விபத்து வழக்கில் திருப்பம்: மாணவியை காதலித்த வாலிபர் கொலை!!
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சரணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அன்பு(19), கடந்த ஏப்ரல் 16–ந்தேதி இரவு 7 மணிக்கு அன்புவின் நண்பர்களான அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன்(20) முட்நாட்டூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ்(20) ஆகிய இருவரும் அன்புவை வெளியே அழைத்து சென்றனர்.
முட்நாட்டூர் அருகே அமிர்தி மெயின் ரோட்டில் உள்ள பாலத்தில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அன்பு படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த அன்பு ஏப்ரல் 26–ந்தேதி இறந்தார். இதுகுறித்து ஜம்னாமரத்தூர் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் அன்பு கழுத்து நெரிக்கப்பட்டு குரல்வளை உடைந்து அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் கலசப்பாக்கம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மறுகோணத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டு இறந்து போன அன்புவின் நண்பர்களில் ஒருவரான தங்கராஜை பிடித்தார். ஆனால் வெங்கடேசன் தப்பியோடி விட்டார்.
பிடிபட்ட தங்கராஜ் கொடுத்த தகவலின் பேரில் முட்நாட்டூர் கிராமத்தை சேர்ந்த அப்பாசாமி(40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
அப்பாசாமியின் ஒரே மகள் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வீட்டில் தங்கியிருந்த மாணவிக்கு வாலிபர் அன்பு காதல் வலை வீசினார்.
இதை அறிந்த தந்தை அப்பாசாமி பலமுறை கண்டித்தும் அன்பு கண்டு கொள்ளவில்லை. தனது மகள் நன்றாக படிக்க கூடியவர் என்பதால் அவரை நிறைய படிக்க வைக்க வேண்டும் என நினைத்துள்ளார்.
ஆனால் இதற்கு இடையூறாக அன்பு இருந்ததால் அவரை போட்டுத் தள்ள திட்டமிட்டார். உயிர் நண்பர்கள் இருவரையும் பணம், மது கொடுத்து கொலை திட்டத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.
பாலத்தில் அமர்ந்து 3 நண்பர்களும் ஜாலியாக பேசிக் கொண்டு மது குடித்து கொண்டிந்த போது திடீரென அப்பாசாமி அங்கு வந்து உருட்டு கட்டையால் அன்புவின் மண்டையில் ஓங்கி அடித்தார்.
அதன் பிறகும் அவர் சாகவில்லை என்பதை அறிந்து அப்பாசாமி அன்புவின் கழுத்தை நெரித்துள்ளார். ஆனால் அவர் அப்போதும் சாகாமல் 10 நாட்கள் வரை உயிருக்கு போராடி அதன் பிறகு தான் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல்களை அப்பாசாமியும், தங்கராஜூம் வாக்குமூலமாக அளித்துள்ளனர். தப்பியோடிய வெங்கடேசனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Average Rating