கடன் தொல்லையால் அவதி: தொழிலதிபர் தற்கொலை!!
திருச்சி கிராப்பட்டியில் பிரபல தொழில் அதிபர் மற்றும் டிரைவரும், அரிய மங்கலத்தில் வியாபாரியும், தொழிலாளியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 54). பிரபல தொழில் அதிபரான இவருக்கு கிராப்பட்டி மெயின் ரோட்டில் பல கோடி மதிப்பிலான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் கீழ் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த செல்வம் அதன் மேல் பகுதியிலேயே வசித்து வந்தார்.
இவருக்கு வளர்மதி (44) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளார். மகன் என்ஜினீயரிங் படித்து வருகிறார். மகள் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை செல்வம் தங்கியிருந்த அறைக்கு வளர்மதி காபி கொண்டு சென்றார். அப்போது நீண்ட நேரமாக கதவை தட்டியும் செல்வம் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த வளர்மதி ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்த போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் அசைவற்று செல்வம் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வளர்மதி எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கு போட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து செல்வத்தின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்திய போது கடன் தொல்லையால் செல்வம் தற்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் வேறு ஏதாவது காரணம் உண்டா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (32). இவர் திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சசிகுமார் தீரன்நகர் பகுதியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இன்று காலை அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேலாளர் பவித்ரன் சசி குமரை தேடி அந்த அறைக்கு சென்ற போது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே சந்தேகம் அடைந்த பவித்ரன் எடமலைப்பட்டி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த சென்ற போலீசார் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு சசிக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருந்ததால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சசி குமாரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜெய்லானி (வயது40). மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பாத்திமா. இந்த தம்பதிக்கு பிறந்த 2 குழந்தைகளும் சிறு வயதிலேயே உடல் நிலமில்லாமல் இறந்து போனது. இதனால் மனம் உடைந்த ஜெய்லானி குடிப் பழக்கத்துக்கு அடிமையானார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாத்திமா அரியமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ஜெய்லானியின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது42). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு ஆனந்தி, அன்னகாமு என்ற 2 மனைவிகளும், 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று இரவு பாரதி நகரில் உள்ள முதல் மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating