ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கொலை அச்சுறுத்தல்!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விமர்சிக்கின்ற காரணத்திற்காக அரசாங்க அமைச்சர்கள் சிலரிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.
ஆனால், அவரது குற்றச்சாட்டை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மறுக்கின்றார்.
இலங்கையில் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்றும், அதில் மூன்றாவது தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும் அரசியல் மேடைகளில் கருத்துக்கள் வெளியாகிவருகின்ற சூழ்நிலையில், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் காரசாரமான விவாதங்களில் கலந்துகொண்டுவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தன்னைக் கொல்ல சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் தொலைபேசியில் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த வெள்ளியன்று நடந்த நேரடி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தும், அரசாங்கத் தரப்பில் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த அரசியல் நிகழ்ச்சியின்போது, குறித்த அமைச்சர்கள் தன்னை அச்சுறுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறுகின்ற ரஞ்சன் ராமநாயக்க, அந்த நிகழ்ச்சியை வெளியில் ஓரிடத்திலிருந்து தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த வேறு சில அமைச்சர்களும் அடியாட்களுடன் தன்னைத் தாக்க திட்டமிட்டுக் கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டுகின்றார்.
தன்னை இந்த அரசியல் நிகழ்ச்சிக்கு வரவழைத்து, கொலைசெய்யும் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தபோதே நம்பகமான தொலைபேசி குறுஞ்செய்திகள் வந்திருந்ததாக ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.
´இந்த அரசியல் நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கும்பல் ஒன்று நான் இருக்கும் இடம்நோக்கி வருகிறார்கள் என்று எனது மெய்க்காவல் ஊழியர்களும் கூறினார்கள்´ என்றார் ரஞ்சன் ராமநாயக்க.
´ஜனாதிபதியுடனோ, அவரது மகன்மாருடனோ அல்லது குடும்பத்தினருடனோ எனக்குத் தனிப்பட்ட ரீதியில் பிரச்சனைகள் இல்லை. ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ள கடமையின் படி மக்களுக்கு தெளிவூட்டுகின்றேன். ஆனால் அதற்காக என்னை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதோ அல்லது கொலைசெய்வதோ தவறு´ என்றும் ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.
´ஜனாதிபதி மீதும் அவரது குடும்பம் மீதும் சேறு பூசினார்´ ஜனாதிபதியின் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டிய காரணத்தினால், அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதியின் அலரி மாளிகையிலிருந்து குறித்த தொலைக்காட்சி நிலைய கட்டடத்தை நோக்கி விரைந்து வந்ததாக உள்ளூர் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருப்பதையும் ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டினார்.
மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று அரசாங்கத் தரப்பினர் கூறிவருகின்றனர் ஆனால், தொலைக்காட்சி விவாதத்தில் தோல்வியடைந்த காரணத்தினால் ரஞ்சன் ராமநாயக்க வெட்கத்தை மறைக்க சொல்லுகின்ற குற்றச்சாட்டுக்கள் இவை என்று அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அங்கு விரைந்து வந்ததாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளமை பற்றி கேட்டது. ´ஜனாதிபதி மீதும் அவரது பிள்ளைகள் மீதும் எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி அவர் சேறு பூசினார். எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல், யாரோ அனுப்புகின்ற எஸ்எம்எஸ்களை பார்த்துபார்த்து அவர் பேசிக்கொண்டிருந்தார்´ என்றார் அமைச்சர்.
குறித்த தொலைக்காட்சி விவாதத்தின்போது, ரஞ்சன் ராமநாயக்க தன்மீது அநாவசியமாக பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தியதால் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ அங்கு பார்க்க வந்திருக்கலாம் என்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.
´பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ என்னிடமும் வந்து பேசிவிட்டுத் தான் சென்றார். இவரைக் கொலை செய்வதற்காக அவர் இங்கு வரவில்லை´ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Average Rating