வெளிநாட்டவர்கள் இலங்கைக்கும் வடக்கிற்கும் இரண்டு விசாக்களை பெறவேண்டிய நிலைமை : கிரியெல்ல!!
வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகை தருவதாயின் இலங்கைக்கும் வடக்கிற்குமென இரண்டு வீசாக்களை பெற வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்வதற்கே வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்கான தடையை அரசு பிறப்பித்ததாக ஐ.தே.க.ட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும் ஐரோப்பிய குடும்பத்திற்கும் இலங்கைக்கும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நீதிமன்ற வழக்கு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே அரசாங்கம் தனக்கான பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2006ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் விடுதலை புலிகள் பயங்கரவாத குழுவாக பெயரிட்டது. எனவே இதற்கு எதிராக புலம்பெயர் தமிழர் அமைப்பு 2011ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தது. எனினும் குறித்த வழக்கை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்தது.
இது தொடர்பில் அரசாங்கம் பெரும் முயற்சி எடுத்திருந்தால் இந்த தீர்ப்பை பெற வேண்டியதில்லை. சர்வதேச விசாரணைகளை நிராகரித்ததை போன்று இந்த வழக்கினையும் அரசாங்கம் தட்டிக்கழித்தது.
இந்நிலையில் தற்போது அரசாங்கம் பொறுப்பிலிருந்து கோட்டை விட்டு விட்டு ஐ.தே.க. வின் மீது குற்றம் சுமத்தி மக்களை ஏமாற்றுவதற்கு பொய்யான முறையில் சுவரொட்டிகளை ஒட்டுகிறது.
நாட்டின் வெளிநாட்டு தூதரக சேவை சீரழிக்கப்பட்டுள்ளது. தகைமையற்றோரை அரசாங்கம் பதவிக்கு அமர்த்துகிறது. வெளிநாட்டு சேவையில் சண்டியர்களே உள்ளனர். இலங்கை அரச சண்டியர்களின் செயலை நியூயோர்க்கில் வைத்து முழு உலகமுமே பார்த்தது.
இந்நிலையில் தற்போது ஐரோப்பிய குடும்பத்திற்கும் இலங்கைக்கும் பாரிய விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அரசியல் அமைப்பில் 13 மற்றும் 17 ஆம் திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பிலான வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. தற்போது இலங்கை மீது ஐரோப்பிய குடும்பத்திற்கு நம்பிக்கையில்லை. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் நீதிமன்ற வழக்கு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் பாராளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இந்த வழக்கில் இலங்கை அரசிற்கு நேரடியாக தலையிட முடியா விட்டாலும் ஐரோப்பிய பிரஜையொருவரால் குறித்த வழக்கை தொடர விருந்தது. எனவே அரசு தனக்கான பொறுப்புக்கள் முழுவதனையும் தட்டிக்கழித்துள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல அரசாங்கம் தடை விதித்தது. இதனால் அண்மை காலமாக பலர் திருப்பியனுப்பப்பட்டனர்.
எனவே ஜனாதிபதி தேர்தலில் 2005ஆம் ஆண்டை போன்று வடக்கு வாக்குகளை மோசடி செய்வதற்கே இந்த தடையை அரசு விதித்துள்ளது.
சர்வதேச கண்காணிப்பாளர்களும் ஊடகவியலாளர்களும் வடக்கிற்கு வருவார்கள் என்ற அச்சத்திலே இத்தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டவர்கள் இலங்கை வருவதாயின் இலங்கைக்கும் வடக்கிற்குமான இரண்டு விசாக்களை பெற வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க. வின் வெற்றியை மாற்ற முடியாது என்றார்.
Average Rating