இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்!!
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரயில் மோதியதில் 14 மாணவ-மாணவிகள், சாரதி என மொத்தம் 16 பேர் பலியானார்கள்.
20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணாபூரை சேர்ந்த சுவாமி கவுடு என்பவரின் மகன் தனுஷ் இறந்துவிட்டதாக கூறி வைத்தியசாலையில் ஒரு சிறுவனின் உடலை ஒப்படைத்தனர்.
முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்த உடலை சுவாமி கவுடுவும் சோகத்துடன் பெற்றுச் சென்று கிருஷ்ணாபூரில் இறுதி சடங்குகளை நடத்தி அடக்கம் செய்தார்.
இந்த நிலையில் செகந்திராபாத்தில் உள்ள யசோதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு சிறுவன் நேற்று காலை மயக்கம் தெளிந்து கண் விழித்தான்.
அவனிடம் வைத்தியர்கள் உன் பெயர் என்ன? தந்தை பெயர், எந்த ஊர் என்ற விவரங்களை கேட்டனர். அப்போது அவன் என் பெயர் தர்ஷன் கவுடு, வீட்டில் தனுஷ் என்று செல்லமாக கூப்பிடுவார்கள். எனது தந்தை சுவாமி கவுடு, கிருஷ்ணாபூர் என்றான்.
ஆனால் வைத்தியசாலைப் பதிவேட்டில் அவனது பெயர் தத்து என்றும் தந்தை இஸ்லாம்பூரை சேர்ந்த வீரபாபு என்றும் இருந்தது. இதனால் வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீரபாபுவின் மகள் புவனா விபத்தில் இறந்துவிட்டாள். அவளது உடலை அடக்கம் செய்துவிட்டு, மகன் தத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் பட்டியலில் இருந்ததால் வைத்தியசாலைக்கு அருகிலேயே அவர் காத்திருந்தார்.
வைத்தியசாலையில் நோய் தொற்று ஏற்படும் என்பதால் பெற்றோர் யாரையும் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை. சிகிச்சையில் தேறி வருபவர்களை மட்டுமே பார்க்க அனுமதித்தனர்.
இந்த நிலையில் ஆள் மாறிவிட்டது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் இரு சிறுவர்களின் பெற்றோரையும் (சுவாமி கவுடு, வீரபாபு) வைத்தியசாலைக்கு அழைத்து வந்தனர். அப்போது தனது மகன் தனுஷ் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்து பார்த்த சுவாமி கவுடுவுக்கு வைத்தியசாலையில் மகன் தனுஷை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
அவனும் தனது தந்தையை வைத்தியர்கள் மற்றும் பொலிசாருக்கு அடையாளம் காட்டினான்.
அதே சமயம் மகளை இழந்தாலும், மகனாவது கிடைத்தானே என்ற ஆறுதலில் இருந்த வீரபாபுவுக்கு தனது மகன் தத்துவும் இறந்துவிட்டான் என்ற தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது. அதோடு தனது மகனின் உடலையும் காணமுடியாமல் அவர் அதிர்ச்சியானார்.
இதுபற்றி வைத்தியசாலைக்கு வந்த தெலுங்கானா மாநில மந்திரி ஹரிஷ் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இருவரின் பெற்றோரையும் அழைத்து சமாதானப்படுத்தினார்.
தனது மகன் உடலை கேட்டதால், வீரபாபுவை கிருஷ்ணாபூருக்கு அழைத்துச் சென்று சிறுவன் உடல் அடக்கம் செய்த இடத்தில் இருந்து தத்துவின் உடலை தோண்டி எடுத்து ஒப்படைத்தனர்.
அந்த குழியை வெறுமனே மூடக்கூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அந்த குழியில் ஒரு சேவலை போட்டு மூடினர். பின்னர் வீரபாபு தனது மகன் தத்துவின் உடலை இஸ்லாம்பூருக்கு கொண்டு சென்று தங்கள் வழக்கப்படி இறுதி சடங்குகளை செய்தார்.
Average Rating