கும்பகோணம் அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்தது அண்ணன்–தங்கை!!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் முகமதுகுத்தூஸ். இவர் சவுதி அரேபியாவில் டீசல் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்வர்நிஷா (வயது 35). இவர்களுக்கு முகமது பாட்சா (8) என்ற மகன் உள்ளார்.
முகமதுபாட்சா நாலூர் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று மதியம் மகன் பள்ளிக்கு சென்றதும் அன்வர்நிஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் ஜெயந்தி என்பவர் ஒரு புடவையை தைத்து கொடுத்து விட்டு சென்றார். அதனை வாங்கி கொண்டு அன்வர் நிஷா வீட்டுக்குள் சென்றபோது அவரை பின் தொடர்ந்து 2 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் அன்வர்நிஷா கையில் வைத்திருந்த புடவையை எடுத்து அவரை கட்டினர்.
மேலும் வாயில் டேப் ஓட்டி அவர் சத்தம் போட விடாமல் செய்தனர். சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பின் வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டனர்.
இதில் பின்வாசல் பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் வாலிபர் ஒருவர் பேக்குடன் தப்பி செல்வதை கண்டு அவரை விரட்டி பிடித்தனர். அப்போது அவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு வருவது தெரிய வந்தது. இதற்கிடையே கட்டி போடப்பட்டிருந்த அன்வர்நிஷா கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு வெளியே வந்து திருட்டு போனது பற்றி கூறினார். அப்போது பிடிபட்ட வாலிபரை அங்கு கொண்டு வந்தனர்.
இதுபற்றி நாச்சியார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவிடை மருதூர் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் எதிர்வீட்டில் வசிக்கும் ஜெயந்தியின் மகன் ஜெகன்சுந்தர் (25) என்பதும், அவர் சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. மேலும் தனியாக வசிக்கும் அன்வர்நிஷா வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் வகுத்து ஜெகன்சுந்தர் தனது தங்கை லாவன்யா என்பவருக்கு பேண்ட் சர்ட் அணிவித்து முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட 60 பவுன் நகையுடன் லாவன்யாவும், அவரது தாய் ஜெயந்தியும் தலைமறைவாகி விட்டனர். பிடிபட்ட ஜெகன்சுந்தரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய தாய்–மகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் நகை–பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating