(படங்கள்) புங்குடுதீவு. புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை அவர்களுடன், ஓர் கலந்துரையாடல்…
சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை வணக்கத்துக்குரிய பாதர் சின்னத்துரை லியோஆம்ஸ்ரோங் அவர்களுடன் ஓர் கலந்துரையாடல்..
இச்சந்திப்பில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிற்சர்லாந்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், ஆலோசனைச் சபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்
28.09.2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் பக்தர்கள் மாலை அணிவித்து, குத்து விளக்கேற்றி, ஆராத்தி எடுத்து தந்தையை உள்ளே அழைத்து வந்தனர்.
பின்னர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டதோடல்லாமல் பொன்னாடை போர்த்தி மகிழ்வித்து ஆசியும் பெற்றனர்.
மதிய உணவின் பின்னர் திரு. பெஞ்சமின் அவர்கள்; தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது.
“குறைந்தளவு மக்கள் தான் வந்ததாக குறைபட்டுக் கொண்டாலும், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திற்கு நேற்றுத் தான் அறிவித்திருந்த போதிலும் ஒன்றியத்தினர் வந்து சிறப்பித்ததையிட்டு மகிழ்ந்தார்.
நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித சவேரியார் ஆலயத்தை திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டு நிறைவேற்றியமைக்கான நன்றிப் பெருக்குவிழா இதுவென்று” கூறி தனதுரையை நிறைத்தார்.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர் திரு. இராசமாணிக்கம் இரவீந்திரன் அவர்கள், செயலாளர் திரு.தர்மலிங்கம் தங்கராஜா அவர்கள், உபதலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், பொருளாளர் திரு. சத்தியநாதன் இரமணதாஸ் அவர்கள் தங்கள் கருத்தாக
“ஆலயங்களுக்கோ, தேவாலயங்களுக்கோ தற்போதைய நிலையில் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” பங்களிப்பு எதுவும் செய்யாது என்றும், ஆயினும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் முடிந்தளவு உதவிகள் செய்வோம் என்றும், இடப்பெயர்வின் போது மனிதாபிமானப் பணியை செய்துள்ளோம்” என்றும் கூறினாரகள்.
“பாடசாலைகள், வைத்தியசாலை போன்றவற்றுக்கு எம்மால் முடிந்த உதவி செய்துள்ளோம், தற்போது சர்வோதயம் கேட்டதற்கிணங்க ஆறாயிரம் லீட்டர் கொள்ளக்கூடிய நீர் வழங்கும் வாகனம் (அடுத்த வாரமளவில்) ஒன்றை வாங்குவதற்கு உதவியுள்ளதோடு மட்டுமல்லாமல், பாதர் அவர்களால் வைக்கப்படும் ஊர் சார்ந்த செயற் திட்டங்களுக்கு உதவி செய்வோம்” என்று தெரிவித்திருந்தனர்.
“அத்தோடு மாநில ரீதியாக மக்களைச் சந்தித்து உறுப்பினர்களை நிறைய உள்வாங்கி மக்களின் ஆதரவோடு பாரிய திட்டங்களை செய்ய எண்ணியுள்ளதாகவும்,
அதன் அடுத்த கட்டமாக ஒல்ரன் மாநிலத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வரும் புங்குடுதீவு மக்களை நாளை (இன்று) 29.06.2014 சந்திக்கவுள்ளதாக” தெரிவித்தார்கள்.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆலோசனைச் சபை உறுப்பினர்களில் ஒருவராகிய திரு. செல்வரெத்தினம் சுரேஸ் அவர்கள் தமதுரையில்,
“லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் உதவியில், புங்குடுதீவில் ஆயிரம் தென்னங்கன்றுகள் நாட்டிய பணிக்காகவும், தமிழர் பண்பாட்டின் அடையாளமான தைப்பொங்கல் விழாவை புனித சவேரியார் ஆலயத்தில் நடாத்தியிருந்தமை மிகப் பெரிய விசயம் என பாதர் அவர்களுக்குப் பாராட்டை அள்ளி வழங்கினார்.
இனிவரும் காலங்களில் பாதர் அவர்களுடன் இணைந்து புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் பல பணிகளை செய்யக் காத்திருக்கிறது. அதற்கு எல்லா மக்களும் இணைந்து செயற்பட வேண்டுமெனக்” கூறியிருந்தார்.
அங்கு வந்திருந்த மக்கள் மட்டுமல்ல, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் “தனிப்பட்ட ரீதியில்” தங்கள் நிதிப் பங்களிப்பை புனித சவேரியார் ஆலயத் திருப்பணிக்காக வழங்கிச் சிறப்பித்தனர்.
அத்துடன் அங்குள்ள இடுகாட்டை புதுப்பித்து, பாதுகாக்க வேண்டும் எனவும் ஜேர்மனியிலிருந்து கலந்து கொண்ட வின்சன் பெர்னான்டோ குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.
ஆலய திருப்பணிக்காகவும், இடுகாடு புதுப்பித்தலுக்காகவும் ஐந்நூறு யூரோக்களையும் வழங்கிச் சென்றனர்.
இறுதியாக, புங்குடுதீவு புனிதசவேரியார் ஆலயத்தின் பங்குத் தந்தை வணக்கத்துக்குரிய பாதர் சின்னையா லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் தமது ஏற்புரையில்,
பொன்டை போர்த்தி மாலைஅணிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“மக்கள் ஒத்துழைப்புடன் சிறுசிறு பணிகளைச் செய்திருக்கிறோம்” என்று வினயத்துடன் கூறியிருந்தார்.
கல்வி கற்கும் மாணவரிலிருந்து கடற்றொழிலாளர் வரை உதவி செய்ய வேண்டிய சூழ் நிலையில் தான் இன்று புங்குடுதீவின் நிலையாக உள்ளதென்றார்.
சொந்தக் காணி இல்லாதவன்,சொந்த நிலமில்லாதவன் மனநிலை பாதிப்பிற்குள்ளாகிறான், இதை உடன் நிவர்த்தி செய்யத் தவறின் காலப்போக்கில் புங்குடுதீவு குற்றச் செயல்களின் முதன்மை இடமாக மாறிவிடக் கூடும் என மனம் வருந்தினார்.
அத்துடன் புங்குடுதீவின் கல்வி என்பது யாழிலிருந்து அல்லது நயினாதீவிலிருந்து தான் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் என்றும், அதிலும் போக்குவரத்தில் இரு மணிநேரம் கழிந்து விடுவதால் ஆறு பாடத்தில் நாலுபாடம் தான் அவர்களால் போதிக்கப்படுகிறது என்றும் கவலை கொண்டார்.
முன் பள்ளிகளின் நிலைமையோ போதுமான வசதியின்மையோடு தான் இருப்பதாகவும் அதில் கவனம் எடுங்கள் எனவும் கூறினார். ஆரம்பமே வெறுப்பென்றால் முடிவும் வெறுப்பாகத்தான் போய்விடும் எனவே முன்பள்ளிகளில் அதிககவனம் எடுக்கும்படி கூறினார். முன்பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி கொடுத்து வளமாக்க நிறையப் பணம் தேவை என்றார்.
எத்தனை பௌஸர் இருந்தாலும் சாட்டியிலும் தண்ணீர் கஸ்டம் தான் என்றார். சாட்டியிலும் எத்தனை நாளைக்குத் தான் தண்ணீர் எடுக்கமுடியும். மண் வளமானால் தான் மக்கள் வளமாவார்கள் என்றார்.
புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தான் “வன்னியில் வாழும் மக்களையும்” ஆதரிக்க வேண்டுமென்றார்.
கத்தோலிக்க மக்களுக்கான கருத்துக்களையும் ஆலயத்தின் இன்றைய நிலையினையும் எடுத்துக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இவ்வண்ணம்
திரு.தர்மலிங்கம் தங்கராஜா (பீல் மதி)
செயலாளர் – சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
தகவல்….
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்)
உபதலைவர் & ஊடகப் பொறுப்பாளர்
-சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
Average Rating