சேலத்திற்கு கடத்தி வந்த 22 கஞ்சா மூட்டை சிக்கியது: 2 பேர் கைது!!
தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து போலி மது மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரலாம் என சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனைத்து பகுதியிலும் வாகன தணிக்கை செய்ய அவர் உத்தரவிட்டார்.
இதன் பேரில் துணை கமிஷனர் பிரபாகரன் தலைமையில் அனைத்து பகுதியிலும் போலீசார் கடந்த சில நாட்களாக வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.
சேலம் சீல்நாய்க்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பச்சியப்பன், ஏட்டு கோவிந்தசாமி மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் உடையாப்பட்டி பை-பாஸ் பகுதியில் இருந்து டெம்போ ஒன்று வந்தது. இதில் துணி பார்சல்கள் நிறைய இருந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் வண்டியை நிறுத்த கூறினர். வண்டியும் நின்றது. பின்னர் போலீசார் டெம்போ டிரைவரிடம் சென்று பார்சல் என்ன என்று போலீசார் கேட்டனர். அதற்கு டிரைவர் தீபாவளி துணி பார்சல். கடைகளில் இருந்து குடோனுக்கு எடுத்து செல்கிறோம் என கூறினார். இருப்பினும் போலீசார் ஒரு மூட்டையை பிரித்து பார்க்க முயன்றனர்.
இதற்கு டிரைவரும், டெம்போவில் இருந்தவரும் தடுத்தனர். இதனால் போலீசுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு பார்சலை பிரித்து பார்த்தனர். இந்த பார்சலில் கஞ்சா இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர் ராஜேந்திரன், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்தோஸ்குமார் மற்றும் போலீசார் வந்து வாகனம் முழுவதையும் பரிசோதனை செய்தனர்.
அப்போது அனைத்து மூட்டையிலும் கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் டெம்போவையும், இதில் வந்த 2 பேரையும் போலீசார் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இந்த டெம்போவில் 22 கஞ்சா மூட்டை இருந்தது. ஒரு மூட்டையில் 32 கிலோ கஞ்சா இருந்தது. 22 மூட்டையிலும் 700 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும். இந்த மூட்டைகளை தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியில் இருந்து லாரி மூலம் சேலம் உடையாப்பட்டி பை-பாசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இங்கு இறக்கி வைக்கப்பட்ட கஞ்சா மூட்டைகளை டெம்போவில் ஏற்றி வந்தனர். அப்போது சீல்நாய்க்கன்பட்டி ரவுண்டானாவில் டெம்போவை போலீசார் நிறுத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை கடத்தி வந்ததாக சேலம் அரிசிப்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 42), டெம்போ டிரைவர் கோபி(வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா கடத்த பயன்படுத்திய டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கஞ்சாவை பிரபல கஞ்சா வியாபாரி கந்தசாமி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி உள்பட பல ஊர்களில் சப்ளை செய்ய டெம்போவில் எடுத்து வந்துள்ளார். அப்போது கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர்.
இந்த கஞ்சா வேறு எங்கெங்கு விற்க எடுத்து செல்லப்பட்டது என்றும், யார் யார் கஞ்சா விற்கிறார்கள் என்றும் விசாரணை நடக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள கந்தசாமியின் மீது வேறு என்னென்ன வழக்குகள் உள்ளது என்றும் உயர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தற்போது பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. கஞ்சா கடத்திய 2 பேரை பிடித்த போலீசாரை சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.
Average Rating