சங்கரன்கோவில் அருகே இளம்பெண் கொலையில் சுவீட் கடை ஊழியர் கைது!!
சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் மணிமேகலை (வயது 20). இவர் 10–ம்வகுப்பு படித்து விட்டு சங்கரன்கோவிலில் டைப்ரைட்டிங் படித்து வந்தார். கடந்த 28–ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மணிமேகலை அதன்பிறகு வீடு திரும்பவில்லை. கடந்த 30–ந்தேதி கரிவலம் வந்த நல்லூர் அருகே உள்ள பாஞ்சாகுளம் புதரில் மணிமேகலை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது. நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வானுமாமலை மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்–இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்ட மணிமேகலை பயன்படுத்திய செல்போன் எண் மூலம் அவர் யார் யாருடன் பேசினார். செல்போன் டவர் எந்தெந்த பகுதியில் இருந்து தொடர்பு கொள்ளப்பட்டது என்று விசாரணை நடத்தினர்.
அப்போது கொலைக்கான திடுக் தகவல்கள் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:–
கொலை செய்யப்ப்டட மணிமேகலையின் செல்போனுக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணை அவர் தொடர்பு கொண்ட போது சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 29) என்பவர் பேசியது தெரியவந்தது. பாலகிருஷ்ணன் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி தங்கமாரியம்மாள் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
அதன்பின்னர் இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினர். இதில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பாலகிருஷ்ணன் ஊருக்கு வந்த போது, மணிமேகலையை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் பாலகிருஷ்ணன் கேரளாவில் இருந்து அடிக்கடி ஊருக்கு வரத்தொடங்கினர்.
முதலில் பாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விவரம் மணிமேகலைக்கு தெரியவில்லை. அதன்பின்னர்தான் அவருக்கு தெரியவந்துள்ளது. ஆனாலும் தன்னை 2–வதாக திருமணம் செய்து கொள்ளும்படி மணிமேகலை தனது காதலனிடம் வற்புறுத்தினார்.
இந்த விபரம் பாலகிருஷ்ணனின் முதல் மனைவி தங்கமாரியம்மாள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் தெரிந்து எச்சரித்து உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28–ந்தேதி கேரளாவில் இருந்து வந்த பாலகிருஷ்ணன், மணிமேகலையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாஞ்சாங்குளம் அருகே உள்ள மறைவிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது காதலியுடன் அவர் உல்லாசமாக இருக்க விரும்பி உள்ளார். ஆனால் மணிமேகலை தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், மணிமேகலை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை கல்லால் சிதைத்து விட்டு தப்பி ஓடியது போலீசாருக்கு தெரியவந்தது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி இன்று பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைதான பாலகிருஷ்ணன் மேற்கண்ட தகவலை போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியுள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிமேகலை வற்புறுத்தியதால் கொலை செய்தேன் என்றும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating