அமர காவியம் (விமர்சனம்)!!
காட்சிக்குக் காட்சி காதல் வழிகிற மாதிரி ஒரு கதை. 80-களின் பின்னணியில் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஊட்டி மலைகளையும், அந்த பனி படர்ந்த வீடுகளையும் ரசிக்கிற வகையில் படமாக்கியதொடு, காதல் எதையும் செய்யும் என்ற ஒரு பேரதிர்ச்சியான முடிவைக் காண்பித்து நம் இதயங்களை உறங்கவிடாமல் செய்கிறது அமர காவியம்.
ஊட்டி பள்ளியில் படிக்கும் நாயகன் ஜீவா. அதே வகுப்பில் படிப்பவள் கார்த்திகா. ஜீவாவின் நண்பன் பாலாஜியும் கார்த்திகாவும் குடும்ப நண்பர்கள். பாலாஜிக்கு கார்த்திகா மீது காதல் ஆசை ஏற்பட்டு, அதற்கு அவன் தன் நண்பன் ஜீவாவை தூது அனுப்ப, நாம் எதிர்ப்பார்த்தது போலவே ஜீவாவுக்கும் கார்த்திகாவுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது.
முதலில் கார்த்திகா தன் காதலை முன்வந்து சொல்ல, ஒரு ஆச்சரியத்துடனும், நண்பனுக்கு துரோகம் செய்கிறோமோ என்ற பதட்டத்துடனும் அந்த காதலை ஏற்றுக்கொள்கிறான்.
பள்ளியில் படிக்கும் இருவரும் வயதுக்கு மீறி காதலிக்கிறார்கள். காதல் ரசிக்க வைத்தாலும், நம் உள்மனதில் ‘இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலயாடா?’ என்ற கேள்வி வந்துபோகிறது.
குறிப்பாக, யாரும் இல்லாத வீட்டில், ‘டவலை அவுத்துடுவேன்’ என்று நாயகி விளையாடுவதும், ‘அவுத்து விட்டுக்கோ…’ என நாயகன் கட்டி அணைப்பதும்… படிக்கிற வயசுல பண்ற வேலையா இது என்று பல பெற்றோர்கள் புலம்பு சத்தம் நம் சிந்தனைக்கு ஒலிக்கிறது.
காட்சிகளில் அழகியல் இருந்த அளவிற்கு எதார்த்தம் இல்லை. வேண்டுமென்றே பிரச்சனைகளை விலைக்கு வாங்குவதே காதலர்களின் வேலையாக இருப்பது எரிச்சலையே கொடுக்கிறது. காதலனின் வீடு தேடி வந்த காதலிக்கு, அவன் தாய் டீ போட்டுக் கொடுப்பதும், அதே போல காதலியின் வீட்டில் இருவரும் தனியரையில் முத்தங்கள் பரிமாறிக்கொள்வது எந்த அளவில் சாத்தியம் என்று புரியவில்லை.
இந்த முத்தக் காதல் இருவரின் வீட்டுக்கும் தெரியவர, பிரச்சனை வெடிக்கிறது. சும்மா இருந்த ஜீவாவை காதலிப்பதாக உசுப்பேற்றிவிட்டு, தன் குடும்ப சூழலுக்காக காதலை தொடர தயங்குகிறாள் கார்த்திகா. இதற்கிடையில் இவர்கள் இருவராலும் பாதிக்கப்பட்ட பாலாஜி, இந்தக் காதலை பிரிக்க சதி செய்கிறார்.
காதலை தூக்கி எறியும் கார்த்திகா மீது, படம் பார்க்கும் நமக்கே கோபம் கொப்பளிக்க… ஹீரோ ஒரு விபரீத முடிவுக்கு வருகிறான். அதுவே க்ளைமாக்ஸ்! ஆர்யாவின் தம்பி எனத் தோற்றத்தில் மட்டும் அல்ல நடிப்பில் நிரூபித்திருக்கிறார் சத்யா.
ஆழ்ந்த பார்வை, பொருமையான பேச்சு, துணிச்சலான கோபம் என்று கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாய் பொருந்துகிறார் ஹீரோ. ஹீரோயின், ஓவர் ஆக்டிங்! தோற்றத்தில் ரசிக்க வைக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் இதயங்களை பதற வைத்து, இமைகளை ஈரமாக்குகிறார்.
குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு படம் முழுக்க பயணித்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். தம்பி ராமைய்யா ஒரு சில காட்சிகளில் வந்தாலும், வழக்கம்போலவே அசத்துகிறார் மனிதர்.
ஜீவா ஷங்கரின் பனிபடர்ந்த காட்சிகளுக்கு தன் மாய இசையால் மாயாஜாலம் நிகழ்த்துகிறார் ஜிப்ரான். பாடல்கள் ‘மௌனம் பேசும்…’ பாடல் காதலை மழையாய் பொழிகிறது.
பல காட்சிகளில் நமக்கு கேள்விகள் அதிகமாக இருந்தாலும், கடைசி வரை நம்மை கதையை நோக்கி பயணிக்க வைப்பதில் ஜீவா ஷங்கர் வெற்றியடைகிறார். 80-களின் முடிவில் இருக்கும் காலத்தை உணர்த்த பல மெனக்கெடல்களை இயக்குனர் மேற்கொண்டிருந்தாலும், இன்னும் உடையில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
படத்தின் பல காட்சிகளில் காதல் இவ்வளவு பைத்தியக்காரத் தனமானதா என்ற கேள்வி வந்து வந்து போகிறது. காதல் வலிமையானது என்பது உலகறிந்த விஷயம். உணர்ச்சி வசப்பட்டு செய்கிற குற்றங்களை நியாயப்படுத்தினால் அதை எப்படி காதலாக ஏற்க முடியும்?
Average Rating