மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளின் சனத் தொகை விபரம் தேவை!!
இலங்கையில் மண்சரிவு அபாயம் நிலவுகின்ற தோட்டப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் சனத்தொகை விபரங்களை திரட்ட வேண்டிய தேவை இருப்பதாக நாட்டின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
கொஸ்லாந்தை – மீரியாபெத்தை மண்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் 12 சடலங்கள் கிடைத்த நிலையில், மேலும் 19 பேர் புதையுண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத்லால் குமார பிபிசியிடம் தெரிவித்தார்.
எனினும், இந்தப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று நம்பப்படும் 44 பேர் தொடர்பில் எவ்வித தகவல்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இவர்கள் பெரும்பாலும் மண்சரிவு அழிவு நடக்க முன்னதாக அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு சென்றிருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாகவும் சரத்லால் குமார தெரிவித்தார்.
மீரியாபெத்தை மண்சரிவில் கிட்டத்தட்ட 300 பேர் வரையில் காணாமல்போயிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.
சில நாட்களுக்குப் பின்னர், அந்த எண்ணிக்கை 100 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும் பின்னர் 40க்கும் குறைவானவர்கள் என்று கூறப்பட்டது.
´பெருமளவிலானோர் இந்த மண்சரிவில் புதையுண்டுபோனார்கள். அதனால் தகவல்களை வழங்கக்கூடிய, வாக்குமூலம் அளிக்கக்கூடியவர்கள் கொஞ்சப்பேர் தான் இருந்துள்ளார்கள். பின்னர் நடந்த விசாரணைகளின் முடிவில் ஏற்பட்டுள்ள தெளிவுகளின் படித்தான் இப்போதுள்ள எண்ணிக்கைகளுக்கு நாங்கள் வந்துள்ளோம்´ என்றார், இலங்கையின் பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர்.
பேரிடர் முகாமைத்துவ அமைச்சின் ´பொறுப்பு´ தோட்ட மக்களின் தொகை கணக்கு விபரங்களை அதிகாரிகள் முறையாக வைத்திருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
´அதிகாரிகளிடம் இந்த மக்களின் சரியான தொகை தொடர்பான புள்ளிவிபரங்கள் சீராக இருக்கவில்லை என்பதைத் தான் இந்த சம்பவம் காட்டுகின்றது. அழிவுகள் நடக்கக்கூடிய அபாயம் இருக்கின்ற இடங்களில் மக்களின்தொகை விபரங்களை மதிப்பிடுவதற்கு உங்களின் அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமா?´ என்று பிபிசி வினவியது.
´கிராமசேவை உத்தியோகத்தர்களும் தேர்தல் அதிகாரிகளும் உள்நாட்டு அலுவல்கள் துறையினரும் தான் மக்கள் தொகை தொடர்பான தகவல்களை திரட்ட வேண்டும். இங்கு இருப்பது மக்கள் தொகை கணக்கு விபரங்கள் தொடர்பான பிரச்சினை இல்லை. கணக்கெடுக்கப்பட வேண்டிய நபர்கள் தம்மை பதிவுசெய்ய முன்வராததும் அந்த நபர்கள் காணாமல்போயிருப்பதும் தான் இங்கு பிரச்சினை´ என்றார் சரத்லால் குமார.
´தோட்டப்புறங்களில் வாழும் மக்கள் தொடர்பான விபரங்கள் அந்த பிரதேசத்து கிராமசேவை உத்தியோகத்தர்களால் முறையாக வைத்திருக்கப்படவில்லை என்பது தான் இங்கு தெளிவாகத் தெரிகின்றது. இந்த மக்கள் ஏதாவது அழிவுக்கு முகம்கொடுத்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பது பேரிடர் முகாமைத்துவ அமைச்சுதான். உங்களின் அமைச்சுக்கும் இந்த மக்களின் தொகை தொடர்பான கணக்கெடுப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது தானே´ என வினவப்பட்டபோது,
´எதிர்காலத்தில் நீங்கள் முன்வைக்கின்ற யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டிவரும். இயற்கை அழிவு ஆபத்துக்கள் இருக்கின்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் புள்ளிவிபரங்கள் திரட்டப்பட வேண்டும். அதற்காக எங்களின் அமைச்சரும் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சிறப்பு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்´ என்றார் பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர்.
Average Rating