ராணுவ வீரர் மனைவியை கொலை செய்தது ஏன்?: கைதான தோழி வாக்குமூலம்!!
நாகர்கோவில் தம்மத்து கோணம் குருகுல சாலையை சேர்ந்தவர் பாகுலேயன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கமலாட்சி (வயது 67).
நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த கமலாட்சியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். கமலாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் கமலாட்சியை கொலை செய்த வாலிபரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராஜாக்கமங்கலம் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்த தாமோதரன் (29) என்பது தெரியவந்தது. கமலாட்சியின் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடிக்க வந்ததாகவும், அப்போது கமலாட்சி பார்த்து சத்தம் போட்டதால் அவரை கொலை செய்ததாகவும் கூறினார். எனினும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
தாமோதரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையில் அவரது உறவினரும், கமலாட்சியின் நெருங்கிய தோழியுமான அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற ராஜேஸ்வரிக்கும்(40) தொடர்பு இருப்பது அம்பலமானது. இதையடுத்து போலீசார் ஈஸ்வரியையும் கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
நானும், கமலாட்சியும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தோம். அவர் வீட்டில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் என்னிடம் தவறாமல் சொல்லி விடுவார். நானும் அவருக்கு ஆறுதலாக பேசுவேன். எனது கணவர் வில்லுப்பாட்டு கலைஞர் ஆவார். எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் என்ஜினீயரிங் முடித்து விட்டு தற்போது எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வருகிறார். 2 மகள்களும் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். எனவே படிப்பு செலவுக்காக அதிக கடன் வாங்கினேன். அந்த கடன்களை அடைக்க முடியவில்லை.
இதற்கிடையே, எனது உறவினரான தாமோதரன் அடிக்கடி என்னிடம் செலவுக்கு பணம் கேட்பார். நானும் பணம் கொடுப்பேன். நான் அந்த பணத்தை திருப்பி கேட்டபோது பல நாள் ஆகியும் அவர் அந்த பணத்தை திருப்பி தரவில்லை. அப்போது தான் எனது கடனை அடைக்கவும், தாமோதரனிடம் இருந்து பணத்தை வாங்கவும் தாமோதரன் மூலம் கமலாட்சி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினேன். அதற்கு தாமோதரனும் ஒப்புக்கொண்டார்.
கொள்ளையடிப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்த நேரத்தில் தான் கமலாட்சியின் பேத்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதும், நேற்று அவரது குடும்பத்தினர் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்றதும், கமலாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதும் எனக்கு தெரிய வந்தது. இதை பயன்படுத்தி தாமோதரன் உதவியுடன் கமலாட்சி வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினோம்.
அதன்படி நேற்று காலை தாமோதரனுக்கு போன் செய்து அவரை வரவழைத்தேன். அவர் கமலாட்சி வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் இருக்கும் பீரோ சாவியை தேடினார். அது கிடைக்காததால் எனக்கு போன் செய்தார். நான் சாவி இருக்கும் இடத்தை சொன்னேன். அதன்படி அவர் சாவியை எடுக்க செல்வதற்குள் கமலாட்சி பார்த்து சத்தம் போட்டதால் தாமோதரன் கத்தியால் அவரை குத்தி கொலை செய்து விட்டார்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுபோல தாமோதரன் அளித்த வாக்குமூலத்தில், ராஜேஸ்வரியின் திட்டப்படி கமலாட்சி வீட்டில் நகை, பணத்தை மட்டும் கொள்ளையடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி அங்கு சென்றேன். ஆனால் எதிர்பாராதவிதக கமலாட்சி என்னை பார்த்து சத்தம் போட்டதால் அங்கிருந்த கத்தியால் அவரை குத்தி விட்டேன் என கூறி உள்ளார்.
கைது செய்யப்பட்ட தாமோதரன், ராஜேஸ்வரி ஆகியோரை போலீசார் நாகர்கோவில் ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் தாமோதரன் நாகர்கோவில் ஜெயிலிலும், ராஜேஸ்வரி தக்கலை பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
Average Rating