சேலத்தில் குடிபோதையில் கத்தியால் இன்ஸ்பெக்டரை குத்திய வாலிபர் கைது!!
சேலத்தில் குடிபோதையில் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
சேலம் மாநகர ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சொரிமுத்து (வயது 55). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆகும். ஏற்கனவே சென்னையில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவர் 3 ஆண்டுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சேலத்துக்கு வந்தார்.
இவர் நேற்று இரவு வேலை முடிந்து போலீஸ் ஜீப்பில் அஸ்தம்பட்டியில் உள்ள அவர் தங்கி உள்ள அறைக்கு திரும்பி கொண்டிருந்தார். பின்னர் அவர் காந்தி ரோடு பகுதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் உள்ள டிபன் கடைக்கு சாப்பிட சென்றார்.
அப்போது அந்த வழியே பால்காரர் ஒருவர் மொபட்டில் வேகமாக வந்து இன்ஸ்பெக்டர் சொரிமுத்து மீது மோதினார். இதில் தடுமாறி இன்ஸ்பெக்டர் சொரிமுத்து கீழே விழுந்து விட்டார். பால்காரரும் கீழே விழுந்து விட்டார். இதில் சமாளித்து கொண்டு எழுந்த சொரிமுத்து, கீழே விழுந்த பால்காரரை தூக்கி விட்டு, ஏன் இப்படி வேகமாக வண்டி ஓட்டுகிறீர்கள். பார்த்து வரவேண்டியது தானே என கேட்டார்.
அப்போது அங்கு சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 34) என்பவர் குடிபோதையில் தள்ளாடி தள்ளாடி வந்து இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவிடம், பால்காரரிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என கேட்டார். இதில் கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர் சொரிமுத்து, ரவிச்சந்திரனிடம் குடிபோதையில் வந்து ஏன் தகராறு செய்கிறாய். பால்காரர் வண்டி ஓட்ட தெரியாமல் வந்து மோதிவிட்டார். இது தெரியாமல் என்னிடம் வந்து நீ தகராறு செய்கிறாய் என கேட்டார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ரவிச்சந்திரன் தனது சட்டைப்பையில் மறைத்து வைத்து இருந்த சேவிங் செய்யும் கத்தியை எடுத்து இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவின் கழுத்து, காது பகுதிகளில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் பயந்த ரவிச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் இன்ஸ்பெக்டர் சொரிமுத்து சுதாரித்து கொண்டு ரவிச்சந்திரனை பிடித்து கொண்டு சேலம் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து ரவிச்சந்திரனை பிடித்து கொண்டனர். அவர் வைத்து இருந்த சேவிங் செய்யும் கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவை போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சேர்த்தனர். இங்கு மின் தடை ஏற்பட்டதால் டார்ச் லைட் வெளிச்சத்தில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தை அறிந்த சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் பாபு ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவிடம் விசாரித்தனர். அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க டீன் மோகனிடம் கேட்டு கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் முருகசாமி, இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் விசாரித்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் சேலம் காந்தி ரோடு பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வடை, போண்டா போடும் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் அஸ்தம்பட்டி பகுதிக்கு சென்று மதுகுடித்து விட்டு காந்தி ரோட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் சொரிமுத்து, பால்காரரிடம் பேசிக்கொண்டிருப்பதை அறிந்து அங்கு சென்று இன்ஸ்பெக்டரை குடி போதையில் தாக்கி உள்ளார். இவர் மீது வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating