மீனவர்களுக்கு மரண தண்டனை: யாழ்., தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!!
போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் ஐவர் மற்றும் இலங்கையின் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் மண்டைத் தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவருக்கும் நேற்று இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தண்டனைக்குள்ளான இலங்கை மீனவர்கள் மூவரின் உறவினர்களும் யாழ். ஆயர் இல்லம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மீன்பிடிப்பதற்காகவே இவர்கள் கடலுக்குச் சென்றதாக குறிப்பிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மரண தண்டனையை நிறுத்தி, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி, யாழ் ஆயரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின், வட மாகாண சபை உறுப்பினர் அங்கையன் இராமநாதன் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள், இது குறித்த மகஜரின் பிரதியொன்றை அவரிடம் கையளித்தனர்.
இதேவேளை, மீனவர்கள் விவகாரம் நேற்று மாலை 3.30 மணிக்கு தங்கச்சிமடம் மீனவர்களுக்கு கிடைத்ததும், அதிர்ச்சி அடைந்த அவர்கள், இராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக தமிழக ஊடகமான நக்கீரன் குறிப்பிட்டுள்ளது.
மீனவப் பெண்கள், குழந்தைகள் என மீனவர்கள் குடும்பம் குடும்பமாக வந்ததால் போராட்டம் வலுப்பெற்றதோடு, அந்த பகுதியில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் மறியலில் ஈடுபட்டிருந்த சிலர் வன்முறையில் இறங்கியதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.
இந்த நிலையில் தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதன் காரணமாக இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு செல்லும் 1500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தப்பட்டன. சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்களையும் போராட்டத்தில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இந்த போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தூதரகத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் அதன் நிறுவனத் தலைவர் வேல் முருகன் தலைமையில் முற்றுகையிட முயன்றதாக தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
Average Rating