மாணவியை ரகசிய திருமணம் செய்ய அழைத்து வந்த வாலிபர்: மனைவியே போலீசில் ஒப்படைத்தார்!!
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 7.10 மணியளவில் டெல்லியில் இருந்து வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கிய இளம்ஜோடியை ஒரு கும்பல் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு ரோந்து வந்த ரெயில்வே போலீசார் இளம்ஜோடியையும், தகராறில் ஈடுபட்ட கும்பலையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.புருசோத்தமன் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பிடிப்பட்ட வாலிபர் பெயர் வினோத்குமார் என்றும், அந்த பெண்ணின் பெயர் நக்மா(வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும் தெரியவந்தது. இருவரும் ரகசிய திருமணம் செய்ய வந்தபோது, வினோத்குமாரின் மனைவி கவிதா தனது உறவினர்களுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கவிதாவே, தனது கணவர் வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரெயில்வே போலீசாரிடம் கூறினார்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்கள் வருமாறு:-
சென்னை கொடுங்கையூர் சவுந்தர்யா நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார்(27). இவர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்த கவிதா (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வினோத்குமார், வேலைபார்க்கும் பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தவர் நக்மா(18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர். இவரது தந்தை சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மாணவி நக்மா பள்ளிக்கு செல்லும்போது பார்த்த வினோத்குமார் அவர் மீது காதல் வயப்பட்டார். ஆசைவார்த்தைகள் கூறி நக்மாவை மயக்கி தனது காதல் வலையில் விழவைத்தார்.
அதன்பின்னர் வினோத்குமாரும், நக்மாவும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். வினோத்குமார் திருமணமானவர் என்பது தெரிந்தும், நக்மா தொடர்ந்து வினோத்குமாரை காதலித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நக்மாவின் தந்தை பணி மாறுதலாகி தனது சொந்த ஊரான டேராடூனுக்கே குடும்பத்தோடு சென்றுவிட்டார். இதனால் நக்மாவை காணாமல் வினோத்குமார் தவித்தார். பின்னர் விஷயம் அறிந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் டேராடூன் சென்று நக்மாவை சந்தித்துவிட்டு வந்தார்.
இதுபற்றி தெரிந்ததும் வினோத்குமாரை அவரது மனைவி கவிதா கண்டித்தார். இதனால் கவிதாவை விவாகரத்து செய்துவிட்டு நக்மாவை திருமணம் செய்ய வினோத்குமார் முடிவெடுத்தார். அதன்படி 2 நாட்களுக்கு முன் நக்மாவை பார்ப்பதற்கு வினோத்குமார் டேராடூன் சென்றார். திட்டமிட்டபடி யாருக்கும் தெரியாமல், நக்மாவை அழைத்துக்கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டு வந்தார்.
இதற்கிடையில் கவிதா, நக்மாவின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு, நக்மா-வினோத்குமார் காதல் விவகாரத்தையும், இருவரும் திருமணம் செய்ய இருப்பது பற்றியும் விளக்கமாக கூறினார். கவிதா கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த நக்மாவின் தந்தை தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு ரெயில் நிலையத்துக்கு விரைந்தார். ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட்டுவிடவே அவர் டேராடூன் போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் கொடுத்தார்.
இந்தநிலையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தனது கணவர் வினோத்குமார், நக்மாவை அழைத்து வருவதையறிந்து, கவிதா தனது உறவினர்கள் 5 பேருடன் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை முதலே காத்திருந்தார்.
ரெயில் வந்ததும், அதில் இருந்து இறங்கிய வினோத்குமார்-நக்மா ஜோடியை சுற்றிவளைத்து பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தான் போலீசாரிடம் சிக்கினர். மேலும், வினோத்குமாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், அவரும், நக்மாவும் உல்லாசமாக இருந்த காட்சியும் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கு வினோத்குமார் அனுப்பியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. தில்லை நடராஜன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ஆர்.புருசோத்தமன் டேராடூன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தனது மகளை அழைத்துச் செல்வதற்காக அவருடைய தந்தை சென்னை புறப்பட்டு வருகிறார். தற்போது நக்மா புரசைவாக்கத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ‘கவுன்சிலிங்’ அளிக்கப்பட்டு வருகிறது.
வினோத்குமார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனது 15 பவுன் நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் மாதவரம் போலீசில் கவிதா ஏற்கனவே புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து வினோத்குமாரை மாதவரம் போலீசில் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கவிதா கூறியதாவது:-
நானும், வினோத்குமாரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணமான சில மாதங்களிலேயே நான் கர்ப்பம் அடைந்தேன். அன்றிலிருந்தே என்னிடம் அன்பாக பழகுவதை அவர் நிறுத்திக்கொண்டார். அதைக்கூட நான் பெரிதாக நினைக்கவில்லை. அவர் பல பெண்களிடம் பழகுவதாக என் உறவினர்கள் அனைவரும் கூறினார்கள். நான் முதலில் அதை நம்பவில்லை, போகப்போக அவரை பற்றி வந்த தகவல்கள் உண்மைதான் என அறிந்தேன்.
பள்ளி மாணவியுடன் அவர் பழகி வருவதை நான் அறிந்தேன். இந்த தொடர்பை துண்டித்துவிடுமாறு அவரை கெஞ்சினேன். ஆனால், வினோத்குமார் எனது உறவை துண்டிக்க முயன்றார். நக்மாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். அதனால் ஒழுங்காக விவாகரத்துக்கு சம்மதிக்குமாறு மிரட்டினார். விவாகரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், ‘உன் முன்னாடியே நான் அவளை திருமணம் செய்து காட்டுகிறேன் பார்’ என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறினார். வினோத்குமார் டேராடூன் செல்வதை, அவரது நண்பர்கள் சிலர் மூலம் அறிந்தேன். வினோத்குமாரின் டைரியிலிருந்த நக்மாவின் தந்தை செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினேன்.
இவ்வாறு கவிதா கூறினார்.
Average Rating