திருமணம் எனும் நிக்காஹ்!!
ஒரு படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை விரிவாக சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் இருந்தால் அந்த படத்தின் வெற்றி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விடும்.
ஆனால், அந்த திரைக்கதையை படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு இருந்தால் என்ன செய்ய முடியும்.
ஒரு பிராமணப் பையனும், பிராமணப் பெண்ணும், ரயில் பயணத்தில் முஸ்லிம் பெயரில் பயணிக்கும் போது காதல் வயப்படுகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் முஸ்லிம் என நினைத்து காதலைத் தொடர, அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ், இதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை.
இதை எப்படிப்பட்ட சுவாரசியத்துடனும், திருப்பங்களுடனும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டார் அறிமுக இயக்குனர் அனிஸ்.
நல்ல தயாரிப்பாளர், நல்ல நட்சத்திரங்கள் கிடைத்தும் திரைக்கதை வலுவாக இல்லாததால் இந்த ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திக்கித் திணறி திண்டாடுகிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் பட்டியலில் அனிஸும் இடம் பெற்று விட்டார்.
பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெய், ரயிலில் டிக்கட் கிடைக்காத காரணத்தால் பிளாக்கில் அபுபக்கர் என்ற பெயரில் டிக்கட் வாங்கிப் பயணிக்கிறார். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நஸ்ரியா, கம்பெனி வேலையாக ஆயிஷா என்ற முஸ்லிம் தோழி செல்ல முடியாத காரணத்தால் ஆயிஷா என்ற பெயரில் பயணிக்கிறார்.
அப்போது சக பயணி ஒருவரால் நஸ்ரியா தூங்கும் போது வீடியோ எடுக்க, அதைத் தடுத்து அந்த பயணியை பொலிசிடம் மாட்ட வைக்கிறார் ஜெய். பின்னர் இருவரும் சென்னை திரும்பியதும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஜெய் தன்னை அபுபக்கர் என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள, நஸ்ரியா, ஆயிஷா என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள காதல் நாடகம் ஆடுகிறார்கள்.
ஜெய், நஸ்ரியாவைக் காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் நஸ்ரியா தனக்கு காதலில் விருப்பமில்லை என்கிறார். பின்னர், தனக்குள்ளும் காதல் இருப்பதை உணர்ந்து ஜெய்யைக் காதலிக்கிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் மற்றவர் முஸ்லிம் அல்ல, பிராமணர் என்ற உண்மைத் தெரியவர வீட்டில் காதலைத் தெரியப்படுத்துகிறார்கள். குடும்பத்தினர் அவர்களிருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்க, ஏதோ ஒரு குற்ற உணர்வால் திருமணத்தன்று இருவருமே சேர்ந்து முடிவெடுத்து திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள், பிரிந்தும் விடுகிறார்கள்.
அதன் பின் ஜெய், நஸ்ரியா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
அட… இரண்டாவது பாதி கதையை கரெக்டாதான் சொல்லிட்டமா ? நாம சொன்னதுதான் சரியா, இல்லை இயக்குனர் வேற ஏதாவது நினைத்திருந்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இடைவேளைக்குப் பிறகு அவ்வளவு குழப்பமான புரியாத அளவிலான திரைக்கதை.
ஜெய், அப்படியே வந்து போகிறார். ஆரம்பக் காட்சியில் நஸ்ரியாவைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு நடிக்கிறார், அவ்வளவுதான். அதன் பின் தான் விஜயராகவாச்சாரி, அபுபக்கர் என்ற இரண்டு விதமான நடிப்பைத் தொடர வேண்டிய ஒரு சூழ்நிலை. இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் காட்ட வேண்டும் என்றெல்லாம் அவர் முயற்சிக்கவில்லை.
கொஞ்சம் அப்பாவித்தனத்துடனும், பயந்த சுபாவத்துடனும் அதே ‘எங்கேயும் எப்போதும்’ பார்த்த நடிப்பையே வெளிப்படுத்துகிறார். கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணுங்க பாஸ்.
இந்தப் படத்தில் நடித்த ராசியோ என்னமோ நஸ்ரியா, சீக்கிரமே கல்யாணம் ஆகிப் போகப் போறாங்க. விஷ்ணு ப்ரியா என்ற உண்மையான கதாபாத்திரப் பெயரை விட, ஆயிஷா என்ற பெயரில் மனதில் இடம் பிடித்து விடுகிறார். ஆனாலும், ஒரு குழப்பமான கதாபாத்திரத்தையே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இவர் எப்போது ஜெய்யைக் காதலிக்க ஆரம்பிக்கிறார், எதற்காக வேண்டாமென்று விலகிச் செல்கிறார், திரும்பவும் எங்கோ ஒரு இடத்தில் ‘அபுபக்கர்’ என்ற பெயரைக் கேட்டதுமே தனக்குள்ளும் அவர் மீது காதல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாரா என்பதெல்லாம் சரியாக விளங்கவில்லை. இரசிகர்கள் எதிர்பார்க்கும் துறு துறு நஸ்ரியாவில் பாதிதான் இந்தப் படத்தில் இருக்கிறார்.
சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஹெப்பா பட்டேல் அதிகமாகவே ஈர்க்கிறார். அதிக வசனங்கள் இல்லை, அதிக காட்சிகள் இல்லை, ஆனாலும் பார்வையாலேயே வீசும் அந்தக் காதல் பார்வை கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அடுத்த படத்திலாவது முழு கதாநாயகியாக ஜொலிக்கட்டும்.
மற்ற கதாபாத்திரத் தேர்வுகளில் யதார்த்தமான முகங்கள் நிறையவே உள்ளது. குறிப்பாக ஜெய், நஸ்ரியா இருவரது குடும்பத்தார்களும், ஹெப்பா பட்டேல் அப்பாவாக நடித்திருப்பருவம் அப்படியே பிராமண, முஸ்லிம் குடும்பத்தினரை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்று தனியாக யாருமேயில்லை. நகைச்சுவை இல்லாததும் குறையாகவே உள்ளது.
கொஞ்சம் தடுக்கி விழுந்தாலும் படத்தில் பாடல்களைப் போட்டு விடுவார்கள் போல. எத்தனை பாடல்கள் என கணக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு பாடல்கள் வந்து போகின்றன. ‘கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்’ பாடலும், படமாக்கிய விதமும் அருமை.
‘திருமணம் எனும் நிக்காஹ்’ – சைவ விருந்தும் இல்லை, அசைவ விருந்தும் இல்லை…!!
Average Rating