மஹிந்த மக்களைப் பற்றி யோசிக்காது அதிகாரம் பற்றியே சிந்தித்தார்: அனுரகுமார!!
சகல எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் கூட்டுக் கட்சிகளும் எதிர்க்கின்ற போது ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ நடத்த நினைப்பது தனது குடும்ப அரசியலை பாதுகாத்துக் கொள்வதற்காகவே. யுத்தம் முடிந்தவுடன் மக்களைப் பற்றி யோசிக்காது தனது அதிகாரம் பற்றியே சிந்தித்தார் என குற்றம் சுமத்திய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலை தடுக்க அனைத்து கட்சிகளும் பொது எதிரணியாக ஒன்றுதிரள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடாதென தெரிவித்து ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தினால் நாடு பூராகவும் நடத்திவரும் மக்கள் தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் ஒன்று நாட்டில் எப்போது நடத்தப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் என்றால் என்ன என்பது தொடர்பில் ஒரு வரைவிலக்கணம் உள்ளது. ஆனால் இலங்கையில் இன்று அவ்வாறான விளக்கம் ஒன்று இல்லாது அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன்று நாட்டில் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்திற்கும் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு ஆதரவு உள்ளதென புகழும் ஜனாதிபதி அவ் இரண்டு பங்கு அதிகாரத்தினை எவ்வாறு வைத்துள்ளார் என்பது எமக்குத் தெரியும். அமைச்சர்களின் மீது குற்றச்சாட்டுக்கள் அச்சுறுத்தல் லஞ்சம் என தனது பாணியினை கையாண்டே தனது மூன்றில் இரண்டு அதிகாரத்தினை ஜனாதிபதி தக்கவைத்துள்ளார்.
தற்போது அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில், ஜனநாயகத்தினை மீறிய வகையில் ஜனாதிபதி தேர்தலினை அரசாங்கம் நடத்துவது கண்டிக்கத்தக்க விடயமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ தனது குடும்ப அரசியல் ஆதிக்கத்தினை தக்க வைக்கும் நோக்கில் அனைத்து தரப்பினரது விருப்பத்தினையும் மீறி செயற்படுகி்ன்றார். ஜனாதிபதி தேர்தலை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது.
அதையும் தாண்டி அரசாங்கத்தில் இருக்கும் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜாதிக, ஹெல உறுமய , சோசலிச இடதுசாரிகள் அனைவரும் எதிர்க்கின்றனர். ஒருசில வீட்டுத் தவனைகள் மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றன. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவின் தனி விருப்பில் நடத்தும் இத்தேர்தலினை நடத்தவிடுவதை விடவும் தடுப்பதே அவசியமாகும்.
யுத்தம் முடிவிற்கு வந்த போது யுத்தத்தில் காணமல்போன மக்கள் தொடர்பில், மக்கள் இழந்த சொத்துக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது பற்றி யோசிக்காது தனது அதிகாரத்தினையும் பலத்தினையும் எவ்வாறு தக்க வைப்பது என்றே சிந்தித்தார். தற்போதும் அதே சிந்தனையில் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். எனவே ஜனாதிபதியினதும் நிறைவேற்று முறைமையினதும் அதிகாரங்களை குறைக்க வேண்டும். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக சகல எதிரணியும் ஓர் அண்மையாக ஒன்றுகூட வேண்டும்.
அரசாங்கத்தில் இருக்கும் மனிதாபிமான, மனசாட்சியுள்ள உறுப்பினர்கள் எம்முடன் ஒரே மேடையில் கைகோர்க்க வாருங்கள். ஐக்கிய தேசியக் கட்சியினதும் தமது சுயநலம்கருதி செயற்படாது மக்களையும் நாட்டையும் சிந்தித்து செயற்படுங்கள். அதேபோல் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் கைகோருங்கள். இந்த அழைப்பு தேர்தலை நடத்துவதற்கு அல்ல. நீதிக்கும் சட்டத்திற்கும் எதிராக இடம்பெறும் இவ் ஜனாதிபதித் தேர்தலினை எதிர்ப்பதற்காக எனவும் அவர் தெரிவித்தார்.
Average Rating