திருமணமான ஆண்கள் கவனிக்கவும்..!!
பெரும்பாலான ஆண்களுக்கு திருமணம் என்றாலே ஒரு பரவச நிலை தான். திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே ‘எப்படா கல்யாணம் நடக்கும்?’ என்று படபடப்புடன் கவுண்ட் டவுனை ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனாலும், பேச்சுலர்களாக நன்றாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஆண்களுக்கு திருமணம் என்பது உண்மையிலேயே ஒரு சரியான ‘கால்கட்டு’ தான்! திருமணத்திற்குப் பின் பொறுப்புக்களும் கடமைகளும் அதிகம் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள் சுதாரித்துக் கொள்வார்கள்.
கட்டிய மனைவியின் போக்கிலேயே போய் சுதாரித்தவர்களும் உண்டு. ஆனால், பலரும் திருமணம் முடிந்தவுடன் ‘ஏன்டா கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்’ என்று நொந்து கிடப்பார்கள். பேச்சுலர் வாழ்க்கையை அவ்வளவு எளிதாகக் கைவிட முடியாதவர்களுக்குக் கூடிய சீக்கிரமே திருமண வாழ்க்கை சலித்துவிடும். பேச்சலர் வாழ்க்கையில் அனுபவித்து வந்த சில பழக்கவழக்கங்களைக் கைவிட முடியாமல் தவிப்பார்கள்.
அந்தப் பழக்கங்களைக் கைவிட்டால் தான் திருமண வாழ்க்கை இனிக்கும் என்று உணர்வது தான் அவர்களுக்கு நல்லது. அப்படிக் கைவிட வேண்டிய சில பழக்கவழக்கங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
உங்களுடைய பைக் சாவியையோ, வாட்ச்சையோ, பர்ஸையோ, சாக்ஸ்களையோ கண்ட கண்ட இடத்தில் வைத்துவிட்டு, பிறகு அவை தேவைப்படும் போது தேடி அல்லாடாதீர்கள். அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கமாக வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்க மனைவியும் பாராட்டுவாங்க!
ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்ததிலிருந்தே டி.வி. முன் உட்கார்வது, மொபைலில் கேம் விளையாடுவது ஆகிய பழக்கங்கள் உங்களிடம் உள்ளதா? உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது, ஞாபகம் இருக்கட்டும். உடனே அவற்றைத் தூக்கி எறியுங்கள். உங்கள் மனைவியைக் கொஞ்சுங்கள், அவளோடு குறும்புத்தனமாக விளையாடுங்கள்.
திருமணத்திற்குப் பின்னரும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் பின்னால் ஓட வேண்டாம்.
நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இருப்பதைப் பற்றி உங்கள் மனைவி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதுவே பழக்கமாகிப் போனால் கடுப்பாகி விடுவார்கள். திருமணத்திற்குப் பின் நண்பர்களுடன் அளவான பழக்கம் வைத்துக் கொண்டால் நல்லது. மேலும் இதனால் உங்கள் மனைவிக்கு அவர்கள் மேல் மதிப்பும் ஏற்படும்.
நீங்கள் மட்டுமல்ல, உங்கள் படுக்கையறையையும் எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். உங்களுடைய அழுக்கான டி-சர்ட்டுகளையும், ஈரமான டவலையும் படுக்கையில் குவித்து வைக்காதீர்கள். இதனால் அவற்றின் மேலே நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள் என்று உங்கள் மனைவி கூற நேரிடலாம்.
டைனிங் டேபிளுக்கு நீங்கள் வந்து உட்கார்ந்ததும், உங்கள் மனைவி வந்து தான் உங்களுக்கு உணவு பரிமாற வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் வீடு ஒரு ஹோட்டல் அல்ல, உங்கள் மனைவியும் சர்வர் அல்ல. அவளுக்குக் கூடமாட சமையல் வேலையில் உதவுங்கள். இருவரும் சேர்ந்தே உட்கார்ந்து சாப்பிடுங்கள். அதேபோல், படுக்கையில் வைத்து எதையும் உண்ணும் பழக்கத்தையும் தவிர்த்து விடுங்கள்.
உங்களுக்குப் பிடித்த சினிமாவையோ, நடிகர்-நடிகைகளையோ, விளையாட்டுக்களையோ, பங்குச் சந்தை பற்றியோ உங்கள் மனைவியிடம் பேசுங்கள், தவறில்லை. ஆனால் எப்போது பார்த்தாலும் அவற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மனைவிக்குப் பிடித்தவற்றையும் பேசி, அவளை சந்தோஷப்படுத்துங்கள்.
அதேபோல், மற்ற பெண்களைப் பற்றியோ அவர்களுடைய நடை, உடை, பாவணைகளைப் பற்றியோ, உங்கள் மனைவியிடம் எதுவும் பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு 99% பிடிக்கவே பிடிக்காது. எனவே, அடுத்த பெண்களைப் பற்றி நீங்கள் அடக்கி வாசிப்பது தான் நல்லது.
Average Rating