வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை: ஆய்வுக்கலம் படம் பிடித்து அனுப்பியது!!
வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்த ஆய்வுக்கலம், அதை படம் பிடித்து அனுப்பியது.
வான் மண்டலத்தில் சூரியனை நோக்கி விநாடிக்கு 18 கி.மீ. வேகத்தில் 67பி/சுர்யுமோவ்-கெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. வால் நட்சத்திரங்கள் மற்றும் இதர விண்மீன்களின் தோற்றம் பற்றியும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றியும் ஆராய்வதற்காக, அந்த வால் நட்சத்திரத்துக்கு விண்கலத்தை அனுப்பி வைக்க ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக, கடந்த 2004-ம் ஆண்டு ரோசெட்டா என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அதனுள் ‘பிலே‘ என்ற 100 கிலோ எடையுள்ள ஆய்வுக்கலத்தையும் அனுப்பி வைத்தது. இது, ரூ.9 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும்.
பூமிக்கும், அந்த வால் நட்சத்திரத்துக்கும் இடையிலான 650 கோடி கி.மீ. தூரத்தை ரோசெட்டா விண்கலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணம் செய்து அடைந்தது.
நேற்றுமுன்தினம், பிலே ஆய்வுக்கலத்தை விடுவித்தது. இதையடுத்து, 7 மணி நேரம் பயணம் செய்து, வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக ‘பிலே‘ இறங்கியது. வால் நட்சத்திரத்தை பற்றுவதற்காக, பிலேவின் உடம்பில் இரண்டு ஈட்டி போன்ற சாதனங்கள் உள்ளன. ஆனால் அவை உரிய நேரத்தில் செயல்படாததால், பிலே தடுமாறியது. இதனால் விஞ்ஞானிகள் பதற்றம் அடைந்தனர். பிறகு ஒருவழியாக, வால் நட்சத்திரத்தின் ‘நியூக்ளியஸ்‘ எனப்படும் உடல் பகுதியில் பிலே ஒட்டிக்கொண்டது.
வால் நட்சத்திரம் ஒன்றில் ஆய்வுக்கலம் இறங்குவது, இதுவே முதல்முறை ஆகும். ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள், இந்த சாதனைக்காக மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர்களுக்கு அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா‘ பாராட்டு தெரிவித்தது.
இந்நிலையில், வால் நட்சத்திரத்தை ‘பிலே‘ ஆய்வுக்கலம் முதல்முறையாக நேற்று படம் பிடித்து அனுப்பியது. அதை ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதில், பாறைகள் நிறைந்ததாக வால் நட்சத்திரம் காணப்படுகிறது. படத்தின் ஒரு மூலையில், பிலே ஆய்வுக்கலத்தின் மூன்று கால்களில் ஒன்றும் காணப்படுகிறது.
இந்த படத்தை வெளியிட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான ஜெரார்டு ஸ்க்வெம், ‘பிலே ஆய்வுக்கலம் ஆரோக்கியமாக உள்ளது. வால் நட்சத்திரத்தில் ஸ்திரமாக அமர்ந்து கொண்டு, தகவல்களை அனுப்பி வருகிறது‘ என்று கூறினார்.
பிலே ஆய்வுக்கலத்தில், 11 சாதனங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி, இனிவரும் நாட்களில் தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். வால் நட்சத்திரத்தின் வெப்பநிலை, அதிர்வு சக்தி, காந்த சக்தி ஆகியவற்றை அளவிடும். அது அனுப்பி வைக்கும் விவரங்கள், வால் நட்சத்திரத்தை பற்றிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது.
‘சார்ஜ்‘ ஏற்றப்பட்ட பேட்டரி மூலம், பிலே ஆய்வுக்கலம் 60 மணி நேரம் இயங்கக் கூடியது. சூரிய ஒளியில் பேட்டரி ‘சார்ஜ்‘ ஏற்றப்பட்டால், அது கூடுதல் நேரம் செயல்புரியும்.
இந்த ஆய்வுப்பணி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும். அப்போது, வால் நட்சத்திரம், சூரிய குடும்பத்தின் உள்வட்டத்தில் இருந்து வெளியேறி விடும். ரோசெட்டா விண்கலம், மீண்டும் பூமியின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கிச் செல்லும்.
Average Rating