காணி உரிமை வேண்டும், இராணுவம் பொலிஸ் வருட இறுதிக்குள் வௌியேற வேண்டும்!!
வடக்கில் தனியார் காணிகள் மற்றும் வீடுகளில் நிலை கொண்டுள்ள முப்படையினரும் பொலிசாரும் வருட இறுதிக்குள் அவற்றை உரிமையாளர்களிடம் கையளித்து விட்டு வெளியேற வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையில் இன்று (9) வடக்கில் மேற்கொள்ளபப்டும் காணி சுவீகரிப்பு தொடர்பான விசேட அமர்வு காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் மற்றும் பொலிசாரும் தனியார் காணிகள் வீடுகளிலேயே நிலைகொண்டுள்ளனர்.
அவற்றினை நிரந்தமாக தமது முகாம் அமைப்பதற்காக சட்டரீதியாக சுவீகரிப்பதற்கான முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் அது தொடர்பான ஆவணங்களை தயாரிப்பதற்கான விசேட அமர்வாகவே இன்றைய மாகாண சபை அமர்வு இடம்பெற்றது.
இன்றைய விசேட அமர்வில் உறுப்பினர்கள் பலரும் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டகளிலும் முப்படைகள் மற்றும் பொலிஸ் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் வீடுகள் தொடர்பான தரவுகளை சபையில் புள்ளிவிபரங்களுடன் ஆவணப்படுத்தினார்.
அத்துடன் இந்த விசேட அமர்வில் 13ம் திருத்தத்தில் கூறப்பட்ட காணி அதிகாரத்தை மாகாண சபைக்கு அளிக்க வேண்டும் எனவும் இந்த வருட இறுதிக்குள் தனியார் காணிகள் வீடுகளில் உள்ள முப்படைகள் மற்றும் பொலிஸ் என்பன அவற்றை உரியவர்களிடம் கையளித்து விட்டு அங்கிருந்து வெளியேற வேண்டும் என இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில்,
தனியார் காணிகள் வீடுகளில் உள்ள முப்படைகளும் பொலிசாரும் அவ்வாறு உரியவர்களிடம் கையளித்து விட்டு வெளியேற வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. அவற்றினை இலகு தன்மையை கையாண்டு நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வடக்கில் யாழ்பாணத்தில் யுத்தகாலப்பகுதியில் 31 ஆயிரத்து 91 ஏக்கர் நிலபரப்பில் 1120 வீடுகளில் முப்படைகளும் நிலைகொண்டிருந்தன.
குடாநாட்டின் மொத்த நிலப்பரப்பில் 12.8 வீதம் அவர்கள் கட்டுபாட்டில் இருந்தன. ஆனால் யுத்தத்தின் பின்னரான கடந்த 5 வருட காலப்பகுதியில் 9 ஆயிரத்து 128 ஏக்கர் காணிகளும் 647 வீடுகளும் உரியவர்களிடம் கையளிப்பபட்டுள்ளன. தற்போது 5.6 வீத நில பரப்பிலையே இராணுவம் நிலைகொண்டுள்ளது.
இதேபோல 1999ம் ஆண்டு சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை சுவீகரிக்கப்பட உள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்டு இருந்தது. அப்போது எமது கட்சியை (ஈ.பி.டி.பி.) சேர்ந்த 9 பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசி அதனை நீக்க கோரினோம் அதேபோல அவ் அறிவித்தல் நீக்கப்பட்டது.
எனவே நாம் சரித்திரம் பூர்வீகம் பற்றி பேசிக்கொண்டு இராது நடைமுறை சாத்தியமான முறையினை கண்டு கொண்டு அதனூடாக அக் காணிகளை பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Average Rating