மஹிந்த கூறிய அனைத்தும் அவருக்கும் தெரிந்தே நடந்தது – சொல்ஹெய்ம்!!

Read Time:10 Minute, 6 Second

150216913010914251712இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்மீது ஆச்சரியப்படத்தக்க தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதரும் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, குருநாகலில் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, சமாதான பேச்சுக்காலத்தில் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், நோர்வே அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக எரிக் சொல்ஹெய்ம் விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியிருக்கின்ற தறுவாயில் மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருப்பதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்று தான் ஊகங்களை வெளிப்படுத்தப்போவதில்லை என்று கூறியிருக்கின்ற எரிக் சொல்ஹெய்ம், நடக்கவிருக்கின்ற தேர்தலில் தனது பெயர் எந்தவித்திலும் இழுக்கப்படுவதை அனுமதிக்கும் எண்ணம் தனக்கு காரணத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலாக எல்லோரும் அறிந்திருக்கின்ற வெளிப்படையான தகவல்களை மீண்டும் தான் வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றார்.

இலங்கையில் 7 ஆண்டு காலம் சமாதானப் பணிகளில் சொல்ஹெய்ம் ஈடுபட்டிருந்தார் இலங்கையின் அமைதி முயற்சிகளுக்கு ஏற்பாட்டாளராக, மூன்றாவது தரப்பாக பங்கெடுத்திருந்திருந்த நோர்வே அரசு ஒருபோதும் விடுதலைப் புலிகளுக்கு பொதுவான அடிப்படைகளிலோ அல்லது அவர்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கு குறிப்பாகவோ நிதி வழங்கவில்லை என்றும் எரிக் சொல்ஹெய்ம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அப்போது நடந்துவந்த அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு உதவும் முகமாக, விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு பொருளாதார ரீதியான வளங்களை நோர்வே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையிலேயே புலிகளுக்கு வானொலி ஒலிபரப்புக் கருவி (radio transmitter) ஒன்றை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படியான உதவிகள், வெவ்வேறு தலைவர்களின் கீழிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையாகத் தெரிந்தே இருந்ததாகவும், அதில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலமும் அடங்கும் என்றும் சொல்ஹெய்ம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாங்கள் மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக வெளிப்படையாகவே நடந்துகொண்டதாகவும் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதர் கூறுகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு முன்னமே பல தடவைகள் அவரைத் தான் சந்தித்திருப்பதாகவும், அமைதிச் செயற்பாடுகளின் முழுவிபரங்களையும் அவருக்குத் தெரியப்படுத்தியிருந்ததாகவும் கூறியுள்ள எரிக் சொல்ஹெய்ம், தங்களின் சமாதான நோக்கங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சராக இருந்தபோதும் பிரதமராக இருந்தபோதும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் நோர்வேயை ஊக்குவித்ததுடன் தொடர்ந்தும் தனக்கு முன்னேற்றங்கள் குறித்து தெரியப்படுத்துமாறு கோரியிருந்தாகவும், அக்காலத்தில் அளிக்கப்பட்ட அந்த பலனுள்ள ஒத்துழைப்புகளுக்காக தாங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமாதான முயற்சிகளின் ஏற்பாட்டாளராக நோர்வே தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருந்ததாகவும், தன்னை இலங்கைக்கு வருமாறு தனிப்பட்ட அழைப்பை விடுத்திருந்ததாகவும் கூறுகின்ற நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி விவகார அமைச்சர், அதன்பின்னர், பல தடவைகள், தன்சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அரசியல் ரீதியான செய்திகளை கொண்டுசேர்க்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் இன்றைய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்திகளை முழுமையாக விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்துக்காக கொண்டுசேர்த்ததாகவும் குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கு உயிர்ப்பலிகள் நிறுத்தப்பட்டதாகவும் எரிக் சொல்ஹெய்க், அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு தனிப்பட்ட ரீதியிலும் நோர்வே அரசுக்கும் நன்றியை வெளிபடுத்தியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டில் கடைசியாக ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில், நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு அங்கீகாரமாக, தன்னை மீண்டும் இலங்கை வந்து, அங்குள்ள சமாதானத்தை நேரடியாக உணரும்படி கேட்டுக்கொண்டதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேர்வேயின் அமைதி முயற்சி பங்களிப்புகளை விபரித்து அடுத்த ஆண்டு நூல் ஒன்று வெளியிடப்படும்போது, இந்தத் தகவல்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ள எரிக் சொல்ஹெய்ம், பிரிட்டிஷ் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான மார்க் சால்டர், தன்னுடனும் இலங்கையின் அமைதி முயற்சிகளில் பங்கெடுத்திருந்த நோர்வேயின் அக்கால துணை வெளியுறவு அமைச்சராக இருந்த விதார் ஹெல்கிஸனுடனும் சேர்ந்து அந்த நூலை எழுதுவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் ஆரம்பித்துள்ள விசாரணைக்கு, இலங்கை அரசாங்கத்தாலும் விடுதலைப்புலிகளாலும் புரியப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை, இலங்கையராக இருந்தாலும் சரி வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி, தங்களிடமிருக்கின்ற சரியான தகவல்களை, முழுமையான நேர்மையுடன் சமர்ப்பிக்கவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதையும் எரிக் சொல்ஹெய்ம் இன்றைய அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளார்.

ஐநாவின் தலைமைச் செயலாளராலும் ஏனைய ஐநா நிறுவனங்களாலும் எடுக்கப்படும் முக்கியமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே, முன்னணி உலகளாவிய அமைப்பாக ஐநாவால் செயற்படமுடியும் என்றும் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் தனது அறிக்கையை முடித்துக் கொண்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எரிக் சொல்ஹெய்ம் ஜெனீவாவுக்குச் சென்று இலங்கை தொடர்பில் சாட்சியமளிக்க உள்ளதாகவும் குருநாகல் கூட்டத்தில் விமர்சித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசாங்கத்திற்கு ஆப்பு! சம்பிக்க, கம்மன்பில அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!!
Next post முன்னாள் புலி உறுப்பினர் கொலை: பிரதேச செயலாளர் கைது செய்யப்படுவரா?