வலியுடன் ஒரு காதல் (திரைவிமர்சனம்)!!
நாயகன் கதிர் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவர் ஒருநாள் அதேஊரில் மிகப்பெரிய செல்வந்தரான சரவணப் பொய்கையின் மகளான நாயகி ஸ்வேதாவை பார்க்கிறார். பார்த்ததும் அவர்மீது ஒருதலையாக காதல் கொள்கிறார்.
நாயகியோ அவரை வெறுமனே பார்த்து ரசிக்க மட்டுமே செய்கிறாள். தனது நண்பர்களுடன் அவளை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு திரிகிறார் கதிர். இது ஸ்வேதாவை திருமணம் செய்துகொள்ள காத்துக் கொண்டிருக்கும் அவளது மாமாவான துரைச்செல்வத்துக்கு தெரிய வருகிறது.
உடனே கதிரை வரவழைத்து மிரட்டி அனுப்புகிறார். ஆனார், கதிர் மறுபடி மறுபடியும் ஸ்வேதாவை சுற்றி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த துரை செல்வம் தனது சகோதர்களுடன் வந்து கதிரின் வீட்டை சூறையாடுகிறார். கதிரை தூக்கிக்கொண்டு செங்கல்சூளையில் வைத்து அடைத்து வைக்கின்றனர்.
அப்போது ஸ்வேதாவை வரவழைத்து இவன் யாருன்னு தெரியுதா? என்று கேட்கிறார் அவளது அப்பா. இதற்கு ஸ்வேதா, அவன் யாரென்றே தெரியாது என்று சொல்கிறாள். நாம்தான் நமது மகளை தவறாக நினைத்துவிட்டோம் என்று சொல்லி அவனை அடித்து உதைக்க சொல்கிறார்.
கதிர் அடிவாங்குவதை பார்க்கும் ஸ்வேதாவுக்கு கதிர்மீது காதல் துளிர்விடுகிறது. அடிவாங்கி வேதனையில் இருக்கும் நாயகனை தேடிப்போய் தனது காதலை சொல்கிறாள். அன்றுமுதல், இருவரும் போனிலேயே பேசி இவர்கள் காதலை வளர்த்து வருகிறார்கள்.
ஒருகட்டத்தில் இது ஸ்வேதாவின் பெற்றோர்களுக்கும், அவளது மாமாவுக்கும் தெரியவருகிறது. இறுதியில் இவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
கதிர் கதாபாத்திரத்தில் ராகேஷ் முகம் முழுக்க தாடியும், லுங்கியுமாக கிராமத்து இளைஞனை நினைவுபடுத்துகிறார். ஆனால், நடிப்பை வரவழைக்கத்தான் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். வில்லன்கள் இவரை போட்டு எவ்வளவுதான் உதைத்தாலும் எதையும் தாங்கும் இதயம்போல தாங்கிச் செல்வது பரிதாபத்தை வரவழைக்கவில்லை. சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.
கௌரி நம்பியார் கிராமத்து பெண் வேடத்துக்கு பொருந்தினாலும், காதல் காட்சிகளில் இவருடைய நடிப்பு அழுத்தமாக பதியவில்லை. சரவணப் பொய்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜே.கே.செல்வா பார்வையாலேயே மிரட்டுகிறார். நாயகியின் மாமாவாக வரும் சுரேஷ் வின்சென்ட்டுக்கு படத்தில் நாயகனை அடிப்பது ஒன்றேதான் வேலையே தவிர, படத்தில் இவருக்கென்று பெரிய காட்சிகள் இல்லை.
வலியுடன் ஒரு காதலை நமக்கு வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஞ்சீவன். படத்தில் சஸ்பென்ஸ் வைக்கிறேன் என்பதற்காக கதையை குழப்பி, நம்மையும் புலம்ப வைத்திருக்கிறார். கதையை நகர்த்த காட்சிகளை நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். வில்லன் நாயகனை அடிக்கும் காட்சிகள் எல்லாம் நீளமாக வைத்திருப்பது பார்க்கமுடியவில்லை.
செல்லாஹ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். செல்வக்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டவில்லை. மொத்தத்தில் ‘வலியுடன் ஒரு காதல்’ பயங்கரமாக வலிக்கிறது
Average Rating