(முழுமையான படங்கள்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய”த்தினால், கௌவுரவிக்கப்பட்ட “திரு.திருமதி. கனகரத்தினம் குடும்பம்”…!!
**சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும்.., புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும் நிகழ்வும்…
கடந்த சனிக்கிழமை 20.09.2014 அன்றுமாலை ஐந்துமணியளவில் சூரிச் அடில்ஸ்வில் சிவசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால்” ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில், முதல்நிகழ்வாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி. கனகரெத்தினத்தின் வாரிசுகளுக்கான “மதிப்பளிப்பு நிகழ்வு” அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகி மிகச்சிறப்புற நடைபெற்றது.
முதலில் ஒன்றியத்தின் தலைவர் இராசமாணிக்கம் ரவீந்திரன் அவர்கள் மாலை வணக்கத்தினைத் தெரிவித்து அக்குடும்பத்தினரை வரவேற்று மகிழ்ந்தார். “புங்குடுதீவு மருத்துவமைனைக்கு அவர்கள் ஆற்றியபணி காலம் அறிந்து ஆற்றிய செயலென” புகழ்ந்துரைத்தார். “அவர்கள் இப்புகழ்ச்சியினை விரும்பவில்லையெனினும், நாங்கள் இச்செயலை வெளிக்கொணர்ந்து காட்டினால் உங்களை முன்மாதிரியாகக் கொண்டு ஏனையோரும் உதவிட முன்வருவார்கள்” எனக்கூறி தனதுரையை நிறைத்தார்.
தொடந்து செயலாளர் தர்மலிங்கம் தங்கராஜா அவர்கள் “புலம்பெயர் புங்குடுதீவு அமைப்புக்களிடமும், பொதுமக்களிடமும் புங்குடுதீவு மருத்துவமனை அதிகாரியான மருத்துவர் திரு.சரவணபவன் அவர்களின் வேண்டுகோளையேற்று தாமாகவே முன்வந்து செயற்கரிய செயலைச் செய்த பெருமக்களை மனமாரப் பாரட்டுகின்றேன். “பாடல் பெறானேல் பலர் மெச்சவாழானேல் நாடறிய நன்மணங்கள் நாடானேல் சேடன் இவன் வாழ்வு இருங்கடல் சூழ் பாரில் கவிழ்ந்தென்ன, மலந்தென்ன காண்” என்றஅவ்வையின் செய்யுளை உதாரணமாக்கினார்.
மேலும்,”சொல்லாமலே செய்வர் பெரியர், சொல்லிச் செய்வர் சிறியர், சொல்லியும் செய்யார் கயவரே.. நல்லகுலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில் பலாமாவைப் பாதிரியைப் பார்!” என்ற தமிழ்த்தாயின் இன்னுமொரு செய்யுளையும் மேற்கோளாக் காட்டி அவர், அவர்களை பாரட்டியதோடு மட்டுமல்லாமல் வாழ்த்துப்பாவினையும் ஒன்றியத்தின் சார்பில் வழங்கிக் கௌரவித்தார்.
பொருளாளர் சத்தியநாதன் ரணமணதாஸ் அவர்கள் “இந்த விழா சிறப்புற இறையருள் கிடைக்க வாழ்த்துகின்றேன்” என்றார். அத்துடன் தாய் தந்தையருக்கு உதவி செய்வது போல், தாய்பூமியை நினைத்து எம் மக்களுக்கு வழங்கியதென்பது ஒரு புண்ணியமான செயலாகும். அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து பல நற்பணிகளைச் செய்ய வேண்டும். இதுபோன்ற சேவைகளை நாம் ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும். காலம் கனிந்திருக்கிறது. ஒருபிராங் தந்தாலும் அது ஊரை வளம்படுத்தும்” என்று கூறி தனதுரையினை முடித்தார்.
உபதலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் கூறுகையில, “உங்களை ஒன்றியம் கௌரவிக்க விரும்புகின்றது” என தொலைபேசி ஊடாக இவர்களை கேட்டபோது “நாங்கள் பெருமைக்காகவோ, எம்மை விளம்பரப்படுத்தவோ இச்செயலைச் செய்யவில்லை, ஆகையால் வேண்டாம்” என மறுத்தார்கள். “நீங்கள் செய்த காரியத்திற்காக உங்களைக் கௌரவித்து மக்கள்முன் கொண்டு சென்றால், ஏனைய மக்களும் முன்வருவார்கள். ஆதலால் நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்ற தமது அன்புக் கோரிக்கையை ஏற்று வருகை தந்தமையையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்” எனவும், “ஒன்றிய ரீதியாக கௌரவிப்பதை விட சபையோரைக் கொண்டு கௌரவிக்க விரும்புகின்றோம். இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும்” வினயமாகக் கேட்டுக் கொண்டார்.
மண்டபம் நிறைந்த சபையோர் பலரும் வந்திருந்த போதிலும், குடும்பத்துடன் உரிய நேரத்தில் வந்திருந்தவர்களை மட்டும் (சபையோரின் அனுமதியுடன்) அழைத்து, இவர்கள் கௌவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் திரு.திருமதி. திருநாதன் அவர்கள் நேரமின்மையால் சமூகம் தரவில்லை. எனினும் அவர் சார்பில் அவர்தம் புதல்வர்கள் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர்.
அந்தவகையில் முதலாவதாக திரு.திருமதி. அருள்நாதன் குடும்பத்தினரை திரு.திருமதி. தனபாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க, திரு.திருமதி. பெஞ்சமினின் குடும்பத்தினர் சந்தனமாலை அணிவித்து சிறப்பித்தார்கள். அத்துடன் இவர்களுக்கான ஒன்றியத்தின் நினைவுப் பரிசினை “ஒன்றியத்தின்” தலைவர் திரு.இராசமாணிக்கம் ரவீந்திரன் அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்.
தொடர்ந்து திரு.திருமதி. லோகநாதன் (ரவி) குடும்பத்தினரை திரு.திருமதி. சந்திரன் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க, திரு.திருமதி. சந்திரகுமார் குடும்பத்தினர் சந்தனமாலை அணிவித்து மகிழ, இவர்களுக்கான ஒன்றியத்தின் நினைவுப் பரிசினை “ஒன்றியத்தின்” செயலாளர் திரு.த.தங்கராஜா அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்.
அடுத்து திரு.திருமதி. ரகுநாதன் மைதிலி குடும்பத்தினரை திரு.திருமதி. இலங்கேஸ் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க, திரு.திருமதி கணேசராஜா குடும்பத்தினர் சந்தனமாலை அணிவித்து மகிழ, இவர்களுக்கான ஒன்றியத்தின் நினைவுப் பரிசினை “ஒன்றியத்தின்” உபதலைவர் திரு.ரஞ்சன் அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்.
தொடர்ச்சியாக திரு.திருநாதன் அவர்கள் சார்பில் அவர்களின் புதல்வர்களை திரு.திருமதி. கௌதமன் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க, திரு.திருமதி. ராஜேஸ் குடும்பத்தினர் சந்தனமாலை அணிவித்து மகிழ, இவர்களுக்கான ஒன்றியத்தின் நினைவுப் பரிசினை “ஒன்றியத்தின்” பொருளாளர் திரு.ரமணன் அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்.
தொடர்ந்து திரு.ரகுநாதன் (அப்பன்) குடும்பத்தினர் சார்பாக (அவர்கள் இலங்கையில் வசிப்பதால்) அவர்களின் பெறாமக்களை திருமதி.தயா ரவீந்திரனும், செல்வி. பிரியா ரவீந்திரனும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க, திருமதி.ரஞ்சனும், திருமதி.சிறிகாந்தராஜா அவர்களும் சந்தனமாலை அணிவித்து மகிழ, இவர்களுக்கான ஒன்றியத்தின் நினைவுப் பரிசினை “ஒன்றியத்தின்” தலைவர் திரு.இராசமாணிக்கம் ரவீந்திரன் அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்.
இந்த ஊடுகதிர்ப் படக் கருவியினை புங்குடுதீவு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று திரு. ரகுநாதன் (அப்பன்) அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
அத்துடன் “புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் -லண்டன்”, “புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் -பிரான்ஸ்” ஆகியவற்றின் வாழ்த்துச் செய்திகளும் வாசித்துக் கையளிக்கப்பட்டன.
“இவர்களது தாய், தந்தையர்; தனது நண்பர் என்றும், இவர்கள் நீடுழி வாழ்ந்து, இன்னும் பல நற்பணிகளை ஆற்ற, எல்லாம்வல்ல முருகப் பெருமானின் அருள் வேண்டி வாழ்த்துகின்றேன்” என திரு. தனபாலசுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துக் கூறினார்.
திரு. பெஞ்சமின் அவர்கள் தமது வாழ்த்தாக “அருள்நாதன் பள்ளித் தோழர் என்றும், இவர்கள் எமது வைத்தியசாலைக்குச் செய்த சேவையை எண்ணிப் பாராட்டுகின்றேன்” என்றார்.
தொடரந்து திரு.லோகநாதன் (ரவி)அவர்கள் தமது ஏற்புரையில் “அனைவருக்கும் நன்றியும், அன்பான கௌரவிப்புக்கு மகிழ்ச்சியையும் தெரிவிப்தோடு, புங்குடுதீவுக்கும், புங்குடுதீவு மக்களுக்கும், புங்குடுதீவு ஒன்றியத்திற்கும் என்றென்றும் தங்களது உதவி இருக்கும் என உறுதி கூறி” நிறைவு செய்தார்.
“இவர்கள் எல்லோரும் எமது அழைப்பை ஏற்று குடும்பத்தோடு வந்து சிறப்பித்தமைக்கு” நன்றி பாராட்டி இந்த கௌரவிப்பு நிகழ்வினை திரு. ரஞ்சன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்.
(*புகைப்பட உதவி.. வீடியோ சுதா, வெங்கட், ரகு, ரமணன், நிது.)
இவ்வண்ணம்..
திரு.த.தங்கராஜா,
செயலாளர்,
புங்குடுதீவுமக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து.
தகவல்…
சுவிஸ்ரஞ்சன்,
உபதலைவர், &ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவுமக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து.
(**இதுகுறித்த (கௌரவிக்கும் நிகழ்வு) முழுமையான வீடியோக்களும், மற்றும் “ஒன்றியத்தின்” சூரிச், சுக் மக்களுடனான கலந்துரையாடல் தொடர்பான செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், தொடரும்….)
Average Rating