ஓக்டோபர் 29ம் திகதி மலையக பெருந்தோட்ட மக்கள் பாதுகாப்புத் தினமாக பிரகனப்படுத்தப்பட வேண்டும்!!
மீறியபெத்தை மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதையும், அநாதரவாக விடப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உறுதியளிக்கப்பட்ட நடவக்கைகள் திருப்திகரமானதாக உள்ளதா என்பதை மீளாய்வு செய்யவும், தற்போது மேலெழுந்துள்ள பெருந்தோட்டமக்களின் காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான கோரிக்கைகளை புதுப்பிக்கவும் வசதியாக அனர்த்தம் நிகழ்ந்த ஒக்டோபர் 29ம் திகதி ´மலையக பெருந்தோட்ட மக்கள் பாதுகாப்புத் தினமாக´ பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என தோட்ட கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் (பிரிடோ) கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான பிரிடோ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.
கொஸ்லந்தை மீறியபெத்தை பேரனர்த்தம் இலங்கை மக்கள் சகலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் இந்த அனர்த்தத்தை மட்டுமல்ல மக்களின் அவல நிலையை அறிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் அமெரிக்கா, இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஐநா சபை என்பனவும் உதவ முன்வந்துள்ளன.
இந்த உதவிகள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம். தற்போது இந்த மக்களுக்காக நாடுமுழுவதும் பிராத்தனைகள் நடைபெறுவதுடன் அவர்களுக்காக துக்கதினம் அல்லது கறுப்புத் தினமாக அனுட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. இவை அனைத்துமே நல்ல நோக்கத்தோடு செய்யப்படுபவைதான். அவ்வாறான முயற்சிகள் மெச்சப்படவேண்டும்.
ஆனால் அதேவேளையில் பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் பாதுகாபான வீட்டு உரிமை வழங்கப்படாமையினால் தான் இந்த அவலங்கள் நோந்துள்ளன என்ற விடயத்தை நமது நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் கொள்கை வகுப்பாளருக்கும் இந்த சம்பவம் இடித்துரைத்துள்ளது. வீடு காணி உரிமைக்காக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உகந்த தருணம் இது என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த மக்களுக்கு நிலம் ஒதுக்கப்ட்டு வசதியான வீடுகள் கட்டித்தரப்படும், அதற்காக நிதி ஒதுக்கப்பட்டள்ளது என அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. மண் சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிரந்தர வீடுகளில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், அநாதரவான 75 பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு அரசாங்கம் முழு உத்தரவாதமும் அளிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் நல்ல முயற்சிகள் நம்பிக்கை தரும் ஆனால் கடந்த காலங்களில் பல அனர்த்தங்களின் போது உடனடியாக அளிக்கப்ட்ட வாக்குறுதகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். பொதுவாக இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பின்னர் இந்த மக்களின் பிரச்சனைகள் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மறக்கப்பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது.
இவ்வாறான விடயங்களை முன்னிலைப்படுத்தி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்று தொடர்ந்து பின்னூட்டல் செய்யும் திறமையும், அக்கறையும் நமது மலையகதலைவர்களிடம் இல்லை என்பது கடந்தகால அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடமாகும். அரசு தரும் வாக்குறுதிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவை நிறைவேற்றப்படுவதை நிச்சயப்படுத்தும் பொறுப்பு மலையக அரசியல் தலைவர்களுக்கு உண்டு.
மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு அவர்களுக்கு சொந்தநிலத்தில் பாதுகாப்பான வீடுகள் அமைத்துக்கொடுப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். அந்த மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விசேடமாக அநாதரவாகியுள்ள பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ச்சியாக கண்பாணிப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த தொடர் கண்காணிப்புக்களை செய்வதை உறுதிப்படும் நோக்கத்தோடு இந்த அனர்த்தம் நிகழ்ந்த ஒக்டோபர் 29ம் திகதி ´மலையக பெருந்தோட்ட மக்கள் பாதுகாப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என பிரிடோ நிறுவனம் கோரிக்கை விடுக்கிறது.
வருடா வருடம் இந்த தினம் நினைவு நாள் அனுட்டிக்கப்படும் போது மக்களுக்கு அளிக்கப்பட் வாக்குறுதிகள் நிறைவேற்றபப்பட்டு மக்களுக்கு சொந்த நிலத்தில் பாதுகாப்பான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதா, அந்த மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படுத்தப்படுள்ளதா, விசேடமாக அநாதரவாகியுள்ள பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடடிவடிக்கை திருப்திகரமானதாக உள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பவும் தொடர்ச்சியாக கண்பாணிப்பு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்.
இந்த அனர்த்தத்தையும் அதன் விளைவாக ஏற்பட வேண்டிய மாற்றங்கள் நினைவுபடுத்தி வலியுறுத்த சந்தர்ப்பம் ஏற்படும். அதுமட்டுமன்றி பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுக்கான உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக வலியுறுத்தவும் வசதியேற்படும்.
இந்த பின்னணியில் ஒக்டோபர் 29ம் திகதியை ´மலையக பெருந்தோட்ட மக்கள் பாதுகாப்புத் தினமாக பிரகடனப்படுத்தி பிரபல்யப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரிடோ நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.
Average Rating