எம்.ஜி.ஆர்-க்கு வந்த கோபம்…!!
“மீனவ நண்பன்” படம் கடைசி கட்டப் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். கட்டளைப்படி கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சேர்க்கப்பட்டது. இதுபற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-
“ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது “மீனவநண்பன்” படத்திற்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், “இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எது?” என்று எம்.ஜி.ஆர். கேட்டார். “நான் எழுதவில்லை” என்றேன். “ஏன்?” என்றார். “என்னை யாரும் அழைக்கவில்லை” என்றேன்.
அப்போது புரொடக்ஷன் மானேஜர் வந்தார். “முத்துலிங்கத்தை வைத்துப் பாடல் எழுதச் சொன்னேனே! ஏன் அதன்படி செய்யவில்லை?” என்று கோபத்துடன் கேட்டார். “நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை” என்றார்.
“இப்போது வந்துவிட்டார் அல்லவா? இவரை வைத்து ஒரு பாடல் எழுதி வாருங்கள்” என்றார். “படம் முடிந்து விட்டதே” என்றார்.
உடனே, டைரக்டர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச்சொன்னார். அவர்கள் வந்ததும், “இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு கனவுக்காட்சி பாடலை எழுதுங்கள். அதற்குப்பிறகு படப்பிடிப்பு நடத்தலாம்” என்றார்.
அவர்களும் புரொடக்ஷன் மானேஜர் சொன்னது மாதிரி “அதற்கான சிட்டுவேஷன் (சம்பவம்) இல்லையே” என்றார்கள்.
“ட்ரீம் சீன் பாடலுக்கு என்ன சிட்டுவேஷன் வேண்டும்? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வருவதுதானே ட்ரீம்சாங்? அதற்குத் தனியாக என்ன சிட்டுவேஷன்? பாடல் எழுதுங்கள்; அதன் பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
அதன்பிறகு நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலாக அமைந்தது.
“தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ – நீ
மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ” என்ற பாடல்தான் அது.
இந்தப் படத்திற்குப் பாடல்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிந்திருந்தும் என்னை வைத்துப் பாடல் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஏன் கூறினார்? தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.” இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் படங்களுக்கு மட்டுமின்றி, பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற டைரக்டர்கள் இயக்கிய முக்கிய படங்களுக்கும் கவிஞர் முத்துலிங்கம் பாடல் எழுதியுள்ளார்.
“16 வயதினிலே” படத்துக்குப்பிறகு பாரதிராஜா உருவாக்கிய படம் “கிழக்கே போகும் ரெயில்” (1978). ராதிகா – சுதாகர் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.
இந்தப் படத்தில் இடம் பெற்ற “மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ! வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ!” என்ற பாட்டு, பெரிய சூப்பர் ஹிட் பாடலாகும். இதை எழுதியவர் முத்துலிங்கம். ஒன்றரை மணி நேரத்தில் இந்தப் பாடலை முத்துலிங்கம் எழுதி முடித்தார்.
1978-79-ம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை முத்துலிங்கத்திற்கு இந்தப் பாடல் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா கமலா திரையரங்கில் நடைபெற்றபோது, இந்தப் பாடலைத் தாளம் போட்டுப் பாடி “இதைப்போல எங்கள் படங்களுக்குப் பாடல் போடக்கூடாதா?” என்று இளையராஜாவைப் பார்த்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கேட்டார்.
எனக்குக் கேடயம் கொடுக்கும்போது என்னை முதுகில் தட்டி பாராட்டினார். இந்தப் பாடலை டைரக்டர் ஸ்ரீதர் மிகவும் பாராட்டியதாக இளையராஜா என்னிடம் கூறினார்.
இதைப்போல் `வயசுப் பொண்ணு’ என்ற படத்தில் நான் எழுதிய
“காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் – அந்தத்
திருமகளும் உன்னழகைப் பெறவேண்டும்” என்ற பாடலும் தமிழக அரசின் பாடலாசிரியருக்கான விருதை எனக்குப் பெற்றுத் தந்தது. இது முழுக்க முழுக்க நான் எழுதி, அதன் பிறகு மெட்டமைக்கப்பட்ட பாடல்.
நான் இரண்டு மணி நேரத்தில் எழுதிய இப்பாடலுக்கு முக்கால் மணி நேரத்தில் இசையமைத்தவர் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன். “காஞ்சிப் பட்டுடுத்தி” என்ற வார்த்தையை வைத்துப் பாட்டைத் தொடங்கு என்று எனக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் அந்தப் படத்தின் இயக்குனர் கே.சங்கர். ஆனால் இந்தப்பாட்டை அந்தப் படத்தின் பைனான்சியர் சடையப்பச் செட்டியார் வேண்டாம் என்று முதலில் நிராகரித்துவிட்டார். “பாட்டில் வேகம் இல்லை. அதனால் வேண்டாம். வேறு பாட்டுப் போடுங்கள்” என்றார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான் மிகவும் வலியுறுத்தி, “இந்தப் பாட்டைப் படத்தில் இடம் பெறச் செய்யுங்கள். நான் ஹிட் பண்ணிக்காட்டுகிறேன்” என்றார். அதன் பிறகு செட்டியார் ஒப்புக்கொண்டார்.
அந்தப்படம் ஓடவில்லை. ஆனால் இந்தப் பாட்டுத்தான் அந்தப் படத்தின் பேர் சொல்லிக்கொண்டிருக்கிறது. சொன்னதுபோல் எம்.எஸ்.வி. அந்தப் பாடலை ஹிட்டாக் கினார்.
அதுபோல் “எங்க ஊரு ராசாத்தி” என்ற படம் ஓடவில்லை. அந்தப் படத்தில் இடம் பெற்ற “பொன்மானைத்தேடி – நானும் பூவோடு வந்தேன்” என்ற எனது பாடல்தான் படத்தின் பேரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகாத நாளே இல்லை என்று சொல்லும் வண்ணம் தொடர்ந்து ஒலிபரப்பினார்கள்.” இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்.
Average Rating