விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! -ஹிருத்திக் போஸ் நிஹாலே (சிறப்புக் கட்டுரை)..!!

Read Time:19 Minute, 32 Second

wigneswaranதமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கை விட்டு அகற்றப் பட்டிருந்தனர். அது செயல்வீரர்களின் காலம். பேசுபவர்களிற்கான இடம் ஓமந்தைக்கு அப்பால்த் தான் இருந்தது.

இப்பொழுது அந்த நிலை மாறிவிட்டது. பேச்சாளர்கள் மீளவும் அரங்கிற்கு திரும்பி வந்து விட்டார்கள். அரங்கைவிட்டு அவர்கள் விரட்டப்பட்ட போது, இளமையின் இறுதியில் இருந்தவர்கள், வாழ்வின் இறுதியில் மீண்டும் அரங்கிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக விக்கி இருக்கிறார். தினம்தினம் பக்கம்பக்கமாக பேசுகிறார்.

முன்னர் ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆன்மீக, புராண பேச்சுக்களிற்கு கம்பன் கழகம் கொடிகட்டி பறந்தது. இப்பொழுது கம்பன்கழகம் கொழும்பில் மையம் கொண்டு விட்டது.

அந்த இடத்தை விக்கி பிடித்து விட்டார். ஆன்மீகம், புராணம், அரசியல் எல்லாம் கலந்து ஒரு கலவையை அவர் தினம்தினம் வாசிக்க, பத்திரிகைகளும் சளைக்காமல் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

விக்கி அரசியலிற்கு வரும் முன்னர் பழுத்த ஆன்மீகப்பழமாக இருந்தார். ஓய்வுபெற்ற நீதியரசர் வேறு. அவரது பதவி, திருநீறு உருத்திராட்சமாலை சகிதமான அவரது தோற்றம் என்பன தமிழ்மனங்களில் அவர் பற்றிய வலுவான பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

எல்லாக் காலங்களிலும் தமிழர்களிற்கு அரசியலில் தனிமனித பிம்பங்கள் இருந்து கொண்டு தான் இருந்தன. இந்தப் போக்கே ஆபத்தானது என்பது தான், காலம் தமிழர்களிற்கு எடுத்துச் சொன்ன பாடம். ஆனால், தமிழர்கள் தான் யாரிடமும் பாடம் கற்பதில்லையே.

விக்கி நீதியரசராக இருந்ததன் அடிப்படையில், அவரது நாவிலிருந்து வருவதெல்லாம் நீதியின் சொற்கள் தான் என்ற மாயை இன்னும் சராசரி தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது. அவரது தோற்றம், நீதியரசர் என்ற பிம்பத்தை விட்டுவிடலாம், அவரது முதுமை- நீண்ட வாழ்வின் அடிப்படையில்- வாழ்க்கை மற்றும் சமூகம் குறித்த விடயங்களில் அவர் சொல்லும் கருத்துக்கள் ஏற்புடைவையாகவும், அறநெறியின் பாற்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், அதே அளவுகோல் அரசியலரங்கிற்கும், அங்கு அவர் வெளிப்படுத்தும் கருத்துக்களிற்கும் பொருத்தமானதா என்பதே விவாதத்திற்குரியது.

வாழ்வு மற்றும் சமூகம் குறித்த விக்கியின் கருத்துக்களின் ஆழமும், முதிர்ச்சியும் அரசியல் கருத்துக்களில் இல்லையென்பதே நமது வாதம். அதனை எடுத்த எடுப்பில் வீசும் கல்லாக அல்லாமல், தர்க்கபூர்வமாக சொல்ல விளைகிறோம்.

விக்கி தமிழரசியலரங்கில் புதியவர். இன்னும் தெளிவாக அரசியல்க் கலைச்சொல்லில் சொன்னால், புதிய போராளி. கிட்டதட்ட யுத்தத்தின் இறுதியில் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்ட ஒரு புதிய போராளியைப் போன்றவர் தான். அவரையும் யாரோ வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனை அவரும் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்.

கட்டாயமாக பிடிக்கப்பட்டவர் தானெனினும், அவரிற்கிருந்த கல்விப்புலம் மற்றும் சமூதாய அந்தஸ்தினடிப்படையில் அவர் இயல்பாகவே அரங்கில் முன்னிலை பெற்று விட்டார். அல்லது, அவை இல்லாத மற்றவர்கள் சற்று ஒடுங்கி பினவாங்கி விட்டார்கள்.

இந்த முன்னிலை அவரை ஒரு அரசியல் ராஜாவாக்கி விட்டது. தன்னை தனித்துவமானவனாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்த முனைகிறார். தனது பயணம், தமிழ் அரசியலரங்கில் புதியதொரு பாதையென நினைக்கிறார்.

இதுவரை பயணித்த தீவிர, உணர்ச்சிகர மற்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி அரசியலை தவிர்த்த வேறொரு பாதையில் தனது தலைமையிலான அரசு செல்வதாக அவர் நினைக்கிறார். அவரது அண்மைக்கால பேச்சுக்கள் அதனைத்தான் வெளிப்படுத்துகின்றது.

ஆனால், ஈழத்தமிழர்களின் அரசியல் அனைத்து பாதைகளிற்குள்ளாலும் சென்று விட்டது என்பதே யதார்த்தமாகும். செல்வநாயகத்தின் அரசியல் இறுதிக்காலம் என்பது, தமிழ்அரசியலில் யாருமே வெளிப்படுத்த முடியாத மென்போக்குக் காலம். அந்த காலப்பகுதியில்த்தான் தமிழரசுக்கட்சி அதிகமும் அகிம்சைவழியிலான போராட்டங்களில் ஈடுபட்டது.

அந்தக் காலம் ஒரு வரலாற்று பதிவாக மட்டுமே உள்ளது. அதற்கான விளைச்சல் எதுவும் கிடைக்காத நிலையில்த் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். உலகத்தில் மிகத்தீவிரமான கெரில்லா இயக்கமும் ஈழத்தமிழர்களின் இயக்கம் தான். இந்த இரண்டு எதிரெதிர் நிலைகளிற்கிடையில் நழுவித்திரிந்த பாணிக்கும் ஏராளம் உதாரணம் உள்ளது.

விக்கி இதில் முதல் வகை அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்துகிறார். தன்னை தனித்துவமான அகிம்சைவாதியென அவர் காட்ட மிகப்பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளிற்கு அறிவுரைகூறும் பாணியிலான அவரது பேச்சுக்கள் அதனை வெளிப்படுத்துகின்றது. இதன் இன்னொரு வடிவம்தான் அவர், அண்மையில் தொடர்ந்து வலியுறுத்தி வரும், ஆயுத இயக்கங்கள் பற்றிய பார்வை.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களுடன் தன்னால் சேர்ந்திருக்க முடியாதென அவர் கடந்த வாரம் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார். தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மற்றும் ஆயுத இயக்கங்கள் பற்றி மிக ஆதரவு மற்றும் எதிர்நிலை என இரண்டு நிலைகளிலும் நின்று கடந்த ஒருவருடத்தில் அவர் கருத்துக் கூறிவிட்டார்.

தேர்தல் சமயத்தில் அவர் விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் புகழ்ந்து பேசியதன் எதிரொலி இன்னும் அடங்கவில்லை. அந்தப் பேச்சுக்களை பார்த்து உண்மையில் நெடுமாறனே அரண்டிருப்பார். எனினும் தேர்தல் முடிந்த கையுடன் அவர் யு ரேர்ன் அடித்து, ஆயுத போராட்டம் தொடர்பான எதிர்மறைக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

ஆயுதஇயக்கங்கள் பற்றிய அவரது அடிப்படையான கருத்துக்கள் அதுவாக இருந்திருக்கலாம். தேர்தலை கருதி நெடுமாறன் பாணிப்பேச்சுக்களை எடுத்திருக்கலாம். அதனை விட்டு விடுவோம்.

வடக்கு முதலமைச்சராக வருபவர் அல்லது தமிழர்களின் பிரதிநிதிகளாக வருபவர்கள் அனைவரும் ஆயுதப்போராட்ட வழிவந்தவர்களாகவோ அல்லது அதனை கேள்விக்கிடமின்றி ஆதரிப்பவர்களாகவோ இருக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தங்கள் கிடையாது. ஆனால், எந்த வழியினால் வந்தவராயினும். வராத வழியை விமர்சனம் செய்ய முடியாதென்பதே நமது வாதம்.

ஏனெனில், ஆயுத இயக்கங்களின் பார்வையில், ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுக்காதவர்கள் பற்றி என்னவிதமான பார்வை உள்ளது? யார்யாரோ உயிரைக்கொடுத்து போராடிய சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் அதனை பயன்படுத்தி படித்து, பட்டம் பெற்று, பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள் என்பதையொத்த அபிப்பிராயம் இருந்தது.

ஆனால் அவர்கள் அதனை எப்பொழுதும் பத்திரிகைகளில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. பொதுக்கூட்டங்கள் வைத்து பழிச்சொல் பேசிக் கொண்டிருக்கவில்லை. புதுவை இரத்தினதுரை போன்ற சிலர் மட்டுமே பகிரங்கத்தில் பேசினார்கள்.

ஆனால் கவிஞர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்தை நாம் ஒரு அரசியல் அளவுகோலாக தமிழ்ச்சூழலில் கொள்ள முடியாதென்பதுதானே துயரமான யதார்த்தம். அவர்கள் தமது அரசர்களை திருப்பதிப்படுத்துவதாக நினைத்து, வேடிக்கைகள்தான் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆயுத இயக்கங்கள் காட்டிய இந்த அரசியல் முதிர்ச்சி, படித்து பட்டம்பெற்ற, அறிவார்ந்தவர்களாக தங்களை கருதிக் கொள்பவர்களின் அரசியலில் இல்லாமல் போனதென்பது ஆழமான சிந்தனைக்குரியது. நமது அறிவாளிகள் இன்னும் அரசியல்சூழலிற்கு பழக்கப்படவில்லையா அல்லது அரசியல்நாகரிகத்தை கற்றுக் கொள்ளவில்லையா?

விக்கி கூறுவதைப் போல, அவர் ஆயுத இயக்கங்களை சேர்ந்திருக்க முடியாமல் தமிழரசுக்கட்சியை சேர்ந்திருக்கப் போகிறார் என்று வைத்து கொள்வோம். இதன் அர்த்தம் என்ன? தமிழரசுக்கட்சி அகிம்சை வழியிலான, ஆயுதம் ஏந்தாத கட்சி என்பதுதானே?

வரலாறு யாராலும் எழுதப்பட்டதல்ல. அது தன்னைத்தானே எழுதிக் கொண்டது. நூறு வருடங்களல்ல, ஒரு நாற்பது வருடங்களின் முந்தைய வரலாற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒரு குற்றமான காரியம் என வைத்துக் கொண்டால்க்கூட, அதற்காக இரண்டு விதங்களில் தமிழரசுக்கட்சி மீது குற்றச்சாட்டு வைக்கலாம்.

முதலாவது, தமிழ் ஆயுத இயக்கங்களின் உருவாக்கத்தின் பின்ணியில் தமிழரசுக்கட்சிதான் இருந்தது. மென்முறையிலான போராட்டங்களினால் பலனில்லையென கொந்தளித்துக் கொண்டிருந்த இளைஞர்களை, தமது அரசியல் எதிரிகளை வேட்டையாட தமிழரசுக்கட்சி பயன்படுத்தியது வரலாறு.

ஆயுதப்போராட்ட உருவாக்கத்தின் பின்னணியில் தமிழரசுக்கட்சிதான் இருந்தது என கூறி, ஒரு வரலாற்றுக் காலகட்டத்தை நாம் குறைத்து மதிப்பிட முயலவில்லை. எனினும், அந்த காலத்தில் குறிப்பிட்ட ஒருதொகுதியினரையாவது அந்த வழியில் திசைதிருப்பி விட்டதில் தமிழரசுக்கட்சி பிரமுகர்களிற்கும் பங்குண்டு. இது முதலாவது.

இரண்டாவது, தமிழர்களின் போராட்டத்தை ஒரு காலத்தில் தலைமை தாங்கிய தமிழரசுக் கட்சியினரின், செயலற்ற தனமையும் ஆயுதப்போராட்ட உருவாக்கத்தில் முக்கிய காரணங்களிலொன்று. (அதே செயலற்ற தமிழரசுக்கட்சி மீளவும் அரங்கிற்கு வந்ததும், ஆயுதப் போராட்ட வழிமுறை தோற்றதும் வேறு விடயம்)

நியாயத்தினடியப்படையில் பார்த்தால், இந்த காரணங்களினால் தமிழரசுக்கட்சி ஆயுதப்போராட்ட மரபை நிராகரிக்க முடியாது. ஒரு அர்த்தத்தில், ஆயுத இயக்கங்கள் அவர்களின் தத்துப் பிள்ளைகள். பித்துப் பிள்ளையெனிலும், தத்தப்பிள்ளையை பராமரிக்கவோ, அல்லது வழிப்படுத்தவோ வோண்டியது அவர்களின் கட்டாய கடமை.

தற்போதைய நிலையில் தமிழர்களின் பிரதான தேவையே ஒரு மகத்தான தலைமையே. மகத்தான தலைமைகள் அனைவரதும் தலைவர்களாக இருப்பார்கள். பகுதி பகுதியாக தலைவர்களாக இருப்பவர்கள் மகத்தான தலைவர்களாவதில்லை.

பிரபாகரன் மகத்தான தலைவரா இல்லையா என்ற விவதத்திற்குள் இந்த பத்தி நுழையவில்லை. எனினும், தன்னால் அரங்கைவிட்டு விரட்டப்பட்ட தமிழரசுக் கட்சியினருக்கும் தலைவராக அவரால் பின்னாளில் இருக்க முடிந்தது.

ஆயுத வழிமுறை சரியா, அகிம்சை வழிமுறை சரியா என்ற விவாதங்கள் பட்டிமன்றங்களிற்கு தேவையாயின் பொருத்தமானவையாக இருக்கலாம். ஆனால், நமது தற்போதைய சூழலிற்கும் பொருத்தமானதல்ல. அப்படியான விவாதங்களிற்கு வரலாற்றிலும் இடமில்லை. ஏனெனில், அது காலம் எழுதியகதை. அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டமானது ஒரு வரலாற்று தொடர் நிகழ்வு.

தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட சில இளைஞர்கள் ஓரிரவில் துப்பாக்கி ஏந்தியிருக்கில்லை. ஆயுதப்போராட்டம் ஒரு குற்றமென்று வைத்துக் கொண்டால்க்கூட, அப்போது அதன் முதலாவது குற்றவாளியாக தமிழரசுக்கட்சியே இருக்கும். ஏனெனில், தமிழரசுக் கட்சியினர் தான் வரலாற்றை அதை நோக்கி நகர்த்தினார்கள்.

வடக்கு கிழக்கில் வாழ்ந்த எண்பது வீதத்திற்குமதிகமான தமிழர்கள் ஆயுதப் போராட்டத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் தான். அவர்களும் வாக்களித்து தான் விக்கி முதலமைச்சரானார். எப்படி ஆயுதப்போராட்ட இயக்கங்களும் அழைத்து தேர்தலில் போட்டியிட சம்மதித்தாரோ அப்படி.

அப்படியாயின் விக்கி 20 வீத தமிழர்களிற்கு மட்டுமே முதல்வராக இருக்க விரும்புகிறாரா?

விக்கியின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் நிறையக் கேள்விகள் எழுப்பலாம். விக்கி தன்னையொரு அகிம்சைவாதியென திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார். உண்மையில் விக்கி தற்போத கடைப்பிடிப்பது அகிம்சையே அல்ல. அதற்கு இனித்தான் வேறொரு பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

அகிம்சையெனப்படுவது அசமந்தமாக இருப்பதோ, போராட்டங்களில் ஈடுபடாமல் இருப்பதோ அல்ல. செல்வநாயகம் அகிம்சைவழியில் போராட்டங்கள் நடத்தியபோது பல தடவைகள் அடித்து நொருக்கப்பட்டிருக்கிறார். போதுமானளவு இரத்தத்தை சிந்தியுமிருந்தார்.

ஆனால் விக்கி அந்த இரகமல்ல. அவர் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராக, அறிவார்ந்தவராக, வழிநடத்துபவராக கருதுகிறார். அவர் இன்னும் நீதியரசர் மனநிலையிருந்து வெளிவரவில்லை. இனியும் வெளிவருவார் என தோன்றவில்லை.

அண்மையில் கைதடியிலுள்ள மாகாணசபை கட்டிட தொகுதிக்கு வெளியில் மாகாணசபை உறுப்பினர்களின் போராட்டமொன்று நடந்தது. அப்பொழுது விக்கியையும் போராட்டக்காரர்கள் அழைத்தார்கள். விக்கி அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் சொன்ன பதில், ”நான் நீதியரசராக இருந்தவன். சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து இப்படி வீதிப்போக்குவரத்தை மறிக்க முடியாது”.

எந்த மரபையும், சட்டத்தையும், விதிகளையும் மீறாமல் போராட்டம் நடத்துவதெனில், அவர் ஆனந்தசங்கரியின் பாணியில் கடிதங்கள் தான் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.

தமிழ் அரசியலரங்கில் புதியபாதையில் செல்வதாக நினைக்கும் விக்னேஸ்வரனின் அதிகபட்ச போராட்டமெல்லாம், அரசின் குறைகளை கூட்டங்களில் பேசுவது மட்டும் தான். அதற்கு அப்பாலான ஒரு கட்டம் அவரிற்கு நிச்சயம் கிடையாது.

தற்போது தேக்கமடைந்துள்ள தமிழ்அரசியல் போராட்டசூழல் மேலும் நகருமெனில், அது நிச்சயம் இப்போதைய வடக்கு முதல்வர் உள்ளிட்ட பேச்சளவிலான தமிழ்அரசியல்வாதிகளை கடந்துதான் செல்லும். எண்பதுகளின் மத்தியில் தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் ஏற்றதைப் போன்ற துரதிஸ்டவசமான பாத்திரங்களை அவர் ஏற்கவும் வேண்டி வரலாம்..!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) அமரர் “புளொட்” தோழர் மகேஸ் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்…!!
Next post மாணவியை ரகசிய திருமணம் செய்ய அழைத்து வந்த வாலிபர்: மனைவியே போலீசில் ஒப்படைத்தார்!!