ராஜீவ் கொலை: முதல் முறையாக ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்த விடுதலைப் புலிகள்!
ராஜீவ் காந்தி கொலை ஒரு வரலாற்று துயரம். அந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பகிரங்கமாக விடுதலைப் புலிகள் ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ஸ்ரீபெரும்புதூரில் டந்த பொதுக் கூட்டத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு உறுதி செய்தது. ஆனால் புலிகள் அமைப்பு இதை மறுத்தே வந்தது. இந் நிலையில் முதல் முறையாக ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக என்.டி.டி.விக்கு லண்டனில் அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், இலங்கையில் இனக் கலவரம் வெடித்தபோது எங்களை மக்களை இலங்கைப் படைகள் கொன்று குவித்து வேட்டையாடியபோது, மக்களைப் பாதுகாக்க விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ஒரு கட்டத்தில் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆயுத¬ம் வழங்கியது.
ஆனால் தனித் தமிழ் ஈழம் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்தியா எங்களுக்கு உதவவில்லை. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே இந்தியாவிடம் இருந்தது.
1983ம் ஆண்டு முதல் 1987 வரை இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு இருந்தது. இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என இந்தியா விரும்பியது. இதன் பொருட்டே இந்தியஇலங்கை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் தான் சிக்கல் ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கவில்லை. காரணம் தமிழர்களின் அரசியல் உணர்வுகளை திருப்திப்படுத்துவதாக அது அமையவில்லை. இந்தியாவில் இருப்பது போன்ற பெடரல் முறையிலான அதிகாரப் பகிர்வு கொண்ட ஆட்சியை இந்தியா சிபாரிசு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நாங்கள் சாதகமாக பதில் அளித்திருப்போம்.
ஆனால் மாகாண நிர்வாக முறையை இந்தியா சிபாரிசு செய்தது. அதை நாங்கள் ஏற்கவில்லை. தமிழர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக அமையவில்லை என்பதால் தான் ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரித்தோம். ஆனால் அது மட்டுமே ராஜீவ் கொலைக்குக் காரணம் அல்ல.
ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரித்ததால் எங்களுக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவுகள் அதிகரித்து விட்டன. விடுதலைப் புலிகளை ஒடுக்க இந்தியஅரசு படைகளை அனுப்பியது. 2 ஆண்டு இந்திய படைகளுடன் நாங்கள் கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டோம்.
பின்னர் இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி படையை விலக்கிக் கொண்டது. அதன் பிறகுதான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அது ஒரு துயர சம்பவம்தான், வரலாற்றுத் துயரம். அதற்காக நாங்கள் வருந்துகிறோம், பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும், இந்திய அரசின் நலனுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று நாங்கள் உறுதியளித்திருக்கிறோம். ராஜீவ் கொலைக்குப் பின்னர் இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் விலகி விட்டது. இந்தப் பிரச்சினையில் இந்தியா தீவிர பங்கெடுக்க வேண்டும்.
கடந்த 15ஆண்டுகளாக இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடாமல் உளளது. இப்போது இலங்கையில் மீண்டும் ரத்தக் களறி ஏற்பட்டுள்ளது. இந்திய அரசுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். இதுதொடர்பாக முடிவெடுக்க இந்தியா முன்வர வேண்டும். இந்திய நலனுக்கு எதிராக எக்காரணம் கொண்டும் எதுவும் செய்ய மாட்டோம், எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று ஏற்கனவே நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம்.
எனவே இனப் பிரச்சினையில் இந்தியாவின் சாதகமான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இலங்கையில் அமைதி நிலவுவதுதான் இந்தியாவுக்கும் நல்லது. உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் அது இந்தியாவிற்கு பல சங்கடங்களைக் கொடுக்கும், தமிழக அரசியிலும் அது எதிரொலிக்கும்.
எனவே, இந்திய அரசு ராஜீவ் காந்தி கொலை என்ற வரலாற்றுத் துயரத்தை பின்தள்ளி விட்டு, கடந்ததை மறந்து விட்டு, பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு இலங்கை இனப் பிரச்சினையை புதிய பார்வையுடன் அணுக வேண்டும் என்று கூறியுள்ளார் பாலசிங்கம்.
இந்தியா நிராகரிப்பு:
பாலசிங்கத்தின் இக் கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது. ராஜீவைக் கொன்றதற்காக விடுதலைப புலிகள் வருந்துவதாக பாலசிங்கம் தெரிவித்துள்ளது குறித்து இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அனந்த் சர்மா கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது. ராஜீவ் காந்தி கொலைச் சமபவம் மிகப் பெரும் சோக சம்பவம். அதை இந்தியா மறக்காது, இந்திய மக்களும் மறக்க மாட்டார்கள் என்றார்.
கருணாநிதிக்கு நட்புக்கரம்: தமிழ்ச்செல்வன்
இந் நிலையில் கொழும்பில் நிருபர்களிடம் பேசிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன், இலங்கையில் சிங்களப் படைகள் முன்பு போலவே குழந்தைகள், பெண்கள் என்று பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம், குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம், அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழ்நாடும் இலங்கை தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உறுவாகி உள்ளது. தனிப்பட்ட நலன்கள் அடிப்படையில் பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கும் திமுக அரசுக்கும் உறவுகள் நெருக்கமாக இருக்காது. ஆனால் மக்கள் நலனுக்காக நிச்சயமாக நாங்கள் நட்புக்கரம் நீட்டுவோம் என்றார்.
அமைதிப் பேச்சை நடத்த இந்தியா செல்லவும் தயார் என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டத்தைப் பற்றி கேட்டபோது, விடுதலைப் புலிகளுக்கு இந்தியா தடை விதித்திருக்கும் பட்சத்தில் நாங்கள் அங்கு செல்ல வாய்ப்பில்லை.
ஆனால் நிலைமைகள் மாறும் வாய்ப்புள்ளது. சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும். தங்களது அடிப்படை உரிமைக்காகப் போராடும் தமிழர்களின் கோரிக்கையைத் தார்மீகரீதியாக இந்தியா ஆதரிக்க முடியாது என்று சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில் இந்தியா உதவியுள்ளது.
குறிப்பாக பங்களாதேஷ் போராட்டத்தை ஆதரித்து உதவியும் உள்ளது. இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவை வைத்துக்கொண்டு தான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது போல சிங்களப் பத்திரிக்கைகள் அறிக்கைகளை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய அரசு எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஏற்று அங்கீகரிப்பதுடன் எங்களுக்கு அதன் தார்மீக ஆதரவையும் வழங்க வேண்டும். இலங்கை அரசின் அட்டூழியங்களைக் கண்டிக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சகச் செயலை இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் புரித்துகொள்ள வேண்டும்.
அந்த நாள் வந்தே தீரும். ஈழத் தமிழ் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல வழி பிறக்கும் என்றார்.