பாப்பரசரின் விஜயம் தேசிய நல்லிணக்கத்துக்கு ஊக்கமளிக்கும்: தேசிய சமாதான பேரவை!!
பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதை கவனத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்குமாறு சமாதான பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் இடம் பெறும் சமயத்தில் பாப்பரசர் விஜயங்களை மேற்கொள்வதில்லை என்பது வத்டதிக்கானின் கொள்ளையாகவுள்ளதாக மேற்படி பேரவையால் வௌ்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
முன்கூட்டியே நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஒன்று தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின் அரைப் பகுதியில் பிரகடனப்படுத்தி எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அத்தேர்தலை நடத்துவது தொடர்பான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
எனினும் சட்டபூர்வமாக கூறும் போது ஜனாதிபதி தேர்தல்கள் 2016 ஆம் ஆண்டு நவம்பர் வரை நடத்த மாட்டாது.
நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதி பதவி இல்லாதொழிக்கப்படும் வரை அல்லது சீர்த்திருத்தப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகளை சேர்ந்த பல உறுப்பினர்களும் அரசாங்க மற்றும் மததலைவர்களும் கோரியுள்ளனர்.
அதேசமயம் சமாதான பேரவையும் பாப்பரசர் பிரன்சிஸின் எதிர்வரும் இலங்கைக்கான விஜயத்தை கவனத்திற் கொண்டு தேர்தல் தினத்தை தீர்மானிக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
கடந்த ஜூன் மாதம் நிர்ணயிக்கப்பட்டவாறு பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பாப்பரசர் கொழும்பிலும் முன்னாள் போர் வலயத்திலுள்ள மடுவிலும் மத ஆராதனைகளை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய மேலதிக உந்துசக்தியை வழங்கக் கூடியதாகும்.
இத்தகைய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் வட பகுதியில் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலுமுள்ள பெருந்தொகையான கத்தோலிக்க தமிழர்களும் இரு ஆயர்களும் முக்கிய வகிபாகமொன்றை வகித்துள்ளனர்.
இந்நிலையில் பாப்பரசரின் விஜயம் அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிக்க பயன்படும்.
பாப்பரசரை வரவேற்பதில் தென் பகுதியிலுள்ள சிங்கள கத்தோலிக்கர்கள் தமிழ் கத்தோலிக்கர்களுடன்
ஐக்கியத்துடன் செயற்பட கூடியதாகவுள்ளது.
பாப்பரசரின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் முதலாவது துறவியான ஜோசப் வாஸின் புனிதராக திருநிலைப்படுத்தல் இடம்பெறவுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு பிராந்தியங்களிலும் பணியாற்றிய ஜோசப் வாஸின் இந்த வைபவத்தில் சிங்கள மற்றும் தமிழ் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கூடியதாயிருக்கும். அத்துடன் ஏனைய மதங்களைக் சேர்ந்த மதகுருமாருக்கும் இந்த வைபவத்தில் சமூகமளிக்க அழைப்பு விடுக்கப்பட கூடியதாயிருக்கும்.
இந்தியாவைச் சேர்ந்த ஜோசப் வாஸ் இலங்கையில் பெருமளவில் சேவையாற்றியுள்ளார். அவர் கண்டியில் பணியாற்றிய வேளையில் கண்டி மன்னரின் பாதுகாப்பை பெற்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாப்பரசருக்கு இந்த மாத ஆரம்பத்தில் தனிப்பட்ட முறையில் அழைப்பை விடுத்த போது பாப்பரசரின் இலங்கைக்கான விஜயத்தின் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருப்பதை நாம் அவதானித்தோம்.
இந்நிலையில் முன்கூட்டியே எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பது பாப்பரசரின் விஜயம் பிற்போடப்படவோ அல்லது இரத்துச் செய்யப்படவோ வழிவகை செய்யலாம் . அது கத்தோலிக்க சமூகத்திற்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
எனினும் வத்திக்கானிலிருந்து வரும் பாப்பரசரின் விசேட குழுவினர் பாப்பரசரின் விஜயத்துக்கான ஏற்பாடுகள் ஒழுங்கு முறையில் உள்ளதை உறுதிப்படுத்த இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்யவுள்ளமை பாப்பரசரான இலங்கைக்கு உண்மையிலேயே விஜய செய்வார் என்பதற்கான நம்பிக்கை தரும் ஒன்றாக உள்ளது.
நாடெங்குமுள்ள வேறுப்பட்ட மதங்கள் தொடர்பான வன்முறை செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகளால் இலங்கை தற்போது மோசமான சர்வதேச பிரதிமையொன்றைக் கொண்டுள்ளது. ஆனால் பாப்பரசரின் விஜயமானது பல்வேறு மதம் பிரிவினரதும் உணர்வுகளுக்கு எவ்வாறு கௌரவமிக்கிறது என்பதை சாதகமான முறையில் வெளிப்படுத்துவதற்காக அமையும் என தேசிய சமாதான பேரவையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating