மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது
குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்லவபிட்டிய மற்றும் நகரிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொக்கரெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இப்பாகமுவ, பன்னல ஆகிய பகுதிகளில்
இரு பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அத்துடன் இப்பாகமுவ தெகல்கொடை பகுதியில் முஸ்லிம் கடை தொகுதி ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல்களின் போது பள்ளிவாசல்களினதும் கடைகளினதும் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
நேற்று முன் தினம் இரவு 7.00 மணியளவில் குருணாகல்-தம்புள்ளை பிரதான வீதியில் உள்ள கொக்கரெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இப்பாகமுவ பன்னல பள்ளிவாசல் மீதும் இப்பாகமுவ, தெகல்கமுவ பகுதிகளிலுள்ள கடைத்தொகுதி மீதும் மதுபோதையில் வந்த குழுவினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
பன்னல பகுதியில் வீதியோரம் உள்ள பள்ளிவாசல் மீது மது போதையில் வந்த சுமார் 15 பேர் கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பள்ளிவாசலின் முன்பக்க கண்ணாடிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.
அதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற குறித்த குழுவினர் குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியில் இப்பாகமுவ சந்தியில் உள்ள கடை தொகுதியிலுள்ள முஸ்லிம் கடைகளை உடன் மூடுமாறு கூச்சலிட்டுள்ளனர்.
இதன் போது அந்த பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஏன் கடைகளை மூடவேண்டும் என குறித்த குழுவினரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனையடுத்து அக்குழுவினர் மேலும் கூச்சலிட்ட வண்ணம் கடைகள் மீது கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கடைகளின் முன்பக்க கண்ணாடிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடாந்து அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
சம்பவத்தை அடுத்து பிரதேச வாழ் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியதுடன் அப்பிரதேசமெங்கும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அதனையடுத்து கொககரெல்ல பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் இப்பாகமுவ பிரதேச சபை தவிசாளர் டீ.ஜே.சுமித் ஆகியோரும் ஸ்தலத்துக்கு சென்று பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் விதமாக பொலிஸாருடன் கலந்துரையாடினர்.
தமது ஊரினை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீதும் தாக்குதல் இதனிடையே குருணாகல் – கண்டி பிரதான வீதியுஇல் உள்ள மல்லவபிட்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீதும் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசலுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இருவரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எவ்வாறாயினும் இவ்விரு சம்பவங்களுடனும் தொடர்புடைய நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
மது போதையில் இவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் வேறு ஏதும் உள் நோக்கம் கிடையாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்பவத்திலும் குருணாகல் பகுதி சம்பவத்திலும் தொடர்புடையவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேர்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குடித்துவிட்டே இவர்கள் கூச்சலிட்டு இந்த செயலை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் விசாரணைகளை பொலிஸார் தொடர்வதாக குறிப்பிட்டார்.
இவ்விரு சம்பவங்களை அடுத்து குருணாகல் மாவட்டதுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் விஷேட அறிவித்தலின் பிரகாரம் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Average Rating