டு நடித்து வருகிறார்கள். அந்த போட்டி பொறாமையாக மாறுகிறது. காளியப்ப பாகவதர் அந்த ஊர் ஜமீந்தார் பெண்ணை காதலிக்கிறார்.

யாருக்கும் தெரியாத இந்த இரகசியத்தை கோமதி நாயகம் குருவிடம் சொல்ல, இனி நாடகத்தில் நடிக்கவே கூடாது என காளியப்பாவிற்கு தண்டனை வழங்கப்படுகிறது. இதைத் தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தார் கோமதி நாயகம்.

நாடக சபாவில் சேர்ந்த நாள் முதல் ஒரு தலையாக காளியப்பாவை காதலித்து வருகிறார் வடிவாம்பாள். இதுவும் கோமதி நாயகம் காளியப்பா மேல் வைத்திருக்கும் கோபத்திற்கு ஒரு காரணமாய் அமைந்தது. ஒரு நாள் குரு இறந்துவிட, அதை சாக்காக வைத்து நாடக சபாவிலிருந்து அடித்து விரட்டப்படுகிறார் காளியப்பா.

பல காலத்திற்கு பிறகு காளியப்பாவை அதே நாடக குழுவிடம் கொண்டு வந்து சேர்க்கிறது காலம். அவர் மீண்டும் நடிக்க, வடிவாம்பாளின் காதலும் மீண்டும் உயிர்த்தெழுகிறது. எதிர்பார்த்தது போலவே போட்டியும் பொறாமையும் துள்ளிகுதிக்க, திட்டமிட்டபடி காளியப்பா பிரிட்டிஷ் போலிசால் கைது செய்யப்படுகிறார். அவர் விடுதலையானாரா? வடிவாம்பாளின் காதல் என்ன ஆனது? அந்தக் காவியத்தலைவனின் முடிவை காவியமாக காட்டுகிறது ‘காவியத்தலைவன்’.

காட்சிகளில் நாடகம் பார்க்கும் உணார்வை நமக்கு ஏற்படுத்துவது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழை. நவரசங்களையும் தன் இசையில் கொண்டுவந்து அதியங்களில் ஒன்றாய் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இசைப் புயல். மேடை நாடக வசனங்களுக்கு அவர் கையில் வைத்திருக்கும் கி-போர்டும் கூடவே சேர்ந்து நடித்திருக்கிறது என்றே சொல்ல தோன்றுகிறது. ‘வாங்க மக்கா வாங்க’ என்ற முதல் பாடலிலேயே நம்மை பரவசப்படுத்துகிறார், ‘சொல்லிவிடு சொல்லிவிடு…’ பாடலில் கண்ணீரையும், ‘யாருமில்லா தனியரங்கில்…’ பாடலில் காதலையும் வரவழைக்கிறது அவரின் இசை.

இசைக்கு அடுத்து நம் இதயத்தில் பதிவது வேதிகாவின் வெளிச்சமான விழிகளும் பிரகாசமான முகமும். அவர் நடித்திருக்கும் நடிப்பை வழக்கமான ஹீரோயின் நடிப்பில் அடக்கிவைக்க முடியாது. மேடையில் வசனங்களை முழங்கும் போதும் சரி, காளியப்பாவிடம் காதலால் உருகும் போதும் சரி, அதிகபட்ச நியாயமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். திருப்புகழ் பாடலை பாடிக்கொண்டே ஒரு மயக்கும் நடனமாடுகிறார்… ஆடியன்ஸ் அத்தனைபேரும் அசந்துபோவார்கள் என்பது நிச்சயம்.

அடுத்தது அதிக கவனத்தை ஈர்க்கிறவர் பிரித்விராஜ். வில்லத்தனத்தை தன் பொறிபறக்கும் கண்களில் கொண்டுவந்து அசுரத்தனமான நடிப்பைக் தந்திருக்கிறார். தான் அவமானப்படுத்தப்படும் எல்லா நிலைகளிலும் கோபமும் கொந்தளிப்பு அவர் முகத்தில் தரிசனம் கொடுக்கிறது. அவருக்கு இருந்த ஒரே மைனஸ் மொழி வழக்கு மட்டுமே. அது தவிர்க்க முடியாதது என்றாலும், வசன உச்சரிப்பில் இன்னும் அதிக மெனக்கெடல் அவசியம்.

காவியத்தலைவனாக வலம் வரும் சித்தார்த், அவர் இதுவரை நடித்த கதாபாத்திரங்களைவிட ஆயிரம் மடங்கு அதிக பலம் கொண்டது காளியப்பா கதாபாத்திரம். தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார் சித்தார்த். அர்ஜுனனாக ‘போரை நிறுத்து…’ என்று பாடிக்கொண்டே கண்ணீர்விடும் காட்சி அதற்கு ஒரு சாட்சி. இயக்குனருக்கு அவர் மேல் என்ன கோபமோ… அடிக்கடி பிரித்விராஜ் சித்தார்த்தைப் பார்த்து இப்படிக் கேட்கிறார் “அப்படி என்னடா நீ பெருசா நடிச்சு கிழிச்சுட்ட…”.

கேமராவைக் கொண்டு வர்ணஜாலங்களை நிகழ்த்துகிறார் நிரவ்ஷா. வசந்தபாலனின் காட்சிகளை எளிமையாகவும் முழுமையாகவும் புரியவைக்க உதவுகிறது ஜெயமோகனின் வசனங்கள். பட்டுத்துணிகளால் காட்சிகளை மேலும் பளபளவென ஜொலிக்கச் செய்திருக்கிறார் தேசிய விருதுபெற்ற கலை இயக்குனர் T.சந்தானம் சொல்லவா வேண்டும்… நாசர், தம்பிராமைய்யா, பொன்வண்ணன், சிங்கம் புலி என பட்டையை கிளப்புகிறார்கள் நடிகர்களின் பட்டாளம்.

அந்த காலகட்டத்தில் புராண நாடங்களின் வீழ்ச்சியையும், சுதேசி நாடங்களின் எழுச்சியையும் எளிமையாகவும் மிக எதார்த்தமாகவும் தன் காட்சிகளால் புரிய வைக்கிறார் வசந்தபாலன். அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் முயற்சிகளும் காவியத்தலைவனை சிறந்த படைப்பாக உருவாக்க உதவியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலைக்கோட்டையில் பெண் மர்மச்சாவு: மகனை பிடித்து போலீசார் விசாரணை!!
Next post திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து கற்பழித்த எய்ட்ஸ் வாலிபர்!!