பெரம்பலூர்: கள்ளக்காதலியை கொன்று 12 பவுன் நகையை திருடிய டிரைவர் கைது!!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள சின்னாற்று மணல் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 42 வயதுள்ள பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கொலையாளியை கண்டு பிடிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. சோனல் சந்திரா அறிவுரைபடி ஏ.டி.எஸ்.பி. விஜயபாஸ்கர் மேற்பார்வையில், மங்களமேடு டி.எஸ்.பி. கோவிந்தராஜ், குன்னம் இன்ஸ்பெக்டர் சிவராஜ், மங்களமேடு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரம்பலூர் அருகே பீல்வாடி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவரது மனைவி செல்லம் (வயது 42) என்பது தெரிய வந்தது. இறந்தவர் அடையாளம் தெரிய வந்ததும் அவரின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என போலீசார் விசாரைணை தீவிரப்படுத்தினர்.
அப்போது செல்லத்திற்கும், பீல்வாடி கிராமத்தின் அருகில் உள்ள கிராமமான சீத்தளி கிராமத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் வெங்கடேசன் (40) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது செல்லத்தை கொலை செய்து 12 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக வெங்கடேசன் போலீசாரிடம் கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட செல்லத்தின் கணவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மூத்த மகன் அழகுதுரை வெளி நாட்டில் உள்ளார். 2–வது மகன் பாலகிருஷ்ணன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மகள் சுமதிக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இதனால் செல்லம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது வீட்டின் அருகில் தான் மினி பஸ் நிறுத்தம் உள்ளது. அப்போது மினி பஸ் டிரைவரான வெங்கடேசனுக்கும், செல்லத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளத் தொடர்பாக மாறியது. வெங்கடேசனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வெங்கடேசனும், செல்லமும் கணவன்–மனைவி போல் வெளியூர்களுக்கு சென்று வந்துள்ளனர்.
மகன்கள் தனது செலவிற்கு அனுப்பும் பணத்தில் இருந்து வெங்கடேசனுக்கு செல்லம் பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லத்தின் மகன் பாலகிருஷ்ணன் சென்னையில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அவரை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்ற செல்லம் அங்கு தான் அடகு வைத்திருந்த 2 பவுன் நகைகளை திருப்பினார்.
பின்னர் தனக்கு பெரம்பலூரில் ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும், அதனால் மாலையில் வீட்டிற்கு வருவதாகவும் மகன் பாலகிருஷ்ணனிடம் கூறி அவரை மட்டும் செல்லம் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மகன் சென்றவுடன் தனது காதலன் வெங்கடேசனுக்கு போன் செய்து தான் பெரம்பலூரில் இருப்பதாக கூறியுள்ளார். உடனே வெங்கடேசனும் பெரம்பலூர் வந்துள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்துள்ளனர். பின்னர் மாலையில் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர்.
இருட்டத் தொடங்கியதும் இருவரும் அரியலூர்–அகரம் சிகூர் ரோட்டில் உள்ள வயலப்பாடியில் சின்னாறு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு நிலா வெளிச்சத்தில், மணல் பரப்பில் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது வங்கியில் இருந்து நகையை திருப்பியது குறித்து செல்லம், வெங்கடேசனிடம் கூறினார்.
உடனே வெங்கடேசன், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் திருப்பிய நகையை தன்னிடம் தருமாறு கூறியுள்ளார். ஆனால் மகனுடன் சென்று நகையை திருப்பியதால் அவன் நகையை எங்கே என்று கேட்பான், அதனால் தர முடியாது என செல்லம் கூறியுள்ளார். அப்போது செல்லம் அணிந்திருந்த மற்ற நகைகளை பார்த்த வெங்கடேசனுக்கு அவற்றை கொள்ளையடிக்கும் எண்ணம் உருவானது.
உடனடியாக செல்லத்தை ஆற்று மணலில் தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் செல்லத்திடம் இருந்த 12 பவுன் நகைகளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். போலீஸ் விசாரணையில் இவர்களது கள்ளத் தொடர்பு தெரியவந்ததால் வெங்கடேசன் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
குன்னம் போலீசார் வெங்கடேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating