காதலனை கொன்றவர்களை தண்டிக்க வேண்டும்: இளம்பெண் கதறல்!!
கொடூரமாக கொலை செய்யப்பட்ட அர்னால்டின் காதலி போலீஸ் விசாரணையில் கண்ணீர் மல்க கூறியதாவது:–
கோவை பூ மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் நான் தனியார் கொரியர் சர்வீசில் வேலைபார்த்து வருகிறேன். எனது பெரியம்மா வீடு திருப்பூரில் உள்ளது. அங்கு நான் அடிக்கடி செல்வேன். அப்போது அர்னால்டை சந்தித்தேன்.
தொடக்கத்தில் கண்ணால் பேசிக்கொண்ட நாங்கள் பின்னர் காதலிக்க ஆரம்பித்தோம். கடந்த 4 வருடமாக காதலித்து வந்தோம். எங்கள் காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரியவந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள்.
அர்னால்டின் கல்லூரி படிப்பு முடிந்ததும் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர். வழக்கமாக நாங்கள் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொள்வோம். விடுமுறை நாட்கள் என்றால் அர்னால்டு என்னை சந்திக்க வருவார்.
நாங்கள் இருவரும் புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள வணிக வளாகம் அருகே சந்தித்து மனம் விட்டு பேசுவோம். பின்னர் என்னை பிரிய மனமில்லாது அங்கிருந்து ரெயில் நிலையத்துக்கு அர்னால்டு நடந்தே செல்வார். திருப்பூர் ரெயில் ஏறி ஊருக்கு சென்று விடுவார்.
அதேபோல் கடந்த 17–ந் தேதி இரவு 7.15 மணிக்கு அர்னால்டு என்னை சந்திக்க வந்தார். இருவரும் 8.15 மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் ஊருக்கு கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
வழக்கமாக ரெயில் ஏறியதும் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவார். நானும் பதில் அனுப்புவேன். வெகு நேரமாகியும் செய்தி ஏதும் வரவில்லை. பதறிப்போன நான் அவரது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றேன். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலே பதிலாக கிடைத்தது.
ஏதும் வேலையாக இருப்பார். செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பார் என நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டு தூங்கி விட்டேன். மறுநாள் காலையில் அர்னால்டு வீட்டுக்கு தொடர்பு கொண்ட போது அவர்கள் ‘அவன் நேற்று இரவு இங்கு வரவில்லை’ என்றனர்.
சொல்லாமல், கொள்ளாமல் எங்கும் போக மாட்டாரே? செல்போனையும் ஏன் சுவிட்ச் செய்து வைத்திருக்கிறார் என்று என் மனது குழப்பத்துக்கு ஆளானது. நேற்று இரவு என்னை சந்தித்து விட்டு ஊருக்குத்தான் கிளம்பி வந்தார். ஏன் இன்னும் வரவில்லை என்றேன்.
எனவே அர்னால்டின் தந்தை திருப்பூர் போலீசில் புகார் செய்யச்சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் சம்பவம் நடந்த இடம் கோவை என்பதால் நீங்கள் அங்கு தான் புகார் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். எனவே அர்னால்டின் தந்தை இங்கு வந்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்த போது தான் அர்னால்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்த செல்போன் அவர் வைத்திருந்த பையில் இருந்த பொருட்கள் கொள்ளைபோன விவரம் தெரியவந்தது.
திருமணம் முடிந்து அர்னால்டுடன் இல்வாழ்க்கையை இனிமையாக கழிக்க ஆசைக் கனவுகளுடன் காத்திருந்தேன். அவை எல்லாம் கானல் நீராகி விட்டதை எண்ணி என் நெஞ்சம் கலங்குகிறது. அவரை கொன்றவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.
Average Rating