வாணியம்பாடியில் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி அடித்துக் கொலை: காதலன் கைது!!
வாணியம்பாடி அடுத்த ஊசித்தோப்பு பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் மர்மமான முறையில் ஒரு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் காரில் இருந்த வாலிபர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை சரமாரியாக அடித்து, கீழே தள்ளி கல் மற்றும் கம்பியால் தாக்கினார். மேலும் அந்த பெண்ணை தரதரவென இழுத்து சென்று அங்குள்ள பாழடைந்த கிணற்றில் தள்ளினார்.
அப்போது அந்த வழியே வந்த பால் வியாபாரி சிவக்குமாரி என்ற பெண் அதை பார்த்து கூச்சல் போட்டார். ஊருக்குள் வந்து நடந்த சம்பவத்தைப் பற்றி கூறினார். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், அப்போது அந்த வாலிபர் காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்ட£ர்.
இது தொடர்பாக அவர்கள் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி, சப்–இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் பாழடைந்த கிணற்றில் இறங்கி, அதில் வீசப்பட்டிருந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த பெண் வைத்திருந்த பையில் 2 உடைகள், இனிப்பு பண்டம் அடங்கிய பெட்டி இருந்தது.
கார் நம்பர் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கார் வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் வினோத் (வயது 25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
வாடகை கார் ஓட்டிவரும் வினோத் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. போலீசார் வினோத்தை பிடித்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட பெண் பேரணாம்பட்டு ஏரிக்குத்தி கிராமத்தை சேர்ந்த மேதா (28) என்பது தெரியவந்தது. இவர் பேரணாம்பட்டில் அழகு நிலையம் நடத்தி வந்தார்.
மேதாவை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியதாக வினோத் ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது:–
பேரணாம்பட்டில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பு ஒன்று நடந்தது. படபிடிப்பு குழுவினருக்கு வினோத் கார் ஓட்டி வந்தார். அப்போது அழகு நிலையம் நடத்தி வந்த மேதாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
வினோத்தை விட மேதா 3 வயது மூத்தவர். இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிரித்து பேசி மகிழ்ந்தனர். பின்னர் வினோத் தனது காரில் மேதாவை பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
நேற்று வினோத்துக்கு பிறந்தநாள். காரில் பேரணாம்பட்டு வந்த அவர் காதலி மேதாவை அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு சென்றார். அங்கு மேதாவுக்கு புதிய துணி, சுவீட், கேக் ஆகியவை வாங்கி கொடுத்தார். மாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மேதா கேட்டுள்ளார். அதற்கு மறுத்த வினோத் என்னைவிட உனக்கு வயது அதிகம். உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ளமுடியும் எனக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டதும் திடுக்கிட்ட மேதா 2 ஆண்டுகளாக நெருங்கி பழகி விட்டு ஏமாற்ற பார்க்கிறாயா எனக் கூறியபடி தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வினோத் மேதாவை கொலை செய்ய திட்டமிட்டார். வாணியம்பாடி ஊசித்தோப்பு பகுதியில் காரை நிறுத்திவிட்டு திருமணம் பற்றி பேசலாம் எனக்கூறி அழைத்து சென்றார்.
அங்குள்ள தோப்புக்குள் சென்றதும் இரும்பு கம்பியால் மேதாவின் தலையில் அடித்து கொலை செய்தார். அடையாளம் தெரியாமல் இருக்க கம்பியால் அடித்து முகத்தை சிதைத்தார்.
பின்னர் அங்கிருந்த விவசாய கிணற்றுக்குள் மேதாவின் உடல் மற்றும் அவருக்கு வாங்கி கொடுத்த புதிய துணி, சுவீட் ஆகியவற்றை தூக்கி வீசினார்.
அப்போது தான் அந்த வழியாக சென்ற பால் வியாபாரம் செய்து வரும் பெண் பார்த்துவிட்டார். அவர் சத்தம் போட்டதால் வினோத் காரில் தப்பி ஓடிவிட்டார்.
கார் நம்பரை பால்கார பெண் நினைவில் வைத்து போலீசாரிடம் கூறியுள்ளார். இதன் மூலம் போலீசார் வினோத்தை பிடித்தனர். அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating