பெண்ணிடம் முகவரி கேட்பதாக நடித்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் கொள்ளை!!
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 31). தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி ஜமுனா தேவி (25). தீபக் உறவினரின் திருமணம் நேற்று இரவு கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமண விழாவில் தீபக் தனது மனைவி ஜமுனா தேவி மற்றும் உறவினர்களுடன் காரில் சென்று கலந்து கொண்டார். விழா முடிந்ததும் வீடு திரும்புவதற்காக இரவு 9 மணியளவில் மண்டபம் முன்பு நிறுத்தியிருந்த காரில் புறப்பட தயாரானார்கள்.
அப்போது ஜமுனாதேவியின் அருகில் வந்த ஒரு வாலிபர் அவரிடம் ஒரு பேப்பரை காண்பித்து அதில் உள்ள முகவரி குறித்து கேட்டார். பேப்பரை வாங்கி முகவரியை ஜமுனா தேவி விளக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த வாலிபர் ஜமுனா தேவியின் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் ஆரத்தை கொத்தாக பறித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த நகை பறிப்பால் தீபக்கின் மனைவி அதிர்ச்சியடைந்தார்.
திருடன்…திருடன்… தப்பி ஓடுகிறான்… பிடியுங்கள்…பிடியுங்கள்… என்று சத்தமிட்ட வாறு தீபக் அந்த வாலிபரை பிடிக்க ஓடினார். அதற்குள் அந்த வாலிபர் சம்பவ இடத்தில் இருந்து ரோட்டை கடந்து எதிர்புறம் நோக்கி ஓடினார்.
தீபக்கும் விடாமல் அந்த வாலிபரை துரத்தி சென்றார். அந்த நேரத்தில் ரோட்டின் மறுமுனைக்கு சென்ற அந்த வாலிபர் அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிக்க முயன்றார். பின் தொடர்ந்து ஓடிய தீபக் அந்த வாலிபர்களின் மோட்டார் சைக்கிளை நெருங்கினார்.
மோட்டார் சைக்கிளின் பின்புறத்தை பிடித்துக் கொண்டு திருடன்…திருடன்…என கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் ரோட்டின் குறுக்கே தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளையர்கள் தப்பி செல்லாதவாறு தடுத்தனர்.
சுதாகரித்துக்கொண்ட 2 கொள்ளையர்களும் தங்களது சட்டைப்பையில் இருந்த கத்தியை எடுத்து காண்பித்து தீபக் மற்றும் பொதுமக்கள் முன்பு காண்பித்தனர். தங்களை பிடிக்க யாராவது முயற்சி செய்தால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பொதுமக்கள் அவர்களை நெருங்கவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு 2 கொள்ளையர்களும் தங்களது மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் போட்டு விட்டு அருகிலிருந்த சந்து வழியாக நகையுடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பீளமேடு போலீசார் கொள்ளையர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் அதை வைத்து கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் 2 நம்பர் பிளேட்டுகள் மாட்டியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஒன்று தமிழக பதிவு எண்ணிலும், மற்றொன்று கேரள பதிவு எண்ணிலும் இருந்தது.
இதில் எந்த பதிவெண் உண்மையானது என்பது குறித்து விசாரணை நடை பெறுகிறது. இது குறித்து போலீசார் கூறும்போது கிடைத்துள்ளன ஆவணங்களை வைத்து கொள்ளையர்கள் குறித்து புலன் விசாரணையில் இறங்கியுள்ளோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றனர்.
கோவை மாநகரின் முக்கிய சாலையும் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும் பகுதியுமான அவினாசி சாலையில் தைரியமாக கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating