மருத்துவ மாணவி தற்கொலையால் அவரது காதல் கணவரும் தூக்கில் தொங்கினார்!!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, திரு.வி.க. தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகள் விஜயலட்சுமி (வயது 21). இவர், மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துவந்தார். கடந்த 2-ந் தேதி விடுதியில் இருந்து தனது ஊருக்கு சென்ற விஜயலட்சுமி, 5-ந் தேதி கல்லூரிக்கு தனது தந்தையுடன் வந்தார். மகளுக்கு மேலும் சில நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் அன்பழகன் கேட்டார். அப்போது விடுதிக்குசென்ற விஜயலட்சுமி, அங்கு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் கிடைத்தன. சொந்த ஊரில் விஜயலட்சுமியும் அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பாக்யராஜ் (32) என்பவரும் காதலித்து வந்தனர். 4 மாதங்களுக்கு முன்பு அவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பாக்யராஜ் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயம் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் மகளை கண்டித்தனர். இதனால் மகள் தவறான முடிவை எடுத்து விடுவாளோ என பயந்து கல்லூரியில் விடுமுறை எடுத்து சில நாட்கள் வீட்டிலேயே வைத்திருக்க நினைத்தனர். இந்த நிலையில் தான் விஜயலட்சுமி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
பி.டெக் என்ஜினீயரான பாக்யராஜ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு கம்பெனியில் கெமிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். தனது காதல் மனைவி விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட தகவல் அவருக்கு கிடைத்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.
மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாத அவர் திருத்தணிக்கு வந்து அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார். நேற்று இரவு விடுதி ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர், கதவை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளுமாறும், காலையில் நான் எழுந்து கூப்பிடும்போது கதவை திறந்தால் போதும் என்றும் கூறிவிட்டு படுக்கச் சென்றார்.
அறையில் இருந்து தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என்று தனது செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அதில் அவர் தங்கியிருந்த விடுதியின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், திருத்தணி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த மின்விசிறியில் அவர் ஜீன்ஸ் பேண்ட் மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் பாக்யராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் அறையில் இருந்து கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் பாக்யராஜ் எழுதியிருப்பதாவது:-
ஒரு ஆண்டுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எனது மனைவி விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஆந்திராவில் உள்ள கம்பெனியில் வேலைக்கு சென்றுவிட்டேன்.
ஊருக்கு வரும்போது எனது ஊரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை பார்த்தேன். அவர் சென்னையில் தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவந்தார். அவரை நான் அடிக்கடி சந்தித்ததால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு விஜயலட்சுமியை சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டேன். அதற்கு விஜயலட்சுமி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அதில் இருந்து எனக்கு வாழப்பிடிக்கவில்லை. எனவே விஜயலட்சுமி சென்ற இடத்துக்கே நானும் செல்ல முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
இதுபற்றி திருத்தணி இன்ஸ்பெக்டர் சிகாமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating