திருவட்டாரில் கணவன் வீடு முன்பு கைக்குழந்தையுடன் இளம்பெண் 2–வது நாளாக தர்ணா போராட்டம்!!
குலசேகரத்தை அடுத்த கொல்வேல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ்.
இவரது மகள் மகிளா கிறிஸ்டல் (வயது 28). இவருக்கும் திருவட்டாரை அடுத்த திருவரம்பு பகுதியை சேர்ந்த ஜான் சேகர் (35) என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
அப்போது பெண் வீட்டார் 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் சீதனம் மற்றும் சீர் வரிசை பொருட்களை கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
திருமணத்திற்கு பிறகு மகிளா கிறிஸ்டல் கணவர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரை பிரசவத்திற்காக பெற்றோர் அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகு மகிளா கிறிஸ்டலை அவரது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் பார்க்க வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும் பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகிளா கிறிஸ்டல் குடும்பத்தினர் கொல்வேலுக்கு சென்று ஜான் சேகரை பார்த்து பேசினர்.
அவரும் மனைவியை பார்க்க விரும்பவில்லை என கூறிவிட்டார். அதற்கான காரணம் கேட்ட போது மனைவிக்கு உடல் நல கோளாறு இருப்பதாகவும், அவரை ஏற்று கொள்ள முடியாது எனவும் கூறிவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து மகிளா கிறிஸ்டலின் பெற்றோர் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு உடல் நல பரிசோதனைகள் செய்து அவர் நலமாக இருப்பதாக சான்றிதழ் பெற்றனர்.
அதனை கணவர் வீட்டாரிடம் கொடுத்து மகிளா கிறிஸ்டலையும், அவரது குழந்தையையும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டனர். அதற்கு கணவன் வீட்டார் எந்த பதிலும் கூறவில்லை.
இதையடுத்து தன்னை கணவருடன் சேர்த்து வைக்கும்படி மகிளா கிறிஸ்டல் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அங்கும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி அவர் நேற்று காலை திடீரென தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் கொல்வேலில் உள்ள கணவன் வீட்டுக்கு சென்றார்.
அங்கு கணவனும், அவரது குடும்பத்தினரும் இல்லை. வீடு பூட்டி கிடந்தது. அந்த வீடு முன்பு மகிளா கிறிஸ்டல் திடீரென தனது கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீண்ட நேரமாக ஒரு பெண் ஜான் கிறிஸ்டோபர் வீடு முன்பு அமர்ந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று அவரிடம் விபரம் கேட்டனர். விஷயம் தெரிந்ததும் அவர்கள் இதனை திருவட்டார் போலீசாருக்கு தெரிவித்தனர்.
அங்கிருந்து போலீசார் விரைந்து வந்து மகிளா கிறிஸ்டலிடம் விசாரித்தனர். அவர் தன்னை கணவன் வீட்டார் ஏற்று கொள்ளும் வரை இங்கிருந்து போகமாட் டேன் என பிடிவாதமாக கூறிவிட்டார். அவரை போலீசார் சமரச படுத்த எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து மகிளா கிறிஸ்டலின் போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை அவரின் போராட்டம் 2– வது நாளாக நீடித்தது.ஏராளமான ஊர் மக்களும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் பற்றி மகிளா கிறிஸ்டல் கூறியதாவது:–
திருமணம் முடிந்ததும் என்னை கணவர் அன்பாக பார்த்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாகவே குடும்பம் நடத்தினோம்.
ஆனால் அவரின் உறவினர்களுக்கு என்னை பிடிக்கவில்லை. அவரிடம் இருந்து என்னை பிரிக்க முயற்சித்தனர்.
அதன்விளைவாக நான் பிரசவத்திற்கு போன பின்பு அவரது மனதை மாற்றி குழப்பிவிட்டனர். இந்த உண்மையை அவருக்கு புரிய வைக்கவே இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். என்னையும், கணவரையும் குடும்பத்தினர் சேர்த்து வைக்கும் வரை என் போராட்டம் நீடிக்கும். அது வரை யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating