சேலம் அருகே ரெயிலில் வந்த ஆந்திர இளம்பெண் மிரட்டி கற்பழிப்பு: வாலிபர் கைது!!
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைப்பார்த்து வருகிறார். கோவில் திருவிழாவுக்கு செல்வதற்காக இவர் சொந்த ஊருக்கு தன்னுடன் வேலைபார்க்கும் உறவினர்கள் 6 பேருடன் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பெங்களூருக்கு முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்தார்.
சேலம் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு சற்று முன்பாக உள்ள சிவதாபுரம் பாலம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் ரெயில் வந்தது. அங்கு சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்பட்டபோது திவ்யாவிற்கு வாந்தி வருவது போன்று இருக்கவே, அவர் ரெயில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முயன்றார்.
அப்போது அவரது பர்ஸ் தவறி கீழே விழுந்தது. உடனே அந்த பர்சை எடுக்க திவ்யா ரெயிலில் இருந்து இறங்கினார். அந்த நேரத்தில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் ரெயிலில் ஏற முடியாமல் அந்த பெண் பரிதவித்தார். அதே நேரத்தில் அந்த ரெயில் பெட்டியின் மற்றொரு படிக்கட்டு பகுதியில் குடிபோதையில் இருந்து வாலிபர் ஒருவரும் தவறி விழுந்தார். இருட்டில் அந்த பெண்ணை பார்த்த அவருக்கு விபரீத ஆசை ஏற்பட்டது.
உடனே அவர் அந்த பெண்ணை மிரட்டி அருகில் இருந்த புதர் பகுதிக்கு அழைத்துச்சென்று கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு நேரத்தில் அங்கிருந்து செல்ல முடியாது என கருதிய அந்த வாலிபர் அங்கேயே இருந்தார். அங்கிருந்து சென்றால் அந்த வாலிபர் தன்னை கொன்றுவிடுவாரோ? என்ற பயத்தில் திவ்யாவும் அங்கேயே இருந்துள்ளார்.
அதிகாலை 4 மணியளவில் திவ்யா அங்கிருந்து ரெயில்வே தண்டவாளம் வழியாக சேலம் நோக்கி வந்தார். இதேபோல் அந்த வாலிபரும் வந்தார். அப்போது சிவதாபுரம் ரெயில்வே ‘கேட் கீப்பர்’ சீனிவாசன் அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்தார். அப்போது திவ்யா ‘கேட்கீப்பர்’ அறைக்குள் புகுந்து கதறி அழுதார். அவரது முகத்தில் நகக்கீறல்கள் இருந்தது.
திவ்யா தெலுங்கில் பேசியதால், அந்த பகுதியில் உள்ள தெலுங்கு பேசும் பெண் ஒருவரை ரெயில்வே ‘கேட் கீப்பர்’ அழைத்து வந்து அவர் மூலம் திவ்யாவிடம் விசாரித்தார். அப்போது திவ்யா தான் கற்பழிக்கப்பட்டது குறித்து கூறி கதறி அழுதார். இதையடுத்து அந்த வாலிபரை கேட் கீப்பர் அறையில் பூட்டி வைத்த கீப்பர் சீனிவாசன் உடனடியாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஹரீஷ் (24) என்பது தெரியவந்தது. அவர் குடிபோதையில் இந்த தவறை செய்து விட்டதாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் திவ்யா மற்றும் கைது செய்யப்பட்ட வாலிபர் ஹரீசை சேலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட ஹரீஷ் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
உறவினர்களுடன் வந்த திவ்யா ஒரு பெட்டியிலும் மற்றவர்கள் அடுத்த பெட்டியிலும் பயணித்தனர். சேலம் ரெயில் நிலையம் அருகே திவ்யா இறங்கியது உறவினர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் திருப்பத்தூருக்கு ரெயில் வந்தபோது தான் திவ்யா சேலத்தில் இறங்கியது தெரியவந்தது. இதனால் பரிதவித்த அவர்கள் நேற்று சேலத்திற்கு வந்தனர்.
Average Rating