விலாசம் (திரைவிமர்சனம்)!!
பிறக்கும் போதே பெற்றோர்களால் கைவிடப்பட்ட பவன், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து வருகிறார். சிறிது காலத்திலேயே அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையில் வளர்ந்து பெரியவனாகும் பவன், பணத்துக்காக எதையும் செய்ய துணியும் ஆளாக உருவெடுக்கிறார்.
இந்நிலையில், ஒருநாள் இரவு நாயகி சனம் ஷெட்டியை மர்ம கும்பல் ஒன்று துரத்தி வருகிறது. அப்போது, அவள் தப்பிப்பதற்காக பவன் இருக்கும் இடத்திற்கு வருகிறாள். தன்னிடம் தஞ்சமடையும் சனம் ஷெட்டியை அடைய விரும்புகிறான் பவன்.
அவனிடமிருந்து தப்பிப்பதற்காக தனது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக நான் அங்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறாள் சனம் ஷெட்டி. இதனால் அவள் மீது பரிதாபப்படும் பவன், அவளுடைய அப்பாவின் உடல் சரியானதும் தன்னை தேடி வரவேண்டும் என்று கூறி அவளை அனுப்பி வைக்கிறான்.
தன் மீது பரிதாபப்பட்ட பவன் மீது சனம் ஷெட்டிக்கு காதல் வருகிறது. இதற்கிடையில், தொழில் விரோதம் காரணமாக பவனை ஒரு கொலை வழக்கில் சிக்க வைக்கிறார் அருள்தாஸ். இதற்கு அந்த ஏரியா எஸ்.ஐ.யும் உடந்தையாக இருக்கிறார்.
இந்த கொலையை பவன் செய்யவில்லை என்பதை அதே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் நரேன் தெரிந்து கொள்கிறார். அவனை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
அப்போது, பவனை விடுவிப்பதற்காக வக்கீலுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறாள் சனம். வெளியே வரும் பவனிடம், நீ உன் குடும்பத்தோடு வாழ்ந்து காட்டு. அப்போது தான் உனக்கென்று ஒரு விலாசம் கிடைக்கும் என்று அறிவுரை கூறி அனுப்புகிறார் நரேன்.
அதன் பிறகு, சனத்தின் உதவியோடு தன்னை அனாதையாக்கிவிட்டு சென்ற பெற்றோர்களை பவன் தேட ஆரம்பிக்கிறார். இறுதியில் பவன் பெற்றோர்களை கண்டுபிடித்தாரா? விலாசம் இல்லாத பவன், தனக்கென்று ஒரு விலாசத்தை ஏற்படுத்திக் கொண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
பெற்றோர்கள் செய்யும் தவறினால், குழந்தைகளின் எதிர்காலம் எப்படி கேள்வி குறியாகிறது என்பதை மிகவும் அழகாய் விலாசத்தின் மூலம் விவரித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜா கணேசன்.
விலாசம் இல்லாதவர்களுக்கு விலாசம் வேண்டும். அப்போது தான் அவன் மனிதனாக வாழ முடியும் என்றும் விலாசம் உள்ளவர்கள், இல்லாதவர்களுக்கு விலாசம் ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கருத்தையும் சொல்ல வந்த இயக்குனருக்கு சபாஷ்.
பல படங்களில் சிறு வேடம் ஏற்று திறமையாக நடிப்பு திறனை வெளிப்படுத்தி வந்த பவன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியிருக்கிறார். சண்டைக்காட்சி, சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்.
நாயகி சனம் ஷெட்டிக்கு படத்தில் பொறுப்பான கதாபாத்திரம். அதில் தன் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்தாஸ், நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டிய நான் கடவுள் ராஜேந்திரன் இப்படத்தில் காமெடியில் மிரட்டியிருக்கிறார். இவருக்கு காமெடி கதாபாத்திரம் நன்றாகவே பொருந்துகிறது.
ரவி ராகவ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கலாம். யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ‘விலாசம்’ சரியானது.
Average Rating